counter create hit மூலிகை அறிவோம் - அதிவெப்பம் தணிக்கும் "அதிமதுரம்"

மூலிகை அறிவோம் - அதிவெப்பம் தணிக்கும் "அதிமதுரம்"

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பெயருக்கேற்றாற் போலவே மதுரச் சுவையைக் கொண்டு பற்பல வெப்புப் பிணிகளை தீர்க்கவல்ல அதிமதுரம் பற்றி இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
குறிப்பு:- அதிமதுரம் கிடைக்கப் பெறுவது அரிதாகையால் இதனுடன் குன்றிவேரை கலப்படம் செய்து கடைகளில் விற்கின்றனர். அதிமதுரம் வெளியே பழுப்பு நிறத்திலும் உள்ளே இளமஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

தாவரவியல் பெயர்- Glycyrrhiza glabra
குடும்ப பெயர்- Fabaceae
ஆங்கிலப் பெயர்- Licorice , Liquorice
சிங்கள பெயர்-Velmee veni
சமஸ்கிருத பெயர்- Yashti-madhukam
வேறு பெயர்கள்-
அதிங்கம், அட்டி (அஷ்டி), மதூகம்

பயன்படும் பகுதி- வேர்

சுவை- இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Glycyrrhizin, Triterpene saponin, Glycyrrhetinic acid, Aglycone of glycyrrhizin Isoflavonoids, Chalcones, gums, Coumarins, Triterpenoids, Amino Acids, Amine, Volatile oil, Sterols, ligans

மருத்துவ செய்கைகள்-
Antiallergic - அழற்சி அகற்றி
Anti diabetic - நீரிழிவை கட்டுப்படுத்தல்
Anti-inflammatory - தாபிதமகற்றி
Anti stress - மனவழுத்தத்தை குறைக்கும்
Anti ulcer- குடற் புண்ணை அகற்றும்
Demulcent- உள்ளழலாற்றி
Emmenagogue -ருதுவுண்டாக்கி
Emollient- வரட்சியகற்றி
Expectorant- கோழையகற்றி
Laxative- மலமிளக்கி

தீரும் நோய்கள்-
இதனால் திரி தோஷப்புண், தாகம், கண்ணோய், உன்மாதம், விக்கல், வலி, வெண் குட்டம், பித்தம், எலும்புருக்கி, சிறுநீர் எரிச்சல், மூர்ச்சை, விடபாகம், வெப்பு, வாதசோணிதம், காமாலை, சர்வவிடம், காமியநோய், தாதுநட்டம், சோபை, இதழ்நோய், ஆசியநோய், குத்திருமல், குய்யப்புண், சிரநோய், வாயுநோய், வெட்டுக் காயப்புண் முதலியன போம்.

பயன்படுத்தும் முறைகள்-
அதிமதுரச்சத்து செய்யுமுறை
அதிமதுரம் 350g ஐ 1 L நீரில் 12 மணிநேரம் ஊறவைத்து இறுத்து வடிகட்டிய திப்பியை, மறு படியும் 150 ml வெந்நீரில் 6 மணிநேரம் ஊறவைத்து இறுத்து, முன்னெடுத்துள்ள நீருடன் கலந்து, மெழுகுபதமாய்ச் சுண்டவைத்துக்கொள்க.
அளவு. 1-2 g
இதன் சத்தை மூசாம்பரம், நிலவாகை இவைகளைக் கொண்டு செய்கின்ற மருந்துகளின் அருவருப்பை நீக்க, உபயொகிக்கலாம். அவைகளின் வீரியமும் குன்றாது.

வேர்
தேக அனல் தணிய, அதிமதுரம் 17g எடுத்து வெந்நீரில் அரைத்துக் கலக்கி வடிக்கட்டிக் காலை மாலை கொடுக்கலாம்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு சமனெடை இள வறுப்பாய் வறுத்துச் சூரணம் செய்து, கலந்து 4-6g வராகனெடை தேனில் கொடுக்கலாம்.

மஞ்சட்காமாலைக்கு அதிமதுரம், முட் சங்கன் வேர்ப்பட்டை இவ்விரண்டையும் சமனெடை எடுத்து தேசிப் பழச்சாற்றால் மூன்று நாள் அரைத்து, 500 mg மாத்திரை செய்துலர்த்தி வைத்துக்கொண்டு, இதைப் பாலுடன் ஒரு நாளைக்கு இருதடவை எடுக்கலாம்.

கர்ப்பவதிகளுக்குக் காணும் உதிரம் நிற்க அதிமதுரம், சீரகம் வகைக்கு 13 g இவைகளை இடித்துக் 250 ml நீர் விட்டு, அரைவாசியாக காய்ச்சி காலை மாலை 3 அல்லது 4 நாள் கொடுக்கலாம்.

வயிற்றில் மரித்த பிள்ளை விழ அதிமதுரம் 35g, தேவதாருக் கட்டை 35g வெந்நீர் விட்டரைத்து, 17g வீதம் தினத்திற்கு இருவேளை, வெந்நீரிற் கலக்கிக் கொடுக்கலாம்.

பேதியாக அதிமதுரம் 100g, திராக்ஷை உப்பு 32g சிதைத்து 700 ml நீரில் சேர்த்து, கால்வாசியாக சுண்டவைத்துக் கொடுக்கலாம்.

கண் ஒளிபெற அதிமதுரத்தை முலைப்பால் விட்டரைத்துக் கண்ணிலிடலாம்.

அதிமதுர லேகியம்
அதிமதுரம் 72 g, பசும்பால் 700 ml, பசுவின் நெய் 700ml, பழுப்புச்சருக்கரை 700g இவைகளை முறைப்படி இலேகியம் செய்து, 5g தினமிருவேளை கொடுத்துவர, சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

அதிமதுரச் சூரணம்
அதிமதுரம், சோம்பு, சருக்கரை வகைக்கு 35g கொடிவேலி வேர்ப்பட்டை 17g இவைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி மாதம் வரை சாப்பிட்டுவர, நோயணுகாது. தலை வலி, ஒற்றைத்தலைவலி, தீராத்தலைவலி, சுரம் தீரும். கண்கள் ஒளி பெறும்.

வரட்சி, தோடம்
அதிமதுரம் 35g, ஈய பற்பம் 4g தேன்விட்டரைத்துக் கொம்புச் சிமிளில் அடக்கஞ்செய்து வைத்துக்கொண்டு, சிறிது எடுத்து நாக்கில் தடவிவர, மேற்படி தோடம் முதலியன தீரும்.

இருமலுக்கு அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்த சாற்றை விழுங்க, இருமல் தணியும்.

~சூர்யநிலா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.