counter create hit ஓங்காரத்தின் மூல கணபதி!

ஓங்காரத்தின் மூல கணபதி!

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பு பலஸார பட்சிதம்
உமாஸுதம் சோகவிநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாதபங்கயம்"

ஆவணி மாத பூர்வ பட்ச சதுர்த்தி திதி வருகின்ற நாள் விக்கினங்கள் தீர்க்கும் விநாயகருக்கு உரிய விரத நன்னாளாகும். அன்றைய தினம் விநாயகப் பெருமானை வழிபடுவது மிகச்சிறப்பானதாகும். அன்றைய நாளில் குளித்து தூய ஆடை அணிந்து விக்கினேஸ்வரப்பெருமானை நினைந்து விரதம் அனுட்டிக்க வேண்டும். இயலாதவர் ஒருபொழுது உணவருந்தி விநாயகரை வழிபாடாற்றுதல் நலமாகும்.

உலக மாதவான பரமசிவன் பத்தினி பார்வதிதேவியே பர்வத இராஜனுக்கு மகளாக அவதரித்த போது சிவனை அடையத்தவம் மேற்கொண்டார். விநாயகருக்குரிய சதுர்த்தி விரதத்தை அனுட்டித்து முறைப்படி மூவர்க்கும் முதல்வராய் உள்ள ஆதிபரம்பொருளாம் விக்கின விநாயகரை பூஜை வழிபாடாற்றி விக்கினேசர் அருளால் சிவனை கணவனாக அடையப்பெற்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தை அநேகர் கைக்கொண்டு விநாயகர் அருட் கடாட்சத்தை பெற்றுள்ளனர்.

பிரணவஸ்ரூவபன் என்றழைக்கப்படும் விநாயகரின் சதுர்த்தி விரதத்திற்கு ஈடானது எதுவுமில்லை என்று புராணங்கள் வாயிலாக அறியமுடியும். சுப்பிரமண்யர் ஒரு முறை தந்தை சிவபிரானிடம் சென்று இவ்வுலகில் சகல பலன்களையும் அளிக்கவல்ல விரதம் எது என்று கேட்க சிவனும் சதுர்த்தி விரதமே அவ்விதமகத்துவம் வாய்ந்தது எனக் கூறினார். குமரனுக்கோ ஆச்சரியம் மேலிட தந்தையே சகல லோகஸ்வரூபியாக தாங்கள் இருக்க தேவாதி தேவர்கள் யாவரும் தங்களை வணங்கி உங்களது அருளை வேண்டி நிற்கின்றனர். அவ்விதம் இருக்கையில் தங்களை குறித்த ஒருவிரதத்தை குறிப்பிட்டு சொல்லாது எனது மூத்த சகோதரன் விநாயகரை குறித்துச் செய்யும் விரதத்தைக் குறிப்பிட்டதன் காரணம் எனக்கு விளங்கவில்லை. இப்படி முருகப்பெருமான் வினா எழுப்ப பரமனும் பதில் கூறினார்.

விளங்கியும் விளங்காமலும் விநா போல் இருப்பவன் ஓங்காரன். அவர் முகமும் தும்பிக்கையும் ஓம் என்பதை விளக்கும். அதனால் ஆச்சரியம் ஒன்றுமில்லை. உன் விநாவிற்கு முடிவும் முதலுமாய் விளங்குபவர் ஆதிமூலகணபதி. அவரே மும்மூர்த்திகளாகிய பிரம்மா விஸ்ணு சிவன் ஆகிய எங்களைத் தோற்றுவித்தார். அவரின் அருளால் எங்கள் காரியங்களை நடத்திச் செல்லும் சக்தி உண்டாகியிருக்கிறது. எத்தனையோ காரியங்களின் நிமித்தம் அவர் அவ்வப்போது பற்பல தோற்றங்களில் தோன்றியிருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான் எனது குமாரனாகத் தோன்றியிருப்பது. ஆகவே முழுமுதற்கடவுளான விநாயகரைக்குறித்து செய்யப்படும் சதுர்த்தி விரதத்திற்கு ஈடானது எதுவுமில்லை. பல அற்புதங்களையும் கணேசரின் மகிமைகளையும் எடுத்துச் சொல்வதில் விநாயகர் எவ்வளவு சக்தியுள்ளவர் என்பது தெளிவாகும்.

ஓங்காரனின் மகிமையை நால்வேதங்கள், பதினெட்டுப்புராணங்கள், உபபுராணங்கள் இப்படி எல்லாவற்றிலும் அவர் சிறப்பை முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. அவரை துதியாது செயப்படும் காரியங்கள் விக்கினங்கள் ஏற்பட்டு நிறைவு பெறாது தடைப்படும். பூவுலகில் சமயம், பக்தி எல்லாம் முன்னைய காலங்களில் குறையும் போது இறையருள் பெற்ற அவதாரபுருஸர்கள் தோன்றுவர். மக்களை வேத விதிகளை மீறி அநீதி வழி நடக்கவிடாது அவர்கள் வழிநடத்திச் செல்லவும் அறியாமையை போக்கவும் பாடுபடுவர். தெய்வசக்தி ஒன்று இருப்பதை ஏற்க மறுப்பவரை நம்பிக்கையை உண்டுபண்ணி அவர்களை நல்வழி நடந்திட உருவாக்குவர். வேதசாஸ்திரங்களை கற்று தெளிந்து அவற்றில் பொதிந்துள்ள அரிய உண்மைக் கருத்துக்களை எடுத்துக் கூறி உலக காரியங்கள் நன்கு நடைபெற வழிவகுப்பர்.

அப்படி பூவுலகில் தர்மம் அழிந்து அதர்மம் உருவாகி மக்கள் தம்போக்கில் வாழத்தலைப்பட்ட காலம் வந்தால் உலகம் நாசமாகும் சூழல் தோன்ற கவலை கொண்ட விஸ்ணுவும் பிரம்மனும் கைலநாதனாகிய பரமசிவனிடம் முறையிட்டனர். பரமசிவனோ நாரயணனே காத்தற்கடவுள் பூவுலகில் மக்களை காப்பது அவர் கடமை என்று அவரிடம் பொறுப்பை விட்டு விட்டார். பூமியில் அவதரித்து சிதறிக்கிடக்கும் வேதங்களை ஒன்று திரட்டி அவற்றை நான்காக வகுத்து முனிவர்களுக்கு உபதேசிகுமாறு தெரிவித்தார். அத்தோடு சனத்குமாரர் முனிவரிடமிருந்து பதினெட்டுப்புராணங்களையும் உபதேசம் பெற்று மக்கள் எளிதில் புரியும்படி படிக்க ஏற்றவாறு அமைத்து உலகிலே பரப்புமாறும் கூறினார்.

இதை ஏற்று விஸ்ணு பகவானும் மகாதபஸ்வியான பராசரமுனிவருக்கும் அழகு வடிவான மச்சந்திக்கும் அதாவது அறிவுஞானமும், அழகுகலையும் ஒன்று சேர மச்சந்தி வயிற்றில் உருவாகி தண்ட கமண்டலங்களுடன் பிறந்தார். பிறந்ததும் தவத்தின் மகிமை சிறந்த தென்று பெற்றோரிடம் விடைபெற்று பத்ரிகாச்சிரமம் சென்று தவம் புரியலானார். ஈஸ்வர கிருபையால் வேதசாஸ்திரங்களைப் பிறரிடம் கற்காது தாமே உணர்ந்து பலவாறு பிரிந்திருந்த வேதங்களை நால் வேதங்களாக இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்று வகுத்து மற்றவர்களுக்கு உபதேசித்தார். அவரே பின்பு சனத்குமார முனிவரிடம் சென்று பதினெட்டு புராணங்களையும் உபதேசம் பெற்றார்.

அவர் தனது பத்ரிகாச்சிரமத்திற்கு திரும்பி வந்து மக்கள் இலகுவில் புரிய ஏற்றவாறு பதின்னெட்டு புராணங்களையும் ஸ்லோகமாக்கும் பணியில் ஈடுபட்டார். ஈஸ்வர அநுக்கிரகத்தால் வேதங்களை தாமே கற்றுணர்ந்தவருக்கு பதினெட்டு புராணங்களையும் (சமஸ்கிருதம்) வடமொழியில் உருவாக்க கோர்வையாக எழுத ஒரு அடி கூட எடுக்கமுடியவில்லை. என்ன காரணம் விளங்கவில்லை. இறைவன் சோதனை செய்ய இது நேரமில்லையே. ஈசன் ஆணை ஏற்றே இங்கு இப்பணியினை செய்யத் துவங்கினேன். இப்படி விக்கினம் ஏற்பட்டு காரியம் கெட ஏதோ முக்கிய காரணம் இருக்க வேண்டும். என நினைத்து நான்முகனைத் தேடிச் சென்றார்.

வேதஸ்வரூபியே பூவுலக மக்கள் நன்மை பெறவேண்டி வேதங்களையும், சாஸ்திரங்களையும், புராணங்களையும் கற்று எளிதில் புரியும் படி ஸ்லோகங்களில் அமைத்து பரப்ப இறைவன் என்னைப்பணித்தார். என்ன காரணம் என்று விளங்கவில்லை பூரணமாக ஒரு ஸ்லோகத்தைக் கூட அமைக்க முடியாது திணறுகிறேன். என்னைச் சூழ்ந்திருக்கும் மாயையின் காரணம் என்ன?

இவ்வாறு பிரம்மனிடம் வியாசர் கேட்டார். சகல வேதங்களையும் கற்றுணர்ந்த உனக்கு இம்முக்கிய விசயம் விளங்க வில்லையே. எல்லா விடயங்களையும் பூரணமாக்கும் பிரணவஸ்ரூபியான கணநாதனை மறந்து விட்டாயே. இடர்களை போக்கி காரியசித்தி அளிக்கும் கருணா மூர்த்தியை நினையாது தொடங்கும் எக்காரியமும் பூர்த்தி அடைவதில்லை. இறைவன் பரமசிவனும் ஓம் என்று தொடங்கும் பிரணவத்தை முன்வைத்தே வேதங்களை ஓதினார். அப்படி மகத்துவம் வாய்ந்த விக்கினேஸ்வரரை நினைத்து உன்காரியத்தை எழுத தொடங்கு. எல்லாம் சித்தியாகும் என்று கூறினார்.

மும்மூர்த்திகளும், இந்திராதி தேவர்களும், முனிவரும் உலகில் உள்ள அனைத்து உயிர்மக்களும் அவரை முதலில் தொழுது வனங்கியே எக்காரியத்தையும் தொடங்குவர். சித்திவிநாயகர் அருளால் சித்தி பெற்று வியாசரும் நன்கு சாஸ்திரங்களை எழுதி உலகில் பரப்பி உய்யும் வழி செய்தார். அதன்படி இன்றும் புராணங்கள் எமக்கு இறை அற்புதத்தை எடுத்தியம்பி ஆன்மிக உணர்வோடு தெளிந்த சிந்தனையோடு அமைதிவழி செல்ல வழிகாட்டுகின்றன. ஆக நாம் இந்த ஆவணிச்சதுர்த்தி நாளில் ஆனைமுகன் தாள் பணிந்து வழிபாடாற்றுவோம்.

"ஆவணிச்சதுர்த்தி நாளில் ஆனைமாமுகன்றன் கோவில்
மூவலம் வந்து சென்னி முட்டியே தெண்டனிட்டு
சேவடித்திறங்கள் பாடித் தியானமும் செய்வீராகில்
தேவரும் காணாலாகாச் சிவநிலை சேரலாமே"

 

-4தமிழ்மீடியாவிற்காக அருந்தா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.