counter create hit வேடுவர் சீர் கொணர்ந்த வெருகல் சித்திர வேலாயுதர் !

வேடுவர் சீர் கொணர்ந்த வெருகல் சித்திர வேலாயுதர் !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் அமைந்துள்ள, அழகிய முல்லைக்கிராமம் வெருகல்.

மகாவலிகங்கையின் வற்றாத நீர் வளத்தால், எங்கும் பச்சை வண்ணம் போர்த்தியிருக்கும் பசுமைப்பூமி. இயற்கை வளம் மிகுந்திருந்ததால் மட்டும் வெருகல் சிறப்புப் பெற்றிருக்கவில்லை. மகாவலியின் தீரத்தில், வேலாயுதப்பெருமானாக வீற்றிருக்கும், சித்திரவேலாயுதசுவாமி கோவிலாலும், அதன் அருட்பெருமையாலும் கூடப் பெருமைபெற்றது வெருகல்.

இலங்கையின் வடபுலத்திலோ, அல்லது பிறபாகங்களிலோ, கடல்கடந்து தமிழகத்திலோ, கதிர்காமம் பெற்றிருந்த முக்கியத்துவம் வெருகல் முருகனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கதிர்காமக் கந்த கோட்டம் போன்றே, சக்தி வாய்ந்த ஒரு தமிழர் திருத்தலம் வெருகல். கிழக்கு மகாணத்தின் திருப்படைக் கோவில்கள் என்ற சிறப்புப் பெற்ற முருகதலங்களில் ஒன்றாக அமைவது வெருகல். இது ஆறுபடைவீடு எனும் பொருளில் அல்லாது, முருகனின் வேற்படை ஆயுதம், கருவறையில் எழுந்தருளிய கோவில்கள் எனும் வகையில் முக்கியம் பெறுவதாகும். அந்தத் தலத்தில் பல வருடங்களின் முன் கண்ட சமய விழுமியத்தை இங்கு ஒரு பண்பாட்டுக்கோலமாகக் காணலாம்.

 

இப்போதுள்ள வசதிகள் பலவும் இல்லாதிருந்த காலமது. மிகுந்த அமைதியாக இருக்கும் வெருகல் கிராமம், ஆவணி மாதம் வந்தாலே குதுகலம் கொள்ளத் தொடங்கிவிடும். சனங்களின் நடமாட்டத்தில் அதிகரிப்பு, தற்காலிக கொட்டில் கடைகள், தற்காலிக கழிவறைகள், என மெல்ல மெல்ல மெருகு சேரும்.

ஆம், இம்மாதத்தில்தான் வெருகல் பதியுறை சித்திரவேலாயுதசுவாமி கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதா நாள் காலையில், மகாவலி கங்கையில் தீர்த்தம். இந்த இருநாட்களும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பின் கொட்டியாரப்பற்றே வெருகலில் திரண்டு வந்திருக்கும். இருநாட்களும் விசேடமானவையே. அதில் பதினெட்டாம் நாள் நள்ளிரவில் நடைபெறும் அந்த வைபவம் சிறப்புமிக்கது. பல ஆண்டுகளின் முன் நாம் கண்ணுற்றி அந்தக் காட்சி வேறெங்கும் காணதது.

இறைவனை தாயாக, தந்தையாக, தலைவனாக, குழந்தையாக, வழிபட்ட சமய மரபில், கடவுளை மருமகனாக போற்றிய வழிபாட்டின் நீட்சியாக அமைந்த சடங்கு அது. தமிழகத்தில் வைனவசந்திகள் சிலவற்றில், பெருமாளை மருமகனாகக் கொண்டாடும் குலக்குடிகள் உள்ளதாக அறிந்துள்ளோம். அது போலவே இலங்கையின் கிழக்கில், முருகனை மருமகனாகக் கொண்டாடிப் பக்தி செய்யும் வழக்கம் உள்ளது. அந்த வழக்கத்தின் வழியான பண்பாட்டுக் கோலமாக அமைந்திருந்தது, வேடுவர் குலப் பெண்ணான வள்ளியை மணம்புரிந்ததனால், வேடுவர் குலத்துக்கு மாப்பிள்ளையாகிய முருகனுக்கு, காட்டிலுறை வேடுவர்கள் சீர் கொண்டுவரும் சிறப்பான அந்த வைபவம். உண்மையில் அப்போது வெருகல் காட்டுப்பகுதியில் வேடுவ சமூகம் சொற்ப அளவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதுபோல் பிபிலை காடுகளிலும் வாழ்ந்தனர். இவ்விதம் வேடுவர்கள் சீர் கொண்டு வருவார்கள் என்பதை ஆவலோடு மக்கள் காத்திருந்தார்கள்.

நள்ளிரவு ஆகிற்று. ஆலயத்தில் பூசைகள் எதுவும் தொடங்கவில்லை. ஏனெனில் வேடுவர்கள் கொண்டுவரும் சீர்ப் பொருட்களிலிருந்துதான் அன்றைய பூசைக்குத் தேவையான முக்கிய பொருட்கள் எடுக்கப்பெறும் என்றார்கள். ஆலயவாசலில் கோவில் பணியாளர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்க, வேண்டிய உபசாரங்களுடன் காத்திருந்தார்கள். மக்கள் கூட்டம் காட்டுப்பகுதியை, நோக்கிய வண்ணமேயிருந்தார்கள். பறைகளின் அதிர்வொலி கேட்கத்தொடங்கின. காரிருளில் கறுத்திருந்த வனத்திடையே சின்னச் சின்ன ஒளிச்சிதறல்கள் தெரிந்தன. தீப்பந்தங்களின் ஒளி தெளிவாகத்தெரியத் தொடங்க மக்கள் கூட்டம் காட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்தது. காட்டிலிருந்து பிரகாசமான தீப்பந்தக்களுடனும், அதிரும் கொட்டுப் பறைகளுடனும், வேடுவர்கள் வெளிபட்டனர்.

மேலங்கி அற்ற, முழங்காலுக்கு சமீபமா உயர்த்திக்கட்டிய உடுதுணி, கையில் கம்பு, என்பவற்றுடன் எட்டு அல்லது பத்துப்பேர்கள் வரையில் வந்தார்கள். ஒருவருடைய தலையில் ஒரு துணியால் மூடிக்கட்டிய பெட்டி இருந்தது. அதுதான் சீர்ப்பெட்டி என்பது சொல்லாமலே புரிந்தது. மிக வேகமாக நடந்து வந்தவர்களை, ஆலய பணியாளர்களும், எதிர்கொண்டழைத்துச் சென்றார்கள். ஆலய வாசலில் வைத்து, வந்தவர்களின் கால்கள் கழுவப்பட்டு, ஆலயத்துள் அழைத்துச் சென்றனர். ஆலயத்தின் உட்பகுதிக்கு அவர்கள் சென்றதும், இடைக்கதவு மூடப்பட்டது. அதன்பின் உள்ளே நடப்பது எதுவும் நாங்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயத்தின் வழக்கமே அதுதான். அபிஷேகமோ, பூசையோ, எதுவும் வெளியாட்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயப் பணியாளர்களிலும் உரித்துடைய ஒரு சிலர் மட்டுமே உள்ளே செல்ல முடியும். பூசைகள் எல்லாம் முடிந்து, சுவாமி வீதிவலம் வரும்போது மட்டும் பார்க்க முடியும். அதுவும் கதிரகாமம் போன்று ஒரு பெட்டியை, வெள்ளைத் துணியால் யானை போன்ற பாவனையில் மூடி எடுத்துவருவார்கள். ஒரு சொற்ப நேரத்துக்குள் வீதிவலம் முடிந்துவிடும். ஆனால் அந்தச் சொற்ப நேரத்துக்குள் அத்துனை மகிமை நிறைந்திருக்கும்.

 

இப்போ வேடுவர் கொண்டு வந்த சீர்ப் பெட்டிக்குள் என்ன இருந்திருக்கும் என்பதை அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதல்லவா? ஆன்றைய பொழுதில் நமது ஆர்வமும் அப்படித்தான் இருந்தது. கோவில் பெரியவர் ஒருவரிடம் விசாரிக்க, அவர் சொன்ன பதில், தேன், தினைமா, வள்ளிக்கிழங்கு, ஈச்சம்குருத்து, நாவல்பழம், அல்லிப்பூ, என்ற ஆறு பொருட்களே வேடுவர் தங்கள் மாப்பிள்ளை முருகனுக்கு கொண்டு வரும் சீர்ப்பொருட்கள் என்றார். அறுமுகனுக்குப் பிடித்த அத்தனையும் இருக்கிறதே. இதுவல்லவோ இணையற்ற சீர்வரிசை என எண்ணத் தோன்றியது. பிற்காலத்தில், வேடுவர்கள் அருகி விட்டபோதிலும், ஊரவர்களைக்கொண்டே இந்நடைமுறை பின்பற்றப்பட்டதாக பின்னாட்களில் அறிந்தேன். இநத் வழக்கம் இப்போதும் தொடர்கிறதா என்பது அறியேன்.

வெருகல் சித்திர வேலாயுதர் ஆலயம் ஆகமக் கோவிலாக அப்போதே மாற்றம் பெற்றுவிட்டது. ஆயினும் மகிமையுறு யந்திர வடிவிலான சித்திர வேலாயுதருக்கு தனியான சிறு ஆலயம் அருகினிலேயே இருந்தது. இப்போது கோபுரத்துடன் எழுந்திருக்கும் கந்தக் கோட்டத்தின் ஆகம வழிபாடுகளின் போதும் இந்த மரபுகள் தொன்மங்கள் தொடரும் என்றே நம்புகின்றோம்.

இன்று வெருகல் சித்திர வேலாயுதர், மகாவலி கங்கையில் தீர்த்தமாடும் அருளாட்சித் திருநாள் !

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.