தமிழகத் தேர்தல் முடிந்த பின்னாலும், தமிழக அரசியற் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்கள் சுவாரசியமாக நடைபெறுகிறது. கவனித்த வரையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் செய்த முக்கியமான பணி, தமிழக பாஜக வில் அண்ணாமலை என்பவர் எக்காரணம் கொண்டும் மேலேறி வந்து விடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.
குறிப்பாக இங்கு இரண்டாம் கட்ட பாஜக தலைவர்கள் உருவாகி விடக்கூடாது என்பதில் திட்டமிட்டுச் செயலாற்றினார்கள்.
புதிய பதவிக்கு ஒருவர் வரும் போது அனைவரும் வாழ்த்து சொல்வது வழக்கம். ஆனால் அண்ணாமலை தலையில் வைக்கப்பட்டுள்ள கிரீடம் அல்ல. திருவண்ணாமலை மலை. அதனைச் சிவபெருமானின் பாதம் என்று நம்பிக்கை உள்ளவர்கள் சொல்கின்றார்கள். அண்ணாமலை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இங்கு அண்ணாமலை அவர்களுக்குச் சோதனைகள் மட்டுமே காத்திருக்கின்றது. கண்களுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் மரம் செடி சோலைவனம் எதுவும் இல்லை. ஆனால் பாலைவனத்தில் பூங்கா அமைக்கின்ற தொழில் நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஐம்பது வருட ஆலமரத்தில் புல் பூண்டு கூட முளைக்க முடியாத, முளைக்க விடாத கொடுமையான பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் அண்ணாமலை அவர்களுக்கு வயது உள்ளது. திறமை உள்ளது. ஆரோக்கியம் உள்ளது. நம்பிக்கை ஏராளமாக உள்ளது. ஒழுக்கம் என்பதே இங்குள்ள அரசியல் களத்தில் கெட்ட வார்த்தையாகப் பார்க்கப்படும் சூழலில் முதல் முறையாக சாதாரண மனிதராக தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை அவர்கள் அறிமுகம் ஆகப் போகின்றார்.
இதற்கு அப்பாற்பட்டு மத்திய பாஜக மேல் மட்ட அளவில் ஏராளமான முக்கியமான ஆளுமைகளின் ஆசி உள்ளது.
இங்கு நடப்பது அரசியல் அல்ல. அதிகாரத்தின் வழியாக அடுத்த பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிகழ்வு. இங்கிருந்து தான் இவர்களின் அதிகார வெறி எந்த அளவுக்கு இருக்கும். அதற்காக எந்த எல்லைக்குச் செல்வார்கள் என்பதனை அண்ணாமலை போன்றவர்கள் எளிதாக உணர்ந்தே இருக்கக்கூடும்.
அண்ணாமலையின் நியமனம், தமிழகத்தில் சிலருக்கு தேள் கொட்டியது போல் ஆகியிருக்கிறது. ஒருவகையில் அது தமிழகத்திற்கு நல்லதே எனும் நம்பிக்கையும் உள்ளது.
- 4தமிழ்மீடியாவிற்காக : திருப்பூர் ஜோதிஜி