counter create hit லிகுரியர்களின் காவல் தெய்வம் !

லிகுரியர்களின் காவல் தெய்வம் !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலிய மொழியில், " நோஸ்த்ர சிங்ஞோரா டெல்லா குவார்டியா (Santuario di Nostra Signora della Guardia ) "அவர் லேடி ஆஃப் தி வாட்ச்" என ஆங்கிலத்திலும் அழைக்கப்பெறும் ரோமன் கத்தோலிக்க புனித யாத்திரைத் தலங்கள் பலவுள்ளன.

தமிழ் கிராமங்களில் காணப்படும் எல்லைக்காளி அம்மன் ஆலயங்களுக்கு ஒப்பானவை இந்தக் கத்தோலிக்கத் தேவாலயங்கள். ஊரின் எல்லையில், அல்லது அவற்றின் முகப்புப் பார்வையில் அமைந்திருப்பவை இதன் சிறப்பம்சம். ஐரோப்பாவின் பல நகரங்களிலும் காணப்படும் இவ்வாறான கத்தோலிக்க ஆலயங்களில் இத்தாலியின் வடமேற்கில் உள்ள ஜெனோவா நகரத்திற்கு வெளியே, செரனேசி நகராட்சியில் உள்ள ஃபிகோக்னா ( Mount Figogna) மலைச்சிகரத்தின் (804 மீற்றர்கள்) உச்சியில் அமைந்துள்ளது லிகுரியாவில் உள்ள மிக முக்கியமான மரியன்னை ஆலயம். மலையின் மேல் இருப்பதனால் ஜெனோவா வாழ் தமிழ்மக்கள் மலைமாதா கோவில் என்று அழைக்கின்றார்கள், இத்தாலியர்கள் " நோஸ்த்ர சிங்ஞோரா டெல்லா குவார்டியா (Santuario di Nostra Signora della Guardia எங்களைக் காக்கும் தாய் ) என அழைக்கின்றார்கள்.

இத்தாலிய மொழியில் "குவார்டியா" என்றால் "கண்காணிப்பு" என்று பொருள்படும். ஒருகாலத்தில் ஃபிகோக்னா மலையானது போல்செவெரா பள்ளத்தாக்கு மற்றும் ஜெனோவா ஆகியவற்றிற்கு அன்மையில், கடலில் பயணிக்கும் கப்பல்களின் இயக்கத்தை கண்காணிப்பதற்கான ஒரு மூலோபாய கண்காணிப்பு நிலையமாக இருந்தது. ஆலயத்திற்கு முன் பக்கத்திலிருந்து போல்செவெரா பள்ளத்தாக்கு, ஜெனோவா நகரத்தின் ஒரு பகுதி மற்றும் லிகுரியன் ரிவியரா ஆகியவற்றைப் பார்க்க முடியும். மிகவும் தெளிவான நாளில், முக்கியமாக குளிர்காலத்தில், பிரெஞ்சு தீவான கோர்சிகா மலைகளினையும் காணலாம்.

ஜெனோவா மற்றும் இத்தாலி முழுவதும் இருந்து வரும் யாத்ரீகர்களின் தலமாக இந்த ஆலயம் சிறந்த பக்திஸ்தலமாக உள்ளது. கத்தோலிக்கத் தேவாலயமாக இருந்தாலும், இந்த ஆலயத்தின் வழிபாட்டு முறையும், மரபும், புகழும், இத்தாலிக்கு அப்பாலும் பரவியுள்ளது. பல் சமயத்தவர்களும் நம்பிக்கையுடன் சென்று வரும் தலமாகவும் விளங்குகிறது.

வரலாற்றுப் பாரம்பரியத்தின் படி, 1490 ஆகஸ்ட் 29, அன்று, கன்னி மேரி பெனெடெத்தோ பரேத்தோ ( Benedetto Pareto) என்ற விவசாயிக்கு தோன்றி, மலையில் ஒரு தேவாலயத்தை கட்டும்படி கேட்டார். பரேத்தோ ஆச்சரியமடைந்தார். அவர் ஒரு ஏழை விவசாயி. தன்னால் அதைச் செய்ய முடியாது என்று பதிலளித்தார். ஆனால் கன்னி மரியா, "பயப்படாதே!" என்றருளினார்.

பரேத்தோ வீட்டிற்குச் சென்றார். தான் கண்ட அந்தத் தோற்றத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, அவர் மரத்திலிருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். கன்னி மேரி அவருக்கு மீண்டும் தோன்றினார், அவர் அற்புதமாகக் குணமடைந்தார். இந்த நிகழ்வு, கன்னி மேரி தோன்றியதைப் பற்றி பேசவும், தேவாலயத்தைக் கட்ட உதவி கேட்கவும் அவரை நம்ப வைத்தது.

முதல் தேவாலயம் கன்னி மேரி தோன்றிய இடத்தில் பரேத்தோவால் கட்டப்பட்டது. இது ஒரு சிறிய செவ்வக கட்டிடம், இப்போது புதிய தேவாலயத்திற்குள் ஒரு மர கூரை உள்ளது. ஒரு முக்கிய இடத்தில் 1530 திகதியிட்ட ஒரு பளிங்கு மடோனா சிலையும் உள்ளது.

அதிகரித்த யாத்ரீகர்களின் வருகை காரணமாக, 1528 மற்றும் 1530 க்கு இடையில் மலையின் உச்சியில் ஒரு புதிய ஆலயம் கெர்சி குடும்பத்தின் நன்கொடையில், கட்டப்பட்டது. கோவிலுக்கு அருகில் யாத்ரீகர்களுக்கான நல்வாழ்வு கூடம் கட்டப்பட்டது, மேலும் இது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் புணரமைக்கத் தொடங்கி, தொழில்நுட்பம் மற்றும் நிதி பின்னடைவுகள் காரணமாக, தேவாலயம் 1889 இல் முடிக்கப்பட்டு மே 26, 1890 இல் திறக்கப்பட்டது.

மார்ச் 11, 1915 இல், ஜெனோயிஸ் போப் XV பெனடிக்ட் இத் தேவாலயத்திற்கு பசிலிக்கா என்ற பட்டத்தை வழங்கினார். 1929 ஆம் ஆண்டில், செரனேசியில், ஒரு ரயில் பாதை (ஆட்டோகுடோவியா) கட்டப்பட்டது, இது பக்தர்கள் பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் இருந்து தேவாலயத்தை அடைய உதவியது. இதற்கு முன் மேலே செல்ல ஒரே வழி கால் நடைதான். 1963 ஆம் ஆண்டில், வாகனங்களுக்காக போல்சானெத்தோவிலிருந்து , 11 கிலோமீட்டர் (7 மைல்) நீளமான சாலை அமைக்கப்பெற்றதன் பின் 1967 ஆம் ஆண்டில் "ஆட்டோகுயிடோவியா" சிக்கனமானதாக இல்லை எனக் கருதி மூடப்பட்டது.

செப்டம்பர் 22, 1985 இல், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களும், மே 18, 2008 அன்று திருத்தந்தை XVI பெனடிக்ட் அவர்களும், மே 27, 2017 அன்று போப் பிரான்சிஸ் அவர்களுமென, மூன்று புனித பாப்பரசர்கள் இந்த ஆலயத்திற்கும் விஜயம் செய்துள்ளார்கள்.

இந்தத் தேவாலயத்தில் உள்ள கன்னி மேரியுடன், அவர் காட்சி பெற்ற விவசாயி பெனெடெத்தோ பரேத்தோவும் இணைந்த மூலவிக்கிரகம், மற்றெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பாக நாம் காணமுடிந்தது. வேறு பல புனிதர்களைக் குறிக்கும் மற்றச் சிலைகளும் உள்ளன.

இடப்புறத்தில் உள்ள மண்டபத்தில், நூற்றுக்கணக்கான ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் பொருட்களை மக்கள் கன்னி மேரிக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கக் கொடுத்துள்ளமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நோய்கள், விபத்துக்கள், போர்கள் மற்றும் கப்பல் விபத்துகளில் இருந்து தங்களைக் குணப்படுத்தியதற்காக அல்லது பாதுகாத்ததற்காக அன்பின் அடையாளங்களாக அவை காட்சி தருகின்றன.

வருட இறுதி நள்ளிரவில் நடக்கும் ஆராதனையைக் காணவும், வருடத்தின் ஆரம்பத்தினைக் காக்கும் தெய்வத்தின் காலடிகளில் தொடங்கவுமாக ஜெனோவா மக்கள் இந்த ஆலயத்தில் கூடுவார்கள்.

-4தமிழ்மீடியரிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.