இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், 10 ஆம் நிலை வீரராக களமிறங்கிய ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர்.
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மற்றும் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவனும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இறுதிவரை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவன் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக தீபக் சாஹர் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.
Comments powered by CComment