free website hit counter

வளமான சிந்தனைகளை வரவேற்கின்றோம் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலக வரலாற்றிலும், நடைமுறை வாழ்க்கையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் நேரம் இது. இனிவரும் காலங்களில் கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்குப் பின் என அழைக்கத்தக்க வகையில் உலகைப் புரட்டிப் போட்டிருக்கிறது இந்தக் கோரோனாக் காலம்.

இதில் அகப்படாத மனிதர்கள் இல்லை, ஆட்டங்காணாத நிறுவனங்களும், அமைப்புக்களும், ஏன் அரசுகளும் கூட இல்லை எனலாம். பேரிடர் என்பதற்கான முழுமையான தாத்பரியத்தை ஒவ்வொரு மனிதரின் முகங்களிலும் ஓங்கி அறைந்து சொல்லும் காலமிது.

இந்தக் காலத்தில் உலகின் எல்லாத்துறைகளுமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், ஊடகத்துறையும் அதற்கு அப்பாற்பட்டிருக்கவில்லை. சம காலத்தில் இணையமும், அது சார்ந்த வணிகமும், எழுச்சியுற்றிருக்கின்ற போதிலும், அந்தளவிற்கு இணைய ஊடகத்துறை வளர்ச்சி பெற்றிருப்பதாகச் சொல்வதற்கில்லை. மாறாக, சமூக ஊடகங்கள் இணையத்தை குப்பைமேடாக மாற்றி வரும் நிலையில், சமூகச் சூழலில் அறம் சார்ந்து இயங்கும் ஊடகங்களின் தேவை மேலும் அவசியமாகிறது.

காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகித்து நிற்கும், சமூக ஊடகங்களின் சகதிகளுக்குள் நின்று கொண்டேதான் சமூக நலன்குறித்த சிந்தனையோடு பயணிக்கவும், பணியாற்றவும் வேண்டிய தேவை, பொறுப்பு மிகு ஊடகங்களிடம் உள்ளது.இநதப் பொறுப்பினை ஆற்ற வேண்டிய ஊடகப் பெருநிறுவனங்களே பேரிடர் காரணமாக அல்லாடிப் போயிருக்கின்ற நிலையில், இலாப நோக்கற்ற செயல் அமைவுகளுடன் இயங்கும் 4தமிழ்மீடியாவின் நிலை எவ்வாறிருக்கும் என்பது எண்ணிப் பார்க்க வேண்டியது.

4தமிழ்மீடியாவின் தோற்றமும், 12 ஆண்டு கால வளர்ச்சியும், அதன் அறநிலைக் கோட்பாடுகளும், தனித்துவமான தார்மீகப் பண்புகளால் எழுதப்பெற்றது என்பதனை, எமைத் தொடரும் வாசகர்கள் நன்கறிவர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காது, நாம் வீழ்ந்துவிடாது பயணிப்பது எப்படி என்ற சிந்தனையின் போது, எம்மோடு இணைந்துள்ளார்கள், ஊடக அறிவும், உளமார்ந்த மக்கள் நலன் விருப்பும் மிக்க இளைஞர்கள்.

இளைஞர்களின் எண்ணங்களும், அவற்றுக்கான செயல்வேகமும் அபாரமானவை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை என்றும் எமக்குள்ளது. அந்த நம்பிக்கையின் வழியே இவ்வளவு காலமும் கடந்து வந்திருக்கின்றோம். அதன்படியே இனியும் நடக்காலம் எனும் நம்பிக்கையை தந்திருக்கும் அந்த இளைஞர்களுடன் இணைந்து இன்று முதல், புதிய சிந்தனைகளுடனும், புதிய வடிவமைப்புடனும், அறம்சார் அர்ப்பணிப்புடன் உற்சாகமாக உறவாட வருகின்றோம். உங்கள் வளமான சிந்தனைகளையும் வரவேற்கின்றோம் !.

- என்றும் மாறா இனிய அன்புடன்
மலைநாடான்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula