counter create hit சர்ச்சைக்குரிய டென்மார்க் பரோ தீவின் டால்பின் வேட்டை !

சர்ச்சைக்குரிய டென்மார்க் பரோ தீவின் டால்பின் வேட்டை !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகில் மனித மேம்பாடும், நாகரீகமும், மிகுந்த நாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் டென்மார்க்கின் தீவுகளில் ஒன்றான, ஃபரோ தீவின் கடற்கரை கடந்தவாரம் இரத்தக்களறியானது. அங்கே 1,400க்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டமை பெருஞ் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

இதன் பின்னதாக, டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான ஃபரோ தீவுகளின் பிரதம மந்திரி பர்தூர் ஸ்டீக் நீல்சன் ஒரு அறிக்கையில், செப்டம்பர் 12 ம் திகதி ஃபரோ தீவுகளின் ஐஸ்டுரோய் தீவில் உள்ள கடற்கரையில் 1,400 க்கும் மேற்பட்ட பாலூட்டிகளைக் கொன்றதன், பிறகு "அட்லாண்டிக்கில் வெள்ளை பக்க டால்பின்களைப் பிடிப்பதற்கான விதிமுறைகளை மதிப்பீடு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு அட்லாண்டிக் தீவுகளில் நடந்த மிகப் பெரிய வேட்டை என்று கூறப்படும் 1,428 டால்பின்களைக் கொன்றதாக எழுந்த கூக்குரலின் பின்னணியில் பலமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சுமார் 50,000 மக்கள்தொகை கொண்ட ஃபரோ தீவுகளின் பாரம்பரியங்களில் ஒன்று, "கிரைண்டிராப்" எனப்படும் பைலட் திமிங்கலங்களை வேட்டையாடுவது. வேட்டைக்காரர்கள் முதலில் திமிங்கலங்களை ஒரு பரந்த அரை வட்டம் மீன்பிடி படகுகளால் சுற்றி வளைத்து பின்னர் அவற்றை விரிகுடாவில் கொண்டு சென்று, கடற்கரையில் அவற்றை வேட்டையாடுவார்கள். பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 பைலட் திமிங்கலங்கள் இந்த வழியில் வேட்டையாடப்படுகின்றன. ஆனால் கடந்த வாரத்தில், தீவுகளின் மையத்தில் ஸ்கலாவுக்கு அருகிலுள்ள ஃப்ஜோர்டில் 1,420 க்கும் மேற்பட்ட அட்லாண்டிக் வெள்ளை பக்க டால்பின்கள் வேட்டையாடப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெருங்கோபத்தைத் தூண்டியுள்ளன.

இந்த வேட்டை பாரோ தீவுகளில் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரியது என்று உள்ளூர்வாசிகள் மற்றும் பிரச்சினைக்கு நெருக்கமான ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். முந்தைய வேட்டைகள் ,பொதுவாக சில நூறு முதல் ஆயிரம் வரையிலான பைலட் திமிங்கலங்களை குறிவைத்து நடந்தன.

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, அங்கு நடக்கும் எந்த வேட்டையையும் அங்கீகரிக்கும் பொறுப்பாளர் ஹெரி பீட்டர்சன், உள்ளூர் செய்தி நிறுவனத்திடம், " தனக்கு இந்த வேட்டை பற்றி அறிவிக்கப்படவில்லை, நான் இது தொடர்பில் கோபமாக இருக்கிறேன். அதிலிருந்து என்னை நான் பெரிதும் விலக்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.

இது தவிர பல உள்ளூர் மக்கள் வேட்டையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் விலங்குகளின் உரிமைக்காக வேட்டையை எதிர்க்கத் தொடங்கிய ஃபாரோ தீவுகளைச் சேர்ந்த உள்ளூர் பெண் ஒருவர், சமீபத்திய நிகழ்வால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை நடந்தது முற்றிலும் கொடூரமானது என்றும், இந்த டால்பின் படுகொலை குறித்து தற்போது பெரும் சீற்றம் உள்ளது. இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களை வேட்டையாடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தொண்டு நிறுவனமான சீ ஷெப்பர்ட், தலைவர் அலெக்ஸ் கார்னலிசன் "அரைப்பது எனும் இந்தப் பாரம்பரியம், ஒரு காட்டுமிராண்டித்தனம். உலகம் பூராவும் பரவியுள்ள, தற்போதைய தொற்றுநோயிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொண்டிருந்தால், இயற்கையை அழிப்பதற்கு பதிலாக இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

1980 களிலிருந்து பரோயிஸ் செட்டேசியன் வேட்டைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் சீ ஷெப்பர்ட்டின் ஆர்வலர் வாலண்டினா கிராஸ்ட், இந்த வேட்டைகளுக்கு, நவீன சமுதாயத்தில் இடமில்லை என்று கூறுகிறார். இந்த வேட்டை குறிப்பாக மிருகத்தனமானது. இதில் போதுமான மக்கள் பங்கேற்கவில்லை என்றும், பெரும்பாலான டால்பின்கள் மனிதாபிமானமற்ற முறையில் இறந்துவிட்டன என்றும் அவர், "இது மிகவும் கொடூரமானதாக இருந்தது. கடற்கரையில் வீசப்பட்ட டால்பின்கள் பல உயிருடன் இருந்தன. இந்த விலங்குகளால் தங்கள் வலியை வெளிப்படுத்த முடியாது என்பதால், அவைகள் வலியை அனுபவிக்கவில்லை என்று நாங்கள் கருதமுடியாது " எனக் கூறியிருப்பது முக்கியமானது..

இந்தப் பாரம்பரியத்திலுள்ள ஃபரோஸ் சமூகத்தின் பிரதிநிதிகள் கூட இம்முறை இது தொடர்பில் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். இதை தாங்களாகவே முன்வைத்து விவாதிக்கிறார்கள். இது அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க போதுமானதாக இருக்கும் என்றும், இந்த பிரச்சனையில் ஏற்பட்டிருக்கும் சர்வதேச கவனம் இந்த பாரம்பரியமாகத் தொடரும் இந்த வேட்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் வாழ் உயிரினங்களில் மனிதர்களுடன் மிகுந்த நேசம் பாராட்டுபவை, தீங்கு விழைவிக்காதவை டால்பின்கள் எனச் சொல்லப்படுகின்றன. அவற்றை அழித்து, நமக்கானது இந்தப் பூமி எனக் கூறுகையில் மனித நாகரீகம் பொருளிழந்து போகின்றது.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.