தமிழக வெற்றிக் கழகத்தின் ஆறு மாத கால ஆட்சி, ஊழலற்ற தமிழகத்தை நோக்கிய பயணமா? அல்லது புதிய அரசியல் சவால்களின் தொடக்கமா?
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆறு மாத ஆட்சியை நிறைவு செய்துள்ளது. நீண்டகாலமாகத் திராவிட அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தவெக, ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, மக்கள் நலன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு எனப் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.
ஆனால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்துள்ளன? ஊழல் ஒழிந்துவிட்டதா? புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளதா? தொழில்துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இக்கேள்விகளுக்கான விடைகளை ஆராய்வது அவசியமாகிறது.
ஊழல் ஒழிப்பு: வாக்குறுதியும் யதார்த்தமும் !
தவெக அரசின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஊழலற்ற நிர்வாகம். அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் இடையிலான கமிஷன் கலாசாரத்தை ஒழிப்பதாக முதல்வர் உறுதியளித்திருந்தார்.
ஆட்சியின் ஆரம்பத்தில் ஒப்பந்த நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதும், அரசுத் துறைகளில் கமிஷன் தொடர்பான அழுத்தங்கள் குறைந்திருப்பதாகச் செய்திகள் வெளியானதும் கவனத்திற்குரியவை.
ஆனால் ஊழல் ஒழிந்துவிட்டதாக அறிவிப்பதற்கு இவை மட்டும் போதுமானவை அல்ல. கீழ்மட்ட அரச அலுவலகங்களில் இலஞ்சம், ஒப்பந்தங்களில் முறைகேடுகள், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகாரங்களைப் பெறுதல் போன்றவற்றைத் தடுப்பதற்கான நிறுவனமயமான சீர்திருத்தங்கள் அவசியம்.
குறிப்பாக, தகவல் அறியும் உரிமையைப் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை எதிர்ப்புகளுக்குப் பின்னர் திரும்பப் பெறப்பட்டமை, வெளிப்படைத்தன்மை குறித்த அரசின் உறுதிப்பாட்டையே கேள்விக்குள்ளாக்கியது.
ஊழலற்ற நிர்வாகம் என்பது ஒரு தேர்தல் முழக்கமல்ல; அது ஒவ்வொரு அரசுத் துறையிலும் நடைமுறையாக வெளிப்பட வேண்டும்.
கட்சி உறுப்பினர்களின் நடத்தை: புதிய அரசியலுக்கும் பழைய கலாசாரத்துக்கும் என்ன வேறுபாடு ?
தவெக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள முக்கியமான சவால்களில் ஒன்று, அதன் சொந்தக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் தொடர்பான சர்ச்சைகளாகும்.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே கட்சியின் சில நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறாக எழுந்த சில விமர்சனங்களில், குறிப்பாக, திருச்சி மாவட்டம் துறையூரில் குடிநீர் மற்றும் குப்பை அகற்றல் பிரச்சினை தொடர்பாக முறையிடச் சென்ற பொதுமகர் ஒருவரைத் தவெக சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான ரவிசங்கர் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான காணொளியும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும், ஆட்சியருக்கு ஆட்சேபனைக்குரிய தகவல்களை அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிகாரபூர்வ விசாரணை மற்றும் அதன் முடிவுகள் முக்கியமானவை.
இந்தச் சம்பவங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றங்களாகக் கருதப்பட முடியாவிட்டாலும், ஆளுங்கட்சியின் அரசியல் ஒழுக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
மேலும், தவெக உறுப்பினர்களின் சில பொதுநிகழ்வு நடவடிக்கைகள், அதிகாரிகளிடம் நடந்துகொள்ளும் முறை, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவது தொடர்பான விமர்சனங்களும் கட்சியின் தலைமைக்குப் புதிய பொறுப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்தப் பின்னணியில் நவம்பர் 11ஆம் திகதி முதல்வர் விஜய் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கலந்துரையாடத் திட்டமிட்டிருப்பது முக்கியமானதாகும்.
மாற்று அரசியல் என்பது ஆட்சியாளர்களின் பெயர்களை மாற்றுவது மட்டுமல்ல; அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறையையும் மாற்றுவதாக இருக்க வேண்டும்.
தவறு செய்யும் உறுப்பினர்கள் மீது கட்சித் தலைமை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறதா என்பதே தவெக அரசின் அரசியல் நேர்மைக்கான முக்கியமான சோதனையாக இருக்கும்.
தொழில்துறை வளர்ச்சி: முதலீடுகள் வருகிறதா? வேலைவாய்ப்புகள் உருவாகின்றனவா ?
தவெக அரசின் ஆறு மாதச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்த வேண்டிய துறை தொழில்துறை வளர்ச்சியாகும்.
ஆட்சியின் முதல் 100 நாட்களில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில்' 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 1.02 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டதாக அரசு தெரிவித்தது. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,21,788 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தரவு மையங்கள், வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் இறுதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் எட்டு தொழில்துறைத் திட்டங்களுக்கு 3,767 கோடி ரூபாய் முதலீட்டுடன் அனுமதி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 4,853 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தொழில்துறை வளர்ச்சிக்கான சாதகமான அறிகுறிகள்.
ஆனால் முதலீட்டு உறுதிமொழிகளுக்கும் நடைமுறைக்கு வரும் தொழிற்சாலைகளுக்கும் வேறுபாடு உள்ளது. அறிவிக்கப்பட்ட முதலீடுகளில் எவ்வளவு உண்மையில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதா? சிறு, குறு தொழில்கள் எவ்வாறு வளர்ச்சியடைகின்றன? என்பதற்கான வெளிப்படையான அறிக்கைகள் அவசியம்.
தமிழகம் ஏற்கெனவே வாகன உற்பத்தி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வலுவான தொழில்துறை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. அந்த வளர்ச்சியைத் தொடர்வதுடன், மாவட்டங்களுக்கிடையிலான தொழில்துறை ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும் தவெக அரசின் முக்கியப் பொறுப்பாகும்.
மக்கள் நலனும் நிர்வாகச் செயல்திறனும்
இலவச மின்சாரச் சலுகைகள், பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகள், சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.
அதேநேரம், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, காவல்துறைப் பொறுப்புணர்வு, விலைவாசி, மின்தடை, விவசாயிகளின் பிரச்சினைகள் ஆகியவற்றில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டமை, அரசின் முடிவெடுக்கும் நடைமுறையில் போதிய ஆலோசனையும் திட்டமிடலும் தேவை என்பதை உணர்த்துகிறது.
முதல்வரின் நேரடி ஆய்வுகள் முக்கியமானவைதான். ஆனால் நிர்வாகம் ஒருவரின் தனிப்பட்ட கண்காணிப்பில் மட்டும் இயங்க முடியாது. ஒவ்வொரு துறைக்கும் இலக்குகள், காலக்கெடு, பொறுப்புக்கூறல் ஆகியவை அவசியம்.
மாற்றத்தை நிரூபிக்க வேண்டிய காலம் !
தவெக அரசின் முதல் ஆறு மாதங்களை முழுமையான தோல்வியாகவோ, மிகப்பெரிய வெற்றியாகவோ வரையறுக்க முடியாது.
தொழில்துறை முதலீட்டு முயற்சிகள், சில நிர்வாகச் சீர்திருத்தங்கள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதேவேளை, ஊழல் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, கட்சி உறுப்பினர்களின் ஒழுக்கம், நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் இன்னும் பல கேள்விகள் தொடர்கின்றன.
குறிப்பாக, தவெக உறுப்பினர்கள் மீதான சர்ச்சைகள், முந்தைய ஆட்சிகளில் விமர்சிக்கப்பட்ட அதிகாரத் துஷ்பிரயோகக் கலாசாரம் புதிய ஆட்சியிலும் தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றன. முதல்வர் விஜய் தனது கட்சிக்குள் ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இது. கட்சியின் உறுப்பினர்கள் என்பதற்காக யாருக்கும் தனிச்சலுகை வழங்கப்படக் கூடாது.
அதேபோல், தொழில்துறை முதலீடுகள் வெறும் புள்ளிவிவரங்களாக இல்லாமல், இளைஞர்களின் வேலைவாய்ப்பாகவும், குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றமாகவும் மாற வேண்டும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் மாற்றத்திற்கான பாதை தெளிவாகத் தெரிய வேண்டும்.
விஜய் அரசுக்கு முன்னால் இப்போது இரண்டு முக்கியமான சவால்கள் உள்ளன: ஒன்று, ஊழலற்ற நிர்வாகம் என்ற வாக்குறுதியைச் சொந்தக் கட்சியிலிருந்தே நடைமுறைப்படுத்துவது; மற்றொன்று, தொழில்துறை வளர்ச்சியையும் மக்கள் நலனையும் சமநிலைப்படுத்துவது.
மக்கள் எதிர்பார்ப்பது புதிய அரசியல் முகங்களை மட்டுமல்ல; புதிய அரசியல் பண்பாட்டையும், பொறுப்பான நிர்வாகத்தையும், தங்கள் வாழ்வில் உணரக்கூடிய பொருளாதார மாற்றத்தையும் தான். ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இனி தவெக அரசு தனது வாக்குறுதிகளை அல்ல, தனது செயல்பாடுகளையே மக்களின் முன் சமர்ப்பிக்க வேண்டிய நேரம் இது!