கோவிட் பெருந்தொற்றுக் காரணமான சீனா; என்று பெரும் அரசியற் தலைவர்கள் முதல் பாமரர்கள் வரை மிகச் சாதாரணமாக விமர்சனம் செய்து கடக்கும் சமகாலத்தில், கோவிட் - 19 பெருந்தொற்றைக் கடந்து, உலகளாவிய ஒரு பெரும் விளையாட்டுப் போட்டியினைச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது சீனா.
சீனாவில் நடந்து முடிந்திருக்கும் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், நோர்வே முதலான பல நாடுகள் விளையாட்டில் தமது சாதனையை நிலைநிறுத்தியிருக்க, வலுவிலும், வளத்திலும், அசைக்க முடியாத பெருஞ்சக்தியாகத் தன்னை நிறுவி நிற்கின்றது சீனா.
2022 பெப்ரவரி 04ந் திகதி, சீனத் தலைநகர் பெய்ஜிங்(Beijing)நகரின் BIRD’S NEST மைதானத்தில் ஆரம்பமான போட்டிகள், சீனாவிலுள்ள யாங்கிங் (Yanqing), ஜாங்சியாகவ் (Zhangjiakou) ஆகிய பகுதிகளிலுள்ள குளிர்காலச் சிறப்பு மைதானங்களிலும் நடந்து, பெப்ரவரி 20ந்திகதி மீண்டும் தலைநகர் பீஜிங்கில் நிறைவுவிழா நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றிருக்கிறது.
2008 ல் இடம்பெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை உலகம் பிரமிக்கும் வகையில் நடத்தி முடித்திருந்த சீனா, தற்போது 24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையும் சிறப்பாக நடத்தி முடித்த பெருமையை தனதாக்கியுள்ளது.
பல இராஜதந்திர சிக்கல்கள், தொடரும் கொவிட் பெரும் தொற்று என்பவற்றுக்கு மத்தியில் நடந்த இந்த குளிர்கால ஒலம்பிக் போட்டிகளின் தொடக்க விழா, 1970 களில் இடம்பெற்ற சீன கலாசாரப் புரட்சியின் போது அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் வகையில், அமைந்திருந்ததாக அவதானிகள் தெரிவித்திருந்திருந்தனர்.
மாவோ சேதுங்கைப் போலவே ஆளுமைமிக்க தலைவராக தன்னை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனும் எண்ணம் மிக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடத்தப்பட்ட இப்போட்டி நிகழ்வின் தொடக்கம் மற்றும் நிறைவு நிகழ்வுகளில், 'ஒரே உலகம் ஒரே குடும்பம்' (One belt One road) என்கிற சீன கொமியூனிஸ்ட் கட்சியின் கருப்பொருளை மையப்படுத்தியே நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2008 ல் இடம்பெற்ற கோடைகால ஓலம்பிக் போட்டிக்களின் தொடக்க விழா நிகழ்சிகள் உலகை வியந்து பார்க்க வைத்திருந்தன. அந்நிகழ்வுகளை வடிவமைத்திருந்தவர், சீனாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜாங் யிமோ(Zhang Yimou). அரே மீண்டும் 2022 குளிர்காலப் போட்டிகளின் கலை இயக்குநராக இருந்து கலை நிகழ்ச்சிகளை சிறப்புற வடிவமைத்திருந்தார். நிகழ்வுகளின் ஒவ்வொரு சிறு விடயங்களையும், அழகியலும் நுட்பமும் இணைந்து மெருகுற அவர் அமைத்திருந்தார்.
கோவிட்டுக்கு எதிரான சீனாவின் தடுப்பூசிகள் பயனற்றவை எனும் மேற்குலகின் பரப்புரைகளை முறியடிக்க, சீனா தனது நாட்டினுள் கோவிட் பெருந்தொற்று அச்சம் நீக்கியுள்ள நிலைமையை, 15,000 பார்வையாளர்களுடன், ஆரம்ப நிகழ்வுகளை நடத்திக் காட்டியுள்ளது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், உலகம் பூராவும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் பெற்றபோது, அது சீனாவிற்றகான மிகப்பெரிய பரப்புரையாக அமைந்திருந்தது.
கோவிட் பெருந் தொற்றால் ஏற்பட்ட ஒன்றரை நூற்றாண்டுகால பொருளாதார போராட்டம், சவால்கள் என்பவற்றைக் கடந்து, மீண்டும் செல்வம் கொழிக்கும் நாடாகவும், உலக அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தும் நாடாகவும் சீனா உள்ளது என்பதை 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் வழி நிரூபித்து நிற்கின்றது.
-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்