பீகாரில் 2020 சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன.
நிதிஷ்குமார் அமைச்சரவையில் 16 பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றனர். பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் நேற்று அறிவித்தார்.
அதன்பின்னர் கவர்னர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் கொடுத்தார். பாஜகவை விட்டு விலகி வந்த ஜேடியூவுக்கு ஆர்ஜேடி,காங்கிரஸ்,இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல்வராகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் மீண்டும் ஆளுநரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார் .இதனிடையே பாட்னாவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார்.துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.
Comments powered by CComment