அமேசன் இணைய ஒளிபரப்பு நிறுவனம், 'தி பேமிலி மேன் 2' என்கிற இந்திய இணையத் தொடரொன்றை ஒளிபரப்புகின்றது. அந்தத் தொடரின் முன்னோட்டத்தில் ஈழப் பெண் போராளியொருவரை தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் ஒருவராக சித்தரிக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. அந்தக் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையான சமந்தா நடித்திருக்கின்றார்.
தமிழ் தவிர்ந்து இந்தியாவிலிருந்து வெளிவரும் திரைப்படங்களில் ஈழத்து விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் காட்சிகள் பல தருணங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியத் திரைப்படங்களும், தொடர் நாடகங்களும், இணையத் தொடர்களும் அதிகமாக வில்லன்களாக முன்னிறுத்தியது பாகிஸ்தானையும், முஸ்லிம்களையுமாகவும். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுகின்றவர்கள் என்கிற தோரணை இந்தியப் படைப்புக்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறானதொரு நிலை, தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைக் குறித்தும் சித்தரிக்கும் நிகழ்ச்சி நிரலொன்று இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் போன்றதொரு இன அழிப்பின் கட்டங்களை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்து நின்றமை தொடர்பில் தமிழகம் தவிர்ந்து இந்தியாவில் பெரியளவில் யாருக்கும் தெரியாது. அடிப்படையில் உரிமைப் போராட்டங்களை தீவிரவாதமாக, பயங்கரவாதமாக முன்னிறுத்தும் இந்திய பெருந்தேசியவாதத்தின் விளைவாக அவை எழுந்திருக்கின்றன.
"அவ்வாறான நிலையில்தான், தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கமும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஏனெனில், ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத முனைப்பைக் கண்ட போது, அதனை பயிற்சி வழங்கி ஊக்குவித்துவிட்டது இந்திய மத்திய அரசு. ஆரம்ப கட்டங்களில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களது பயிற்சி முகாம்களை அமைத்திருந்தன. அரசியல் இராஜதந்திர ரீதியிலும் இந்தியாவின் முன்னணித் தலைவர்களும் ஈழ விடுதலைப் போராளிகளோடு தொடர்புகளைப் பேணியிருக்கிறார்கள். அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தின் தலைவர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து வந்தன. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னர், ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும், இயக்கங்கள் குறித்தும் எதிர்மறை எண்ணங்கள் விதைக்கப்பட்டன. அதுவரை விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக இயங்கிய தலைவரும், கட்சிகளும், பிரமுகர்களும் விலகிச் சென்றனர். குறிப்பாக, வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் போன்ற சிலரைத் தவிர ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இல்லையென்றது ஆனது."
அதுவும், முள்ளிவாய்க்காலுக்குள் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த போது, ஈழத் தமிழர்கள் குறித்த உரையாடல் என்பது ஒப்புக்கு என்றானது. அப்போதுதான், ஈழ விடுதலை, தமிழ் மக்கள் சந்தித்து நிற்கும் பேரழிவு குறித்த நாம் தமிழர் அமைப்பும், சீமானும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றனர். ஈழ மக்களை சிங்கள பேரினவாதத்தோடு இணைந்து எந்தெந்தச் சக்திகள் எல்லாமும் தோற்கடித்தன, எப்படி கருவறுத்தன என்று கூறின. அதுதான், நாம் தமிழர் இயக்கத்தையும், சீமானையும் நோக்கி ஈழத் தமிழர்கள் நெருங்குவதற்கு காரணமானது.
அதாவது, தமிழகத்தின் பல தலைவர்களும் ஈழ விடுதலை பற்றி ஒப்புக்காக பேசுவதோடு நிறுத்திவிட்டு, தங்களது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்த போது, ஈழ விடுதலையை தன்னுடைய கட்சியினது பிரதான பேசுபொருளாக வைத்திருக்கும் சீமானை நோக்கி ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகம் நெருங்குவது இயல்பானது. இன்றைக்கும் இந்தியாவிலும், அதற்கு வெளியிலும் முன்னெடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முதல் ஆளாக சீமான் குரல் கொடுக்கின்றார். 'தி பேமிலி மேன் 2' இணையத் தொடர் விவகாரத்திலும் அவரே முதல் ஆளாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கின்றார்.
தங்களுக்காகப் பேச வேண்டியவர்கள் என எதிர்பார்க்கும் பலரும் மௌனித்திருக்கையில் ஆமைக்கறி அளப்பறைகளையும் தாண்டிச் சீமான் எமக்காக பேசுகின்றார் என்பது அவர் குறித்த ஈர்ப்புக் காரணமாகின்றது. நாம் தமிழர் இயக்கம் மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆனால், அந்த விமர்சனங்களைத் தாண்டி ஈழத் தமிழ் மக்கள் சார்ந்து அவர்கள் கரிசனை கொண்டிருக்கும் செயற்பாடு என்பது, ஆதரவிழந்து நிற்கும் இனமொன்றுக்கு பெரும் ஆறுதல் என்று நம்புகின்றார்கள் அல்லது அதனை எதிர்பார்க்கின்றார்கள்.