இத்தாலியினபுதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுத் திங்கட் கிழமை தொடங்கியது. தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லாவின் பதவிக்கால (03.02.2022) நிறைவில், புதிய தலைவரைத் தெடுக்கும் இத் தேர்தர்தல், மிகுந்த சிக்கலான காலமொன்றில் நிகழ்வாதகவே பலரும் கருதுகின்றனர்.
இத்தாலியின் புதிய ஜனாதிபதிக்கான போட்டியில், பிரதம மந்திரி மரியோ டிராகி, பில்லியனரும் முன்னாள் பிரதமருமான சில்வியோ பெர்லுஸ்கோனி, Forza Italia கட்சி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி, முன்னாள் கீழ்சபை சபாநாயகர் பியர் ஃபெர்டினாண்டோ காசினி, ஐரோப்பிய ஒன்றிய ஆணையரும் முன்னாள் பிரதமருமான பாவ்லோ ஜென்டிலோனி, முன்னாள் சோசலிஸ்ட் பிரதமர் கியுலியானோ அமடோ மற்றும் நீதி அமைச்சர் மார்டா கார்டாபியா எனப் பலரும் இந்தப் பதவிக்கான விருப்பத்தினைத் தெரிவித்திருந்த போதிலும், சில்வியோ பெர்லுஸ்கோனி கடந்த சனிக்கிழமை தன் விருப்பத்தை விலகிக் கொண்டார்.
பெர்லூஸ்கோனியின் ஊடக மற்றும் பொருளாதார பலங்கள், இத்தாலிய அரசியலில் இன்னமும் அவரை வலுவிழக்காமல் வைத்திருக்கின்ற போதிலும், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சட்டநடவடிக்கைகள் அவருக்கு தலைவர் போட்டிக்கான தகுதியை வழங்குமா என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. இந்நிலையில் 85 வயதான அவர், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, இந்தப் போட்டிக்கான விருப்பத்தினை விலக்கிக் கொண்டார்.
பிரதமர் மரியோ டிராகி அதிபராகும் விருப்பத்தைத் தெரிவித்திருந்த போதும், டிராகியின் கீழ் இத்தாலியின் பொருளாதாரம் ஒரு ஸ்திரநிலையில் திரும்பியுள்ளது. ஆனால் ஜனாதிபதி பதவிக்கான அவரது நகர்வு, தொற்றுநோய்க்கு பிந்தைய மீட்பினை திடீரென நிறுத்திவிடலாம் என்ற கவலையை பல தரப்பிலும் தூண்டியுள்ளது.
அரசியல் நெருக்கடிகளின் போது அரச தலைவர் கணிசமான அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தை கலைப்பது முதல் புதிய பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பலவீனமான கூட்டணிகளுக்கான கட்டளைகளை மறுப்பது வரையிலான அதிகாரங்கள் உண்டாயினும் இத்தாலியின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் சம்பிரதாயமானது.
முந்தைய அரசியற் கூட்டணி சரிந்தபோது தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா, டிராகியை பதவியேற்க வைத்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பேரழிவிலிருந்து இத்தாலி மீண்டு வருவதற்கு அவரது நியமனம் பெரிதும் உதவியது. இந்நிலையில் அவர் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவது குழப்பத்தைத் தூண்டும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
டிராகியின் கூட்டணியில் உள்ள வேறுபட்ட கட்சிகள் ஏற்கனவே குழப்ப நிலையில் இருப்பதால், நிலவும் உறுதியற்ற தன்மையில் டிராகியின் பிரதமர் பதவித் துறப்பு ஐரோப்பிய மீட்பு நிதிகளை ஆபத்தில் ஆழ்த்தலாம் என வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
"இது ஒரு முக்கிய மற்றும் மிகவும் சிக்கலான தேர்தல், ஏனெனில் அரசியல் கட்சிகள் பலவீனமாக இருப்பதால், அவை முற்றிலும் துண்டு துண்டான நிலையில் உள்ளன" என்று ரோமில் உள்ள லூயிஸ் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட்டின் தலைவர் ஜியோவானி ஓர்சினா AFP செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இத்தாலி ஒரு மோசமான நிலையற்ற தேர்தல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டஜன் கணக்கான அரசாங்கங்கள் வந்து சென்றுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மேட்டரெல்லா தனது ஏழு வருட பதவிக்காலத்தில் ஐந்து பிரதமர்களை கண்டுள்ளார். இந்நிலையில் இத்தாலியின் குழப்பகரமான அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க ஐக்கிய அரசாங்கத்திற்கு டிராகி தலைமை தாங்குகின்றார் என்பது அவரது ஆளுமை.
அந்த ஆளுமையால், ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நிலைக்களமான இத்தாலி, தொற்றுநோயால் தூண்டப்பட்ட 2020 இல் தண்டனைக்குரிய மந்தநிலையைத் தொடர்ந்து வளர்ச்சிக்குத் திரும்பியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தொற்றுநோய்க்கு பிந்தைய மீட்பு திட்டத்தில் இருந்து நிதிக்கு ஈடாக டிராகி முக்கிய சீர்திருத்தங்களை தொடங்கியுள்ளார். டிராகி பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகினால், கடனில் மூழ்கியிருக்கும் இத்தாலி இறுக்கமான சீர்திருத்த அட்டவணையில் பின்தங்கிவிடும் என்று பல சர்வதேச முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
74 வயதான டிராகி, கடன் நெருக்கடியிலிருந்து யூரோவைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர், அதே நேரத்தில் ECB தலைவர், ரோமின் குய்ரினாலே ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் அமைதியாக இருந்தார்.
எவ்வாறாயினும், பெரும்பான்மையான இத்தாலியர்களில் 70 வீதமானவர்கள், டிராகி னாதிபதி பதவியை ஏற்காது, பிரதம மந்திரியாக இருக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
1,000 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், செனட்டர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகளால் நடத்தப்படும் ரகசிய வாக்கெடுப்பின் முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. புதிய அதிபருக்கான முதல் நாள் வாக்கெடுப்பில், வாக்களித்த சுமார் 1,000 எம்.பி.க்கள், செனட்டர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகளில் 672 பேர் தங்கள் வாக்குகளை காலியாக விட்டுவிட்டுள்ளனர். முக்கிய கட்சிகளுக்கு இடையே ஒரு வேட்பாளர் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், 85 வயதான முன்னாள் நீதிபதி பாவ்லோ மடலேனா 36 வாக்குகளுடன் களத்தில் முன்னிலை வகிக்கின்றார்.
வெற்றியைப் பெற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இரண்டாவது சுற்றுக்கு நகர்கிறது. முதல் மூன்று சுற்று வாக்கெடுப்புகளுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தொடர்ந்தும் தேவைப்படுவதால், விரைவில் எந்த முடிவும் ஏற்பட வாய்ப்பில்லை.
நேற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, தற்போதைய பிரதமர் அரசியல் தலைவர்களிடம், “உங்கள் விருப்பம் என்ன, நாட்டுக்காக எனது பங்கு குறித்து உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?” என்று கேட்தாகச் செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மாலையில் இதற்கான விடையும், இத்தாலியின் அடுத்த அதிபர் யார் என்பதும் தெரிந்துவிடக் கூடும். ஆனால் வாக்களிப்பின் இரகசியத் தன்மை, திரைக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் முறையான வேட்பாளர் பட்டியல் இல்லாமை ஆகியவை இத்தாலிய அடுத்த அதிபர் தெரிவை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை போப்பாண்டவர் தெரிவின்போதான 'வெள்ளை' மற்றும் 'கருப்பு புகை' பற்றிய வர்ணனைகளுடன் இத்தாலிய ஊடகங்கள் விவரிக்கின்றன.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்