தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
முறையான படிமுறை வழிமுறை தொடர்பான சுற்றறிக்கை சகல பிரதேச சபை பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சேவையை பெற்றுக்கொள்ள தேவையுடைய நபர்கள் கிராம சேவகர் அலுவலரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத நபர் இந்த விசேட வழிமுறைக்கு அமைய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள கிராம சேவகர் பிரிவில் நிலையான பதிவு பத்திரம், வாக்காளர் இடாப்பு பதிவு,பிறப்புச்சான்றுப்பத்திரம் பெற்றுக்கொள்ளாததற்கான காரணம், உள்ளிட்ட விடயங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அத்துடன் அந்த நபர் 40 வயதை அண்மித்த இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்.
பெயர் மற்றும் பிறந்த தினம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத சந்தர்ப்பத்தில் விண்ணப்பதாரியின் பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம் மற்றும் முகவரி ஆகியவற்றை உள்ளடக்கிய விண்ணப்ப கோவை ஒன்றை கிராம சேவகர் தயாரிக்க வேண்டும்,அந்த தகவல் கோவை பிரதேச சபை செயலாளரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் தேசிய அடையாள அட்டை கோரும் விண்ணப்பதாரியின் நெருங்கிய உறவினரின் தகவல்கள் மற்றும் விண்ணப்பதாரியின் ஏனைய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.அத்துடன் தேசிய அடையாள அட்டை உள்ள மூவர் விண்ணப்பதாரியின் ஆவணங்களுக்கு சாட்சியமளித்தல் கட்டாயமாகும்.
40 வயதை அடைந்தும் பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாத நபர் தமது பிள்ளைகளின் பிறப்புச்சான்றிதழ் பத்திரம்,பாடசாலை விடுகை சான்றிதழ் பத்திரம்,சுகாதார வளர்ச்சி நாளேடு,தோட்ட பிறப்பு ஆவணம்,திருமணமாகியிருந்தால் திருமண பதிவு சான்றிதழ் இந்த பத்திரங்களில் ஒன்றையாவது சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கையரல்லாத பிரஜை அல்லது பிறப்பு சான்றிதழ் பத்திரம் உள்ள நபர் இந்த வழிமுறைகளை பயன்படுத்தி முறைகேடான வகையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கிராம சேவை அலுவலர்,பிரதேச செயலாளர் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

Comments powered by CComment