free website hit counter

வரம் தந்த சாமிக்கு..!

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் இணைய உலக அறிமுகமென்பது எனக்குக் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தான் கிடைத்தது. முதல் வருடத்தில் வேர்ட்ப்ரஸ் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டும் செயல்பட்டு வந்தேன்.

நான் எழுதிக் கொண்டிருந்த பதிவுகளுக்காக மட்டுமே அதனைப் பயன்படுத்தி வந்தேன். முதல் வருடத்தின் பாதியில் தான் நண்பர் மூலம் ப்ளாக்கர் வசதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ப்ளாக்கரில் பதிவுகள் எழுதத் தொடங்கிய பின்பே எனக்கென்று வாசகர் வட்டம் உருவாகத் தொடங்கியது.

தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்த போது எழுத்துலகம் தொடர்பாக என்னால் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடிந்தது. அதன் பிறகே பலதரப்பட்ட விசயங்களை எழுத முடிந்தது. மற்றவர்கள் எழுதத் தயங்கும் ஏனைய துறை சார்ந்து என் கவனம் செல்லத் தொடங்கிய போது தான் தமிழ் இணையத்தின் உண்மையான பயணம் எனக்குக் கிடைக்கத் தொடங்கியது. இதன் பிறகே இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இணையப் பத்திரிக்கைகளின் மேல் என் கவனம் திரும்பியது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையிலும் தினந்தோறும் அதிகாலையில் வீட்டில் வந்து விழும் தினசரிகளும் அருகே உள்ள கடைகளில் கிடைக்கும் வார இதழ்கள் என்பது என் வாசிப்த் தீனிக்குப் போதுமானதாக இல்லை. அச்சு ஊடகத்தைத் தாண்டி உலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அந்தந்த சமயத்தில் தெரிந்து கொள்ள இணைய உலகம் எனக்கு உதவியாய் இருந்தது.

திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் இருக்கும் காரணத்தாலும், கணினியுடன் நாள் முழுக்க உறவாட வேண்டிய அவசியம் இருப்பதாலும் இணைய வசதிகள் எனக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது.

தற்பொழுது தமிழ்நாட்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையும் அவரவர் பாணியில் இணையத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் இது போன்ற தினசரி மற்றும் வார, மாத பத்திரிக்கைக்குப் பின்னால் உள்ள அரசியல் புரிந்துணர்வுகளை நம்மால் அடையாளம் கண்டு கொள்ளத் தொடங்கும் போது வந்த செய்திகளுக்கும் நடந்த உண்மைகளுக்கும் உள்ள இடைவெளியை நம்மால் எளிதில் கண்டு கொள்ள முடிகின்றது. நம்பகத்தன்மை இல்லாத தொழிலும் சரி, நம்பிக்கையை உருவாக்காத எழுத்தும் சரி விழலுக்கு இறைத்த நீரே.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலுக்கென்ற ஒரு பாணி உள்ளது. இதே போல இங்கே ஒவ்வொரு துறைக்கு வெவ்வேறு விதமான அரசியல் உள்ளது. திருவாளர் பொதுஜனம் பார்வையில் அரசியல் என்பது ஒரு சாக்கடை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இந்திய மக்கள் எல்லோருமே, இந்தச் சாக்கடை வாசத்தை  இயல்பானதாக எடுத்துக் கொண்டு வாழப் பழகி விட்டனர். இதே வாசம் தான் பத்திரிக்கை, ஆன்மீகம், தனி மனித ஒழுக்கம் என்று எல்லா இடத்திலும் பரவி கிடக்கின்றது.

ஒவ்வொரு இடத்திலும் ஒரு வட்டம். வட்டத்திற்குள் ராஜாவாகக் கோலோச்சி கொண்டிருப்பவர்கள் மட்டுமே அவர்கள் போட்டு வைத்துள்ள வட்டத்திற்குள் எவரை உள்ளே அனுமதிக்க வேண்டும்? எவரை அனுமதிக்கக்கூடாது என்ற சட்டதிட்டத்தை அவரவர் வசதிகளுகேற்ப தீர்மானித்து வைத்துள்ளனர்.

இது போன்ற அசிங்கங்களைச் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் அவலங்களைக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் ஒவ்வொரு செய்திக்கும் பின்னால் அரசியலை கவனிக்கும் ஆவல் உருவானது. இந்தச் சமயங்களில் தான் இணையத்தில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இணையப் பத்திரிக்கைகளின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவ்வாறு அறிமுகமனதுதான்   சுவிற்சர்லாந்தில் வேரூன்றி, கூழலும் உலகெங்கும் கிளைபரப்பி விழுதுவிட்டு வரும் விருட்சமெனத் தோன்றும் 4தமிழ்மீடியா.

எனது மின் அஞ்சலில் தினந்தோறும் மிகத் துல்லியமாக இந்திய நேரப்படி மதியம் 2.30 முதல் 2,47 மணிக்குள் வந்து விழுகின்றது. ஒரு நாள் கூட இந்த நேரம் மாறியதே இல்லை. இதுவே 4 தமிழ் மீடியா குழுவினரின் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை காட்டுகின்றது. பதிவோ, இணையப் பத்திரிக்கையோ வாசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு அஜால் குஜால் சமாச்சாரங்களைப் பற்றியும், அதனையே தலைப்பாக வைத்து வாசகனை உள்ளே இழுக்கும் உத்தி போன்ற மூன்றாம் தர செயல்பாடுகள் எதையும் இதுவரையிலும் 4 தமிழ்மீடியாவில் நான் பார்த்ததே இல்லை.

துல்லியமான திட்டமிடல். அழகான ஒருங்கிணைப்பு, தெளிவான படங்கள், அளவான கட்டுரை. மொத்தத்தில் ஒரு நாளில் வரும் செய்திகள் மூலம் உலகை நம்மால் சுற்றி வந்த திருப்தி கிடைத்தே தீரும். இந்த உழைப்புக்குப் பின்னால் உள்ள அனைத்து 4 தமிழ்மீடியா நண்பர்களையும் ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் அவர்களின் உத்வேக உழைப்பு எனக்குப் பிரமிப்பை தந்து கொண்டேயிருக்கின்றது. இந்தக் குழுமத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரும் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் உள்ளனர். ஆனால் கொடுக்கும் செய்திகளிலும் சரி, தேர்ந்தெடுக்கும் வாசகங்களும் சரி அற்புதம் என்றே பாராட்டத் தோன்றுகின்றது.

4 தமிழ்மீடியா எனக்கு அறிமுகமானதன் தொடர்ச்சியாக அதன் நிர்வாகி மற்றும் ஆசிரியர் திரு.மலைநாடன் அவர்களின் நட்பு கிடைத்தது. என் எழுத்தினையும் அவர் வாசித்து வருகின்றார் என அறிந்த போது வியப்பாகவே இருந்தது. 4 தமிழ்மீடியா தளத்தில் என் எழுத்து வர வேண்டும் என்ற அவரது கோரிக்கையின்படி ஒரு தொடர் கட்டுரை வெளிவந்தது. வாசகர்கள் அக் கட்டுரைக்கு அளித்த வரவேற்பு மேலும் நம்பிக்கைகள் தந்தது.

அப்போது தான் நான் எழுதி வைத்திருந்த டாலர் நகரம் புத்தகத்தின் கோப்பை அவருக்கு அனுப்பி வைத்து, திருத்தி தேவையற்றதை நீக்கி ஒழுங்குபடுத்தித் தரமுடியுமா? என்று கேட்டேன். அனுப்பிய நாளில் தொடங்கிய விதியின் விளையாட்டு எங்கள் இருவரையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் முடிவு டாலர் நகரம் 4 தமிழ்மீடியா தளத்தில் வாரந்தோறும் வெளிவரத் தொடங்கியது. உலகில் உள்ள பலரின் பார்வைக்கும் சென்றது. இறுதியாகப் புத்தகமாக வெளிவந்தது. ஆனந்த விகடனின் 2013 ஆண்டின் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

புத்தகப் பதிப்பாளர்கள் எவரும், எழுத்தாளர்கள் எழுதியவற்றை முழுமையாகப் படித்துப் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இன்னமும் பல இடங்களில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் மலைநாடனைப் பொறுத்தவரையிலும் எந்தக் காரியம் என்றாலும் அது சிறிதோ பெரிதோ எதுவென்றாலும் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்  பழக்கம் கொண்டவர் என்பதை,  'டாலர் நகரம்' புத்தகத்திற்காக அவர் உழைத்த உழைப்பில் அறிந்தேன். அந்த உழைப்பின் அனைத்து பலன்களும் எனக்குத் தான் கிடைத்தது. மகன் மகிழ்வைப் பார்த்த தந்தையின் குதுகலம் போல மகிழ்ந்திருந்தார்.

எத்தனை பேர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரியவில்லை. பரந்த மனப்பான்மையும், எண்ணங்களில் தெளிவும், நல்ல எண்ணங்களை விதைப்பதில் உள்ள ஆர்வமும் உள்ள ஒரு இளையர் பட்டாளமே 4தமிழ்மீடியா  குழுமத்தில் இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மட்டுமல்ல அடுத்த  தலைமுறைக்கும் வரம் தரும் சாமியாகவே 4தமிழ்மீடியா  தெரிகிறது.

அங்கீகாரத்தைத் தேடி அலையும் எழுத்துலகத்தை ஒப்பிடும்போது எம் அடுத்தப் பணி என்ன? என்று திட்டமிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது இக் குழுமம். காரணம் முடிந்தவரை விதைகளை விதைத்து விடுவோம். நிழலோ, கனியோ எவருக்கோ கிடைக்கும் அல்லவா?. இந்த எண்ணத்தை என்னுள்ளும் உருவாக்கிய 4தமிழ்மீடியா எனக்கும் தகப்பன் சாமியே.

4தமிழ்மீடியா தளத்திற்கு இன்று ஆறாவது பிறந்த நாள். காலங்கள் பல கடந்தும், இந்தத் தளம் ஜொலிக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. வரம் தந்த சாமிக்கு என் இனிய வாழ்த்துகள்.


- ஜோதிஜி திருப்பூர்

தேவியர் இல்லம்.

No comments

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction