இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை 96 நாடுகள் ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 110 கோடி 'அளவு' செலுத்தப்பட்ட எண்ணிக்கையை அண்மித்துள்ளது. இந்நிலையில் பிற நாடுகளுக்கு பயணிக்கவிருக்கும் பயணிகளுக்கான தடைகளை அகற்றும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் 96 நாடுகள் இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழை ஏற்பதற்கு முன்வந்துள்ளன.
இதன்தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தபோது முக்கிய காரணங்களுக்காகவும் சுற்றுலா செல்லவும் நம்மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளுடன் நமது நாட்டால் வழங்கும் தேசிய அளவிலான தடுப்பூசி சான்றிதழை ஏற்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 96 நாடுகள் நமது சான்றிதழை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்து உள்ளதாக கூறினார்.
96 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், கஜகஸ்தான், ரஷ்யா, இலங்கை, மாலத்தீவுகள், பிரேசில், அர்ஜென்டினா, நேபாளம், குவைத், கொலம்பியா, ஈரான், கத்தார், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் அடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.
மேலும் 'கோவின்' இணையதளத்தில் வெளிநாடு செல்ல விரும்புவோர் சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment