சீனாவின் பெரு முதலீடுகளுடன் கொழும்புக் கடலில் முளைத்துள்ள கொழும்பு துறைமுக நகருக்கான அங்கீகாரம் இலங்கைப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுவிட்டது.
கொரோனா பெருந்தொற்றில் நாட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், பாராளுமன்றம் கூட்டப்பட்டு துறைமுக நகருக்கான ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் கிட்டத்தட்ட ஒரு தனிநாட்டுக்கு அண்மித்த அதிகாரங்களை துறைமுக நகர் கொண்டிருக்கும். கொழும்பு துறைமுக நகருக்கான ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஆட்சிக் கட்டமைப்பு பேண முடியும் என்கிற போதிலும், அதனால் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தலையீடுகள் எதனையும் துறைமுக நகருக்குள் செலுத்த முடியாது.
தெற்காசியாவிலேயே மிக முக்கிய துறைமுகமான கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடல் பகுதிக்குள் துறைமுக நகர் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி செயலகம், பிரதமரின் வதிவிடம் உள்ளிட்ட இலங்கை ஆட்சிக் கட்டமைப்பின் முக்கிய ஸ்தலங்கள் எல்லாமும் துறைமுக நகருக்கு சில கிலோ மீற்றர் தூரங்களுக்குள் வருகின்றன. அதிலும் குறிப்பாக காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள நிலப்பகுதி உள்ளிட்ட கொழும்பின் மையப்பகுதிகளின் முக்கிய இடங்களையெல்லாம் சீனா, 99 வருட கால குத்தகைக்கு பெற்று வருகின்றது. நாட்டின் ஆட்சி, நிர்வாகக் கட்டமைப்பின் மையப்பகுதிக்குள்ளேயே நிலப்பகுதிகள், இவ்வளவு நீண்ட காலத்துக்கு இன்னொரு நாட்டினால் குத்தகைக்கு பெறப்படுவது, அதாவது ஆட்சி செலுத்தப்படுவது என்பது மிக அச்சுறுத்தலானது.
சீனா போன்றதொரு நாட்டோடு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் அவ்வளவு இலகுவாக மீளப்பெற முடியாதது. ஏனெனில், பாரிய கடன்களை இலங்கைக்கு வழங்கி, அந்தப் பொறியில் வீழ்த்தியே சீனா நிலங்களைக் கொள்வனவு செய்து வருகின்றது. ஏற்கனவே, அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்டுவிட்டது.
இந்து – பசுபிக் சமுத்திர கப்பல் வழித்தடத்தில் கொழும்புத் துறைமுகமும், அண்மையில் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகமும் மிக முக்கியமானவை. இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆளுகைகளை இல்லாதொழித்து தன்னுடைய கொடியை நாட்டுவதற்கான முயற்சிகளின் போக்கில் சீனா ஏற்கனவே மாலைதீவில் பெரு முதலீடுகளைச் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. அப்படியாதொரு நிலையை இலங்கையிலும் பிரயோகித்து வெற்றி கண்டுவிட்டது. இதன்மூலம்,
இந்து – பசுபிக் சமுத்திர கப்பல் வழித்தடம் என்பது கிட்டத்தட்ட சீனாவின் கைகளுக்குள் சென்றுவிட்டது. ஏனெனில், ஆபிரிக்காவிலும் பெரும்பான்மையான நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் இருக்கின்றன. அந்த நாடுகளின் துறைமுக கட்டமைப்புத் தொடங்கி அனைத்துக் விடயங்களிலும் சீனாவின் தலையீடு என்பது சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு இருக்கின்றது.
சர்வதேச ரீதியில் கப்பல் போக்குவரத்து துறையில் சிங்கப்பூர் பிரதான இடத்தில் இருக்கின்றது. சிங்கப்பூரின் துறைமுகக் கட்டமைப்பு உயர்தரத்தில் பேணப்படுவதே அதன் காரணமாகும். தென் கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர் செலுத்திக் கொண்டிருக்கும் வகிபாகத்தை கொழும்புத் துறைமுகத்தின் பகுதிகளை தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வருவதன் மூலம் பெற முடியும் என்பது சீனாவின் நிலைப்பாடு. அதன் முக்கிய கட்டங்களை சீனா எப்போதே தாண்டிவிட்டது. அந்தப் பின்னணியில்தான், கொழும்புத் துறைமுக நகரை அது அமைக்க ஆரம்பித்தது. சிங்கப்பூரை ஒத்த வர்த்தக மையப்புள்ளியொன்றை இலங்கையில் துறைமுக நகரின் மூலம் சீனா திறக்கின்றது. அத்தோடு, துறைமுக நகரின் மூலம் தென் இந்தியாவில் முன்னெடுக்கப்படும் விடயங்களை இலகுவாக கண்காணிக்கும் நிலையங்களையும் சீனா வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
சீனாவின் பொருளாதார – சந்தைக் கட்டமைப்பிலேயே உலக நாடுகள் பெரும்பாலும் இன்றைக்கு தங்கியிருக்கின்றன. அமெரிக்கா முதல் ஐரோப்பிய நாடுகள் பூராவும் சீனா தன்னுடைய முதலீடுகளினால் நிறைக்கின்றது. அப்படியான நிலையில், இலங்கை போன்றதொரு நாட்டினை சீனா எப்படிக் கையாளும் என்பது வெள்ளிடை மலை.
தெற்காசியாவின் பெரிய அண்ணனாக இதுவரை காலமும் இந்தியா தன்னை முன்னிறுத்தி வந்திருக்கின்றது. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்ளை அதன் போக்கில் இன்னமும் நீடிக்கவும் செய்கின்றது. ஆனால், சீனாவோடு போட்டி போட்டுக் கொண்டு ஏனைய நாடுகளைக் கையாளும் அளவுக்கான நிதி வழங்கல் என்பது இந்தியாவிடம் இல்லை. அதனை ஒரு உத்தியாக இந்திய வெளிவிவகார கொள்கை இன்னமும் உள்வாங்கவும் இல்லை. இலங்கையில் சீனா நூறு ரூபாய்களை முதலிட்டல், இந்தியா ஒரு ரூபாயை முதலிடுகின்றது. இதுதான், இரண்டு நாடுகளும் இலங்கையில் செலுத்தும் தாக்கத்துக்கான அண்மைய உதாரணம்.
சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது கடன்கள், கொடைகள், முதலீடுகளை பிரதானப்படுத்தியது. அதன்மூலமே பிராந்திய – சர்வதேச உறவுகளைப் பேணுகின்றது. பாரம்பரிய உறவு, நல்லெண்ணம், பிராந்தியம் என்பதெல்லாம் இன்றைக்கு காலம் கடந்த வெளிவிவகார தொடர்பாடலாக மாறிவிட்ட பின்னணியில், பணம் என்பதே முதன்மை பெற்றிருக்கின்றது. அந்தக் கட்டத்தில், இந்தியாவினால் சீனாவோடு போட்டிபோட முடியவில்லை. அம்பாந்தோடைத் துறைமுக கடன் சுமை இலங்கையை அழுத்திய போது, அதனை இந்தியாவிடம் வழங்கவே முன்னைய ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். ஆனால், அதனைப் பெற்றுக்கொள்ள இந்தியா தயக்கம் காட்டியது. ஆனால், சீனா சில பேச்சுவார்த்தைகளிலேயே அம்பாந்தோட்டையைப் பெற்றுக் கொண்டது. இந்த நிலை, இனி திருகோணமலை துறைமுகம், காங்கேசங்துறை துறைமுகம் என்று விரிந்து இலங்கையின் வடக்கு – கிழக்கிலும் சீனாவின் காலுன்றலுக்கு வழி வகுக்கும். அப்போது, சீனாவின் கண்காணிப்புக் கரங்கள் தென் இந்தியாவை இன்னும் நெருக்கும்.
கொழும்புத் துறைமுக நகர் திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்னரேயே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, கடலுக்குள் மணலை நிரம்பி, கட்டுமானங்களை சீனா பாரியளவில் முன்னெடுக்கத் தொடங்கியதன் பின்னர்தான் இந்தியா அது குறித்து கரிசனை கொள்ளத் தொடங்கியது. அதிலும் இந்திய ஊடகங்கள், துறைமுக நகருக்கான அங்கீகாரம் சீனாவிடம் வழங்கப்பட்டுவிட்ட பின்னரே அது பற்றி பேசின. இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்று கதறின. அது காலங்கடந்துவிட்ட ஞானம். இனி அதனால் எந்தப் பயனும் இல்லை.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசின் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, இந்திய விமானங்கள் இலங்கை வான் பரப்பில் பறந்து உணவுப் பொட்டலங்களை வீசின. அந்த உணவுப் பொதிகள் தமிழ்மக்களின் பசி தீர்த்தன என்றில்லை. ஆனால் தமக்கான ஆதரவுச் சமிக்ஞையாக நம்பினர். அதில் ஒரளவு உண்மையும் இருந்தது. இந்தியா அந்த நடவடிக்கைக்கு வைத்த பெயர் "ஒப்ரேசன் பூமாலை". இப்போது சீனா விரித்திருக்கும் "முத்துமாலை" திட்டத்தில் இலங்கையின் கடல் பரப்பு கையகப்படுத்தப்பட்டுவிட்டதான் காட்சி படிவம்தான் கொழும்பு துறைமுக நகர்.
இது இலங்கைத் தமிழ்மக்கள் உள்ளிட்ட மக்களுக்கு எவ்விதமான சாதக பாதங்களைத் தரலாம் என்பது குறித்தான பார்வையினை பிறிதொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.