counter create hit இலங்கை சிவாச்சார்யார்கள் இருவருக்கு தமிழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது !

இலங்கை சிவாச்சார்யார்கள் இருவருக்கு தமிழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை சைவ சமய குரு மரபில் பிரகாசிக்கும் இரு குருமார்கள் தமிழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகின்றார்கள்.

உலகளாவிய சிவாச்சார்யர்களின் இணையவழிப் பெருவிழாவாக 11.06.2021 வெள்ளிக்கிழமை (இன்று) முதல் 13.06.2021 ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தின் மயிலாடுதுறையை தலைமையகமாக கொண்டு இயங்கும் சிவபுரம் குளோபல் சிவாகம அகாதமி நிறுவன ஆண்டு விழா நிகழவுள்ளது.

இத் தொடர் விழா,வேதாகம மரபில் பணி ஆற்றும் சிவமறையோர், சிவ வேதியர், சிவப்பிராமணர் என்றெல்லாம் இலக்கியங்களில் பலவாறாகப் போற்றப்படுபவர்களும், தாம் சிவ வழிபாட்டாற்றுவதோடு பிறரையும் சிவ வழிபாடு செய்ய ஆற்றுப்படுத்துபவர்களுமான சைவ சமய குருமார்கள், அர்ச்சகர்களின் ஒருங்கிணைப்பு விழாவாக இணைய வழியில் முன்னெடுக்கப்படுகிறது.

இன்றைய கால சூழலை கருத்தில் கொண்டு இணைய வழியில் உலகளாவிய சைவ சமய குருமார்களை ஒன்றிணைக்கும் பெருமுயற்சியாகவும் அமையும் இவ்விழா, நான்கு அமர்வுகளாக நிகழவுள்ளது. இந்நிகழ்வில் சைவ உலகம் வணங்கும் முக்கியமான ஆதீனங்களின் மகாசந்நிதானங்கள் பலரும் கலந்து ஆசி வழங்குகிறார்கள். உலகளாவிய நிலையில் புகழ் பூத்த சைவாச்சார்யர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பவர் தருமை மற்றும் துறைசை ஆதீன அபிமானத்திற்குரிய பாடசாலை முதல்வரான சிவஸ்ரீ. ஏ.வி. சுவாமிநாதசிவாச்சார்யர் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த நான்கு அமர்வுகளிலும் உலகறிந்த ஏழு பெரும் சிவாச்சார்ய ஆளுமைகள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். அவர்களில் இருவர் இலங்கையைச் சேலர்ந்தவர்கள் என்பது ஈழத்துச் சைவப் பெருமக்களுக்கான பெரு மகிழ்வும், சிறப்புமாகும்.

மொடேர்ன் இந்து ஆகம கலாச்சார நிறுவன ஸ்தாபகர், சிவாகமகலாநிதி, சுன்னாகம் சிவஶ்ரீ:நா.சோமாஸ்கந்தக்குருக்கள்,

இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர், சிவஶ்ரீ. தா. மகாதேவக்குருக்கள், ஆகியோர் விருதுபெறும் இலங்கைக் குருமார்கள்.

மயிலாடுதுறை சபேச சிவாச்சார்யார், காஞ்சி ராஜப்பா குருக்கள், சீர்காழி கண்ணப்ப சிவாச்சார்யார் , மதுரை தங்கம் பட்டர், இலண்டன் நாகநாதசிவம், ஆகியோலர் விருது பெறும் மற்றும் ஐந்து சிவாச்சார்யர்கள். பல பேராசிரியர்களும் அறிஞர்களும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து, நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களும் புகழ் பூத்த அறிஞர்களான கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களும் கலாநிதி. ஆறு திருமுருகன் அவர்களும், இளங் சிவாச்சார்யரும், அரச அலுவலகருமான சிவஶ்ரீ. தி. மயூரகிரி சிவம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

சைவ சமய குரு மரபில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த பல குருமார்களும் இந்நிகழ்வில் சிறப்புரை, தலைமையுரை, வாழ்த்துரை, தொடக்கவுரை முதலியவற்றை நிகழ்த்துகிறார்கள். தமிழகத்திற்கு அப்பால் ஆயிரமாயிரமாண்டு காலம் ஆகம வழிபாடுகள் நிகழும் பழைமையான தேசமான இலங்கைச் சிவாச்சார்யர்களுக்கு அளிக்கப்படும் கௌரவம், ஈழத்துச் சைவ மரபிற்கான கௌரவம் என சைவப்பேரூலகம் உவகை கொள்ளலாம்.

நிகழ்வை நேரலையில் காண முகநூல் முகவரி மற்றும் இணைய முகவரியான
http://Www.facebook.com/sgsaacademy
http://Www.sgsaacademy.com என்பன விழா ஏற்பாட்டுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளன.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula