free website hit counter

பயணிக்கலாம் தொடர்ந்தும் ...!

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய திகதியில் சமூகங்களின் வாழ்வும், வரலாறும் சரியாக கணிக்கப்படாமல் ‘வீங்கி வெடிக்கின்ற’ நிலையில் காட்டப்படும். அல்லது, ‘ஒன்றுமே இல்லை’ என்கிற அளவோடு மறைக்கப்பட்டுவிடும்.

இவற்றுக்கு அரசியல், அவற்றில் வெளிப்படும் (தேசிய, மத, இன) வாதங்கள், அவற்றை பொறுப்புணர்வின்றி கொண்டு சுமக்கும் ஊடகங்களும் முக்கியமாகின்றன. இப்படிப்பட்ட நிலையில், சரியான வரலாற்றை பதிவு செய்ய வேண்டியது ஊடகங்களின் பெரும் கடமை. அதற்கு தார்மீக அறமும், பொறுப்புணர்வும் அவசியமாகின்றது.

புற்றீசல்கள் மாதிரியான இன்றைய ஊடகத் தோற்றத்தில் பெரும்பாலனவற்றின் நோக்கம் மக்களை எப்படியாவது சேர்ந்துவிடுவது. அதாவது, தன்னுடைய பொருளை எவ்வளவு ஏமாற்று வேலை செய்தாவது விற்றுவிடத் துடிக்கும் மோசமான வியாபாரியின் மனநிலையை ஒத்தது. இவ்வாறான நோக்கங்களுடன், இதற்கு இணையாக வளர்ந்திருப்பது சமூக வலைத்தளங்கள்.

இன்று மக்களிடமும் பெரிதாக நேரம் இல்லை. அவசரத்தில் அவர்களும் எது உண்மை என்று பிரித்தறிவது குறைவு. உலகம் துரித உணவு (Fast food) கலாசாரத்துக்கு மாறிவிட்டது மாதிரி, ருசியாக இருந்தால் போதும் போசாக்கு பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. மொத்தமாக பசி அடங்கினால் போதுமென்ற நிலை. அதுதான், இன்றைக்கு குறிப்பிட்டளவில் ஊடகங்களை மக்கள் அணுகும் நிலையும். இவ்வாறான நிலையில் ஊடகத்துறையில் இயங்குபவர்கள் பொறுப்புணர்வோடும், வரலாற்றினை நாம் ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையை தங்களுடைய மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில், பிழையான வரலாற்றை எழுதி, தப்பான படிப்பினைகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்த்து அவர்களை அழிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றோம் என்று பொருள். ஏனெனில், எமக்கு முன்னால் இருக்கின்ற படிப்பினைகளில் காணப்படும் தவறும், அதனால் நாம் பெற்ற இழப்பும் பெரிதானது. அதிலிருந்து மீள்வதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லாதது.

‘4தமிழ்மீடியா’ என்கிற எமது ஊடக தவத்தை பொறுப்புணர்வு என்ற அடிப்படையோடு ஆரம்பித்து இன்றோடு பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகிறது. சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடு நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய எமது வளர்ச்சி என்பது ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலேயே இருந்திருக்கிறது. எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, என்றைக்குமே சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிகாட்டும் செயல்களில் (எம்மை அறிந்து) ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தியோடு பயணிக்கின்றோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லித் திருப்தி கொள்வோம். இந்த மனத்திருப்தியும், நம்பிக்கையுமே எங்கள் பலத்தின் ஆதாரம் .

ஒரு தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தினை, எவ்வளவோ இடர்களைச் சந்தித்தே கடந்திருக்கிறோம். இனியும்அவைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். புதிய யோசனைகளைச் செயலாக்க முனைகின்றோம். அதற்கான ஆதாரமாக, எமைத் தொடரும் வாசகர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். எமது, படைப்புக்கள், ஊடக நடவடிக்கைகளில் தவறுகள், கருத்துக்கள் இருப்பின் எந்தவித தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே, எம்மை இன்னும் வளப்படுத்த உதவும்.

எமது வளர்ச்சிப் பயணத்தில் உடன் வரும் அனைவர்க்கும் நன்றிகளும், வணக்கங்களும்!

- என்றும் மாறா இனிய அன்புடன்

4தமிழ்மீடியா குழுமத்தினர்

No comments

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula