ஒரு சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றி எழுதுவது வேறு; அந்தச் சமூகத்தை வாசகன் புதிதாகப் பார்க்கச் செய்வது வேறு. வழக்கறிஞர் சுமதியின் 'கல் மண்டபம்' நாவல் இரண்டாவது முயற்சிக்கே நெருக்கமானது.
2001-இல் முதன்முதலில் வெளியான இந்நாவல், பின்னர் மறுபதிப்புகளைக் கண்டுள்ளது. ஆனாலும் அதனை வாசிக்கும் சந்தர்பம் அன்மையிலேயே எமக்கு வாய்த்தது. இந்த வருடத்தின் முதல் பகுதியிலே இந்தப் புத்தகத்தை தமிழகத்தில் இருந்து தருவித்து விட்ட போதிலும், அதனை ஆழந்து வாசிப்பதற்கான தருணம் தள்ளிப் போய்கொண்டே இருந்தது. அதற்கான காரணம், இந்த நாவலின் மீது நாம் கொண்டிருந்த ஒரு எதிர்பார்ப்பும் எனலாம்.ஏனெனில் தான் நேரில் சந்தித்த ஒரு மனிதனைச் சூழ நடக்கும் கதை இது என நாவலாசிரியர்தெரிவித்திருந்ததை ஏலவே அறிந்திருந்தோம். அன்மையில் ஒரு மலைக்கிராம வாசத்தில் இருந்த போது, அந்த அழகிய சூழலின் அமைதியோடு, இந்த நாவலுக்குள் ஆழ்ந்து போனோம்....
மரணம், சடங்கு, தொழில், குடும்பம், வறுமை, சாதி, சமூக மரியாதை ஆகியவற்றை இணைத்துக்கொண்டு, சமூகத்தின் அன்றாடப் பார்வைக்குப் புலப்படாத மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்துகிறது இந்நாவல். இந்த நாவலை வாசிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட காலச் சமூகத்தின் பதிவாக மட்டுமல்லாமல், இன்னும் தொடரும் சில அடிப்படைச் சமூகக் கேள்விகளைத் தொட்டிருப்பதையும் சுட்டுகிறது.
மரணத்தின் பின்னால் இருக்கும் வாழ்க்கை
நாவலின் கதை மரணச் சடங்குகளைச் சுற்றி நகர்கிறது. தேசுவின் வாழ்க்கையும் அவனைச் சுற்றியுள்ள குடும்ப உலகமும் அந்தச் சமூகத்தின் தொழில், பொருளாதாரம், உறவு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. ஆனால் நாவலின் முக்கியத்துவம் கதைச்சம்பவங்களில் இல்லை; அவற்றின் பின்னால் இயங்கும் சமூக அமைப்பில்தான்.
மரணம் ஒருவருக்கு துயரம்; இன்னொருவருக்கு தொழில். ஒருவரின் சடங்கு, இன்னொருவரின் வாழ்வாதாரம். இந்த முரண்பாட்டை இயல்பான ஒன்றாகக் கடந்து செல்லாமல், அதற்குள் இருக்கும் மனித உழைப்பையும் சமூக மதிப்பீட்டையும் சுமதி எதிரெதிராக நிறுத்துகிறார்.
இதனால் கல் மண்டபம் மரணத்தைப் பற்றிய நாவலாக இல்லாமல், மரணத்தைச் சுற்றி உருவாகும் சமூக உறவுகளைப் பற்றிய நாவலாக வாசிக்கப்படுகிறது.
தேசுவின் தனிமனிதப் போராட்டம்
தேசு நாவலின் மையக் கதாபாத்திரம் என்றாலும், அவனை தனிப்பட்ட துயரத்தின் பிரதிநிதியாக மட்டுமே பார்க்க முடியாது. அவனது தொழில் அவனுடைய பொருளாதாரத்தையும் சமூக அடையாளத்தையும் ஒரே நேரத்தில் நிர்ணயிக்கிறது. இங்கே நாவல் ஒரு முக்கியமான முரண்பாட்டை உருவாக்குகிறது. சமூகத்திற்குத் தேவைப்படுபவன் சமூகத்தால் மதிக்கப்படாமல் போகிறான்.
இந்த முரண்பாடு தேசுவின் தனிப்பட்ட பிரச்சினையைத் தாண்டி, உழைப்பு மற்றும் மரியாதை குறித்த சமூகத்தின் இரட்டை அளவுகோலை வெளிப்படுத்துகிறது. ராமான்ஜியின் தலைமுறையிலிருந்து தேசுவின் தலைமுறைக்கு நகரும் வாழ்க்கைச் சிக்கல்கள், வறுமையும் தொழில் சார்ந்த அடையாளமும் தனிமனிதத் தேர்வுகளுக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்த்துகின்றன.
‘கல் மண்டபம்’ என்ற குறியீடு
நாவலின் தலைப்பு அதன் ஆழமான குறியீடுகளில் ஒன்று. கல் என்பது நிலைத்திருப்பது. மனித வாழ்க்கை நிலையற்றது. மண்டபம் நிலைத்து நிற்கிறது; தலைமுறைகள் அதன் வழியாக வந்து செல்கின்றன. சடங்குகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன; மனிதர்கள் மட்டும் மாறுகின்றனர். இந்த முரண்பாடு தலைப்புக்கு ஒரு குறியீட்டுப் பொருளை அளிக்கிறது.
‘கல் மண்டபம்’ ஒரு இடமாக மட்டுமல்லாமல், நினைவையும் மரபையும் உறையச் செய்யும் சமூக அமைப்பாக வாசிக்கப்படலாம். மனிதர்கள் மாறினாலும் சில சமூக மதிப்பீடுகள் மாறாமல் இருப்பதையும் தலைப்பு உணர்த்துகிறது.
தொழிலின் சமூக அரசியல்
நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம் தொழிலை வெறும் வாழ்வாதாரமாகப் பார்க்காதது. மரணச் சடங்குகளுடன் தொடர்புடைய பணிகள் சமூகத்திற்கு அவசியமானவை. ஆனால் அந்தப் பணிகளைச் செய்பவர்களுக்கு அதே அளவு சமூக மரியாதை வழங்கப்படுவதில்லை. இதில்தான் நாவலின் கூர்மையான சமூக விமர்சனம் உள்ளது.
ஒரு வேலையை தரக்குறைவு எனக் கணிப்பிட்டால் அதைச் செய்யும் மனிதனும் குறை மனிதனாகிவிடுகிறானா?. இந்தக் கேள்வி நாவலின் அடித்தளத்தில் இயங்குகிறது. சமூகத்தின் தேவைக்கும் சமூக மரியாதைக்கும் இடையிலான இந்த முரண்பாட்டை சுமதி தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களின் வழியாக வெளிப்படுத்துகிறார்.
சாதி; வெளிப்படையானதைக் காட்டிலும் நுண்ணிய அமைப்பு
கல் மண்டபத்தை சாதி குறித்த நாவல் என்று மட்டும் வகைப்படுத்துவது போதாது. அதன் முக்கியத்துவம் சாதியை தொழில், பொருளாதாரம், சடங்கு அதிகாரம், குடும்ப மரியாதை ஆகியவற்றோடு இணைத்துப் பார்ப்பதில் உள்ளது. ஒரு சமூகத்திற்குள்ளேயே அந்தஸ்து வேறுபாடுகள் உருவாகின்றன. தொழில் ஒருவருடைய சமூக மதிப்பை நிர்ணயிக்கிறது; பொருளாதாரம் அந்த மதிப்பை மாற்றுகிறது; சடங்கு சார்ந்த அதிகாரம் இன்னொரு அடுக்கை உருவாக்குகிறது.
இதனால் நாவலின் சமூகப் பார்வை ‘மேலோர் - கீழோர்’ என்ற எளிய இருமைக்குள் சிக்குவதில்லை. சமூக அடுக்குகள் ஒன்றுக்கொன்று குறுக்காக இயங்குகின்றன என்பதை அது காட்டுகிறது.
மரியாதையின் உளவியல்
நாவலின் ஆழமான கேள்விகளில் ஒன்று ‘மரியாதை’. வறுமை என்பது பணமின்மை மட்டுமல்ல. பிறரின் பார்வையில் தன்னுடைய இடம் குறித்த உணர்வும் அதனுடன் இணைந்திருக்கிறது. தொழில் ஒருவரை வாழ வைக்கிறது; அதே தொழில் அவரை அவமதிக்கச் செய்யும் சமூகப் பார்வையையும் உருவாக்குகிறது.
இதனால் தேசுவின் போராட்டம் பொருளாதாரப் போராட்டமாக மட்டும் இல்லை; தன்மானத்திற்கான போராட்டமாகவும் மாறுகிறது. இந்த உளவியல் பரிமாணமே நாவலை வெறும் சமூக ஆவணத்திலிருந்து மனிதநேய நாவலாக உயர்த்துகிறது.
பெண்களின் பாத்திரங்கள்
சௌந்தரம், கல்யாணி போன்ற பெண் பாத்திரங்கள் குடும்பத்தின் உளவியல் அழுத்தங்களை வெளிப்படுத்துகின்றன. பொருளாதார நெருக்கடி, உறவுகளின் விரிசல், தன்மானம், மன்னிப்பு போன்றவை பெண்களின் வாழ்க்கையில் தனித்துவமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
எனினும், இங்கு ஒரு விமர்சனக் கேள்வி எழுகிறது. நாவலின் சமூக அமைப்புக்குள் பெண்களின் சுயமான அனுபவங்கள் இன்னும் விரிவான கதைப்பரப்பைப் பெற்றிருக்க முடியுமா? இந்தக் கேள்வி நாவலின் குறைனெச் சுட்டுவதற்கில்லை, மாறாக; அதன் வாசிப்பை விரிவுபடுத்துவதற்கானது.
மொழியும் ஆவணத்தன்மையும்
நாவலின் மொழிநடை அதன் சமூகச் சூழலோடு நெருக்கமாக உள்ளது. பேச்சுவழக்கு, சடங்கு சார்ந்த சொற்கள், அன்றாட மொழிப் பயன்பாடு ஆகியவை கதாபாத்திரங்களின் வாழ்வியலை நம்பகமாக்குகின்றன. ஆனால் இதே அம்சம் நாவலின் ஒரு கலைச் சிக்கலையும் உருவாக்குகிறது. ஒரு நாவல் தகவல்களைச் சேகரிப்பதைக் காட்டிலும் அவற்றை அனுபவமாக மாற்ற வேண்டும். கல் மண்டபம் பல இடங்களில் இதைச் சாதிக்கிறது. சில இடங்களில் விளக்கத்தின் சுமை கலைநடையின் இறுக்கத்தைக் குறைக்கிறது.சமூகத்தைப் பதிவு செய்யும் ஆர்வம் சில இடங்களில் கதை நகர்வை விட ஆவணத் தன்மையை முன்னிலைப்படுத்துவது போலவும், இதனால் வாசிப்பு ஓட்டம் சற்றுமெதுவாகிறது போலவும் உணரத் தோன்றுகிறது.
கதைசொல்லலின் விசாரணைத் தன்மை
ஒரு நிகழ்வை கதையாடலாக மட்டும் பதிவு செய்யாமல், அதன் பின்னணி என்ன என்று தேடும் மனப்பான்மை நாவலில் உள்ளது. ஒரு தொழிலுக்குப் பின்னால் இருக்கும் மனிதன் யார்? ஒரு குடும்பச் சிக்கலுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதாரம் என்ன? ஒரு சமூக மரியாதைக்குப் பின்னால் இருக்கும் அதிகாரம் எது? என்ற கேள்விகளின் வழியே கதை நகர்கிறது. நாவலாசிரியர் சுமதியின் வழக்கறிஞர் பின்னணி நாவலின் மாந்தர்கள் மீதான பார்வையோடு சுவாரஸ்யமாக ஒத்திசைகிறது.
ஆனால் நாவல் இக்கேள்விகளுக்கெல்லாம் இறுதித் தீர்ப்பு வழங்குவதில்லை. அதுவே அதன் கலைத்தன்மை. அது வாசகனை நீதிபதியாக நியமிக்காது, சாட்சியாக நிறுத்துகிறது.
ஆவணத்தைத் தாண்டி இலக்கியம்
கல் மண்டபத்தின் சமூகப் பெறுமதி அதன் ஆவணத் தன்மையில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை, தொழிலை, சடங்குகளை, குடும்ப அமைப்பை பதிவு செய்கிறது. ஆனால் அதன் இலக்கிய மதிப்பு அதில் மட்டும் இல்லை. அந்தத் தகவல்களுக்குள் மனித உணர்வைச் செலுத்தும்போதுதான் அது நாவலாகிறது. இதுவே சுமதியின் முயற்சியின் முக்கியமான அம்சம். அவர் ஒரு சமூகத்தை வெளியில் இருந்து விளக்குவதற்குப் பதிலாக, அதன் உள் முரண்பாடுகளுக்குள் வாசகனை நிறுத்துகிறார்.
கல் மண்டபம் ஒரு சமூகத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் நாவல் மட்டுமல்ல; சமூகத்தைப் பார்க்கும் நமது முறையை விசாரிக்கும் நாவல். அதன் முக்கியமான கேள்விகள் மரணம் பற்றியவை அல்ல. உழைப்பின் மதிப்பு, தொழிலின் சமூக அந்தஸ்து, சாதியின் நுண்ணிய அடுக்குகள், குடும்பத்தின் அதிகார உறவுகள், தன்மானத்தின் உளவியல் ஆகியவற்றைப் பற்றியவை.
சாதியின் நுண்ணிய அடுக்குகளில் விளிம்பு நிலை மாந்தர்கள் எல்லா இடங்களிலம் இருக்கினறார்கள் எனும் ஒரு உண்மையையும் நாவல் உரைத்து நிற்கிறது. அதன் மிகப் பெரிய பலம், ‘விளிம்பில்’ இருப்பவர்களை இரக்கத்திற்குரியவர்களாக மட்டும் காட்டாமல், அவர்களின் வாழ்க்கைக்குள் செயல்படும் சமூக தர்க்கங்களை வெளிப்படுத்துவதில் உள்ளது.
நாவலின் மையக் கேள்வி வாசிப்புக்குப் பிறகும் நிலைத்திருக்கிறது
சமூகத்திற்குத் தேவையான உழைப்பைச் செய்பவர்களுக்கு, அதே சமூகத்தில் மனித மரியாதை ஏன் உறுதியாக வழங்கப்படுவதில்லை? இந்தக் கேள்விக்கு கல் மண்டபம் தீர்ப்பு வழங்குவதில்லை. ஆனால் அதைத் தவிர்க்க முடியாத கேள்வியாக மாற்றுகிறது. அதுவே இந்நாவலின் இலக்கியப் பெறுமதி.
கல் மண்டபம் நிலைத்து நிற்கிறது; அதன் வழியே மனிதர்கள் கடந்து செல்கிறார்கள். சுமதியின் நாவல் அந்தக் கடந்து செல்லும் மனிதர்களின் தடங்களை வாசிக்கச் செய்கிறது. நீண்ட நாட்களின் பின் மனதுக்கு நெருக்கமான மனிதர்கள் சிலரோடு உரையாடியது போன்ற அனுபவத்தை 'கல் மண்டபம்' தந்துவிடுகிறது.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்