சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.
சென்ற ஆண்டின் இறுதியில் மருத்துவமனைகள் மற்றும் வசதிகளில் பெரும் பற்றாக்குறை அல்லது தேவை ஏற்படலாமென்ற நிலையில், மத்திய கூட்டாட்சி அரசுக்கு, வல்லுநர்கள் பலமான எச்சரிக்கைகளை வழங்கி, கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கினார்கள்.
இவற்றின் காரணமாக படிப்படியான முன்னேற்றம் காண்கையில், சென்ற ஏப்ரல் 19 ந் திகதி முதற்கட்டத் தளர்வு நடவடிக்கைகளாக, வெளிப்புற உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறப்பது உட்பட சில நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டத்தில், சுவிஸ் கோவிட் -19 பணிக்குழு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், சுவிற்சர்லாந்து ஒரு நாளைக்கு 10,000 நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்தது.
ஆனால் இந்த மாற்றங்களும் தளர்வுகளும் நடந்த இரண்டுவாரங்களின் பின், உண்மையில், தற்போது தொற்று எண்கள் குறைந்து வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 2,000 க்கு மேல் இருந்த எண்ணிக்கை தற்போது 2,000 க்கு கீழ் இறங்கியுள்ளது. , மக்கள் தொகையில் வைரஸ் எவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதைக் குறிக்கும் ஆர்-வீதமும் 1 க்குக் கீழே வந்துள்ளது. அதேபோல், கோவிட் தொடர்பாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் இறப்புகளும் கூட குறைந்துவிட்டன.
சுவிட்சர்லாந்தின் தொற்றுநோயியல் நிலைமையில் இந் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது..?
இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவதாக நாட்டின் மக்கள்தொகையில் கனிசமானவர்களின் நல்ல நடத்தை. அடுத்து பருவ கால நிலை மாற்றம். வெப்பமான காலநிலையில் மக்கள் வெளியில் அதிக நேரம் செலவிடுவதனால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன என்பவற்றுடன் மிக முக்கியமான காரணம், தடுப்பூசிகள்.
சுவிற்சர்லாந்தின் மொத்த மக்கள்தொகையில், இதுவரை 11 சதவிகிதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் சுவிற்சர்லாந்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் கோடைகாலத்திற்கு முன் மேலும் 8 மில்லியன் டோஸ்கள் வருவதால், தடுப்பூசி போடுவதற்கான வேகத்தை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தனர்.
இதில் மற்றுமொரு முக்கியமான விடயம் என்னவெனில், சுவிற்சர்லாந்து பயன்படுத்தும் தடுப்பூசிகளும் சிறப்பானவை. மாடர்னா மற்றும் ஃபைசர் / பயோன்டெக், இவை இரண்டும் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் வைரஸின் புதிய மாறுபாடுகளுக்கு எதிராக செயல்படுகின்றன என்கிறார், சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயெதிர்ப்பு நிபுணர் ஸ்டீவ் பாஸ்கோலோ.
அவர் மேலும் கூறுகையில், “ நம்முடைய அதே அளவிலான நாடு இஸ்ரேல். இந்த வகை தடுப்பூசிகளைப் பயன்படுத்தியது மற்றும் கடந்த ஒரு மாதமாக இயல்புநிலைக்கு திரும்புவதை அனுபவித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியா உட்பட உலகின் சில பகுதிகளில் கோவிட் வகைகள் அழிவை ஏற்படுத்தி வருகின்றன ” என்றார்.
தொற்றுக்கள் குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணம், மார்ச் நடுப்பகுதியில் இருந்து, கொரோனா வைரஸ் சோதனைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு இடத்திலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 7ந் திகதி முதல் சுவிஸ் மருந்தகங்களில் இலவச ‘சுய சோதனைகள்’ கருவிகளும் கிடைக்கின்றன. இதனால் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டு, அதிகமான நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டால், மற்றவர்கள் வைரஸை பரப்புவதற்கு முன்பு மக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதும் முக்கியமானதாகும்.
மேற்குறித்த அனைத்துக் காரணிகளாலும், சுவிற்சர்லாந்தில் கோவிட் தொற்றுக்கள் குறைந்து வருகின்றன. இதையே பெடரல் ஆஃபீஸ் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (FOPH) எனும் மத்திய கூட்டாட்சியின் சுகாதார தலைமையகத்தின் நெருக்கடி நிலைப் பிரிவின் தலைவரான பேட்ரிக் மாத்திஸ் “நல்ல பல காரணங்களால் நாம் எச்சரிக்கையுடனும், நம்பிக்கையுடனும் இருக்க முடிகிறது ” என்று அறிவித்தார்.