free website hit counter

எண்ணிய முடிதல் வேண்டும் ! - பகுதி 1

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

4தமிழ்மீடியா ஐந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும்  நாட்களில், நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, நினைவுகளை, அனுபவங்களென மீள் நினைவு கொள்ளும் ஒரு முயற்சி இது.

எங்கள் ஊடகப் பணியின், பயணத்தின்  செயற்திறனைச் சமன் செய்து சீர்தூக்கும் அனுபவம் என்ற நோக்கிலும், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த புரிதல்களுக்கு ஒரு அறிமுகமாக அமையும் என்ற வகையிலும், இந்தக் கட்டுரை அமைகிறது. ஒரு வகையில் இது 4தமிழ்மீடியா பிறந்த கதை என்றும் சொல்லலாம்.

எண்ணிய முடிதல் வேண்டும் என்றான் பாரதி. எண்ணித் துணி கருமம் என்றார் அய்யன் வள்ளுவர். அதன் வழி எண்ணித் துணிந்த பணியென அமைந்தது 4தமிழ்மீடியா. கடந்த நான்கு வருடங்களில் உறங்கிய வேளை தவிர்த்த எல்லா நேரங்களிலும் என் சிந்தையும், செயலுமாய் இருந்தது இப்பணி.

கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் 4தமிழ்மீடியா குறித்த எந்த அறிவிப்பும், எந்தப் பகிர்வும், 4தமிழ்மீடியா குழுமம் எனும் அடையாளத்துடனேயே வந்திருக்கிறது. அந்தத் தொடர் செயற்பாட்டில் எந்த மாற்றம் இல்லாத போதும், 4தமிழ்மீடியாவின் செயற்பணிகள் குறித்த புரிதல்களை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் கருதி, இந்தக் கட்டுரை 4தமிழ்மீடியா குறித்த என் அனுபவப் பகிர்வாகவும், ஐந்து பகுதிகள் கொண்ட தொடராகவும் அமைகிறது.

இணையத்துடனான தொடர்பு எனக்கு 1995ல் இருந்தே அமைந்த போதும், தமிழ்வலைப்பதிவுகளில் பலரும் ஆர்வமாக எழுதிக் கொண்டிருந்த 2006ம் ஆண்டு காலப் பகுதியிற்தான், ஒரு வலைப்பதிவராக இணையப் பரப்பில் நானும் அறிமுகமாகியிருந்தேன். அவ்வேளையில் வலைப்பதிவுகள் மூலம் நல்ல மாற்றுச் சிந்தனையாளர்கள் பலரை அடையாளங் காணவும், நட்புக் கொள்ளவும் முடிந்திருந்தது. மாற்று ஊடகத்தின் வலுவினை வலைப்பதிவுகள் தரும் எனும் நம்பிக்கை நிறைந்திருந்த நேரம் அது. ஆனாலும் காலவோட்டத்தில், அதுவும் குழுநிலைச் செயற்பாடாக மாறிய போது, ஒருவகை அயர்ச்சி தோன்றியது.

இவ்வாறிருந்த வேளை, 2008ல் தமிழகம் சென்றிருந்த போது, வலைப்பதிவர்களாக இருந்த ஊடகத்துறை நண்பர்கள் சிலரைச் சந்திக்க முடிந்தது. ஊடகத்துறையின் பல்வேறு நிலைகளிலும் காணப்பட்ட முரண்கள், இயலாமைகள் குறித்து, வருத்தத்துடன் பேசினார்கள். அப்போது இதற்கு மாற்றாக நாம் என்ன செய்ய முடியும் என எண்ணியபோது உருவான சிந்தனைதான் இன்றைய 4தமிழ்மீடியா.

தென்கிழக்காசியாவின் புகழ்மிகு கடற்கரையான மெரீனாவின் கரைகளில் அமர்ந்து, எதிரே தெரிந்த கடலளவு ஆசைகளை மனதில் தேக்கிவைத்துப் பேசத் தொடங்கினோம். மாலை ஐந்து மணியளவில் தொடங்கிய உரையாடல்கள், நள்ளிரவுக்குச் சமீபமாக, காவல்துறையினர் வந்து எழுந்து செல்லுங்கள் எனக் கட்டளையிடும் வரையில் தொடர்ந்தது.

ஊடகத்துறை நண்பர்கள் தங்கள் அனுபவங்களை, தமிழகத்தின் ஊடக நடைமுறைகளை, விரிவாகக் குறிப்பிட்டார்கள். அவ்வாறு குறிப்பிட்டுப் பேசிய விடயங்களைக் கவனித்தபோது, மிகப்பெரிய பொருளாதார பலத்துடன் விளங்கும் தமிழ் ஊடக உலகத்துக்குள் எமது எண்ணங்கள் வடிவம் பெறுவதோ, செயலாக்கம் பெறுவதோ, முடிகின்ற காரியமாகத் தெரியவில்லை. ஆனாலும் முடியாது என விட்டொதுக்கிவிட மனம் துணியவில்லை.

இந்நிலையிலேயே இணையம் எனும் எல்லைகளற்ற பெருவெளியில் இறங்கி நின்று சமராடுவது என்ற யோசனை எண்ணத்தில் உதித்தது. யோசனையைச் சொன்ன போது, நல்லாயிருப்பதாகச் சொன்ன நண்பர்கள், நடைமுறையில் சாத்தியமா ? எனக் கேட்டார்கள். சாத்தியங்களை உருவாக்குவதில்தானே சாதிக்க முடியும் என்றவாறு திட்டங்களைக் கூறிய போது, நம்பிக்கையற்றவர்கள் மௌனமானார்கள். மற்றவர்கள் தம்மால் இயன்றதைத் தயங்காமல் செய்வதாகக் குறிப்பிட்டார்கள்.

இலங்கையில் போர் தீவிரமாக நடந்த காலகட்டம் அது. அப்போது அங்கிருந்து செய்திகளை பெறுவது தொடர்பில், ஏற்கனவே அறிமுகத்தில் இருந்த ஊடகத்துறை நண்பர்களைத் தொடர்பு கொண்ட போது, பலரும் அச்சத்தில் விலகிக் கொள்ள, ஓரு பெண் ஊடகவியலாளர் மட்டும், பலமான பாதுகாப்பு உறுதிகளோடு இணைந்து கொண்டு, நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றத் முன் வந்தார்.

இந்தியா, இலங்கை, என்பதற்கு அடுத்து, அதிகளவில் தமிழர்கள் வாழும் மலேசியாவிலும், தமிழ் ஊடகத்துறையின் நிலை சிரமம் நிறைந்ததாவே இருந்ததை அங்கு சென்றபோது அவதானிக்க முடிந்தது. அங்கும் சிலரோடு பேசும் வாய்ப்புக் கிடைத்த போது, திட்டத்தினை முன் வைத்துப் பேசினோம். ஒரு நள்ளிரவில் தொடங்கி அதிகாலை ஐந்து மணிவரை நடந்த உரையாடல்களின் முடிவில், சாத்தியமாகத் தெரிகின்ற போதும் சரிவருமா ? என்ற கேள்வியோடு முடிந்தது. ஆனாலும் முயல்வோம் எனும் முனைப்புத் தோன்றியது.

இணைய ஊடகம் என்றபோதில், முதல் தேவையாக இருந்தது இணையத் தொழில் நுட்பம். மலேசியாவில் கணினித் தொலைத்தொடர்பில் பட்டப்படிப்பினை முடித்திருந்த அருண், தளத்தின் தொழில் நுட்பக் கட்டுப்பாளராகச் செயற்பட இணைந்து கொண்டார். அன்றிலிருந்து 4தமிழ்மீடியாவின் தளவடிவமைப்பு, தொழில்நுட்பச் செயற்பாடுகள், மற்றும் தொழில்நுட்பப் பதிவுகள், என்பவற்றின் மூலம், தன் தகைமைகளையும், அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினையும் வழங்கி வருகின்றார்.

இணையத்தில் செய்தித் தளத்தை முறையாப் பதிவு செய்து தொடங்க எண்ணியபோது, எங்கே பதிவு செய்யலாம் என்ற யோசனையில், போர் தவிர்ப்பும், நடுநிலையும், பேணும் சுவிற்சர்லாந்து பொருத்தமானதாக யோசிக்கப்பட்டது. அமைதிக்கான பல்வேறு அமைப்புக்களின் தலைமையகங்கள் செயற்படும் சுவிற்சர்லாந்தின் சட்டவரைபுகளுக்கு அமைவாக வரைபு செய்யப்பட்டிருந்த செய்தி, ஊடகத் தயாரிப்பு நிறுவனமொன்றின் பெயரின் கீழ் பதிவு செய்வதாக முடிவாகியது.

செய்தித்தளத்தின் பெயராக பல்வேறு பெயர்கள் யோசிக்கப்பட்ட போதும், இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழின் நீட்சியில், கணினித் தமிழென வந்த நான்காம் தமிழைக் குறிக்கும் வகையில், 4தமிழ்மீடியா என்ற பெயர் தெரிவாக, 2008ம் ஆண்டு ஜுன் மாதத்தில் 4தமிழ்மீடியா இணையத்தில் தரவேறியது. முதல்தளஅமைப்பு தரவேற்றப்பட்ட போதும், முதலிரு மாதங்கள் குழும உறுப்பினர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான காலமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இக் காலப்பகுதியில் தளத்தின் வடிவமைப்பு, தளநிர்வாகம், என்பன சீரமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், உலகத் தமிழர்களுக்கான செய்தித்தளமாகவும், இணையத் தொழில் நுட்பத்தின் புதிய வளங்களைத் தமிழில் பயிற்சிக்கும் களமாகவும், அமையும் வகையில் புதிய பகுதிகள் உருவாக்கம் பெற்றன.

ஐரோப்பா, மலேசியா, இந்தியா, என மூன்று இடங்களிலிருந்தும், தளக் கட்டுப்பாட்டினைத் தொடர்ச்சியாகக் கவனிக்கும் வகையில், குழுமம் ஒழுங்கமைக்கப்பட்டது.

குழுமத்தில் அங்கம் பெறுபவர்களின் சிந்தனைப் போக்கு எவ்வாறாக இருந்த போதும், 4தமிழ்மீடியாவிற்கான பொதுமைச் சிந்தனை, உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கானதாக அமையவேண்டும் என்றவகையிலே எண்ணப்பட்டது. அதுபோலவே செய்திகளைப் பொதுமையாகவும், புதிய வடிவிலும் கொடுப்பதற்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினர் சிலர் உள்வாங்கப்பட்டனர்.

செய்தித்தளமும், பல்சுவை அம்சங்கள் இணைந்த சஞ்சிகையமைப்பும் ஒருங்கே அமையும் வகையில் தளம் மேலும் ஒழுங்கமைக்கப்பட்டது. குறைவான பொருளாதார வளத்தினை, பலமான உழைப்பின் மூலம் நிவர்த்தி செய்ய முனைந்தோம்...நேர காலம் பாராத கடின உழைப்பில், 2008 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் (14) இதே நாளில் 4தமிழ்மீடியா தனது இணையச் சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. ஒரு நீண்ட கனவு நனவாகியதன் தொடக்கமென அமைந்திருந்தன அத் தருணங்கள்.

இன்னமும் சொல்வேன்...

அன்புடன்

- மலைநாடான்

 
 
 

No comments

Comments are closed

The comments for this content are closed.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction