counter create hit லொகார்னோ திரைப்படவிழாவில் தெரிவாகும்/வெற்றி பெரும் குறுந்திரைப்படங்கள் எப்படியானவை?

லொகார்னோ திரைப்படவிழாவில் தெரிவாகும்/வெற்றி பெரும் குறுந்திரைப்படங்கள் எப்படியானவை?

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த வருடம் நடைபெற்று முடிந்த 76வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்கள் பிரிவில் வெற்றி பெற்ற மூன்று திரைப்படங்களை பற்றி இப்பதிவில் எழுதுகிறேன்.

 Classical Naration என சொல்லப்படும் ஜனரஞ்சகம் கூடிய ஒரே நேர் கோட்டில் அமையும் எந்தக் திரைக்கதையும் அவர்கள் இலகுவில் தெரிவு செய்யமாட்டார்கள். சினிமாக்களில் இதுவரை யாரும் செய்திடாத முயற்சிகளாக, புதிய புதிய கோணங்களில் யோசித்து, காட்சி அமைப்பிலும், கதை அமைப்பிலும், இதை எப்படி செய்திருப்பார்கள் என எம்மை பிரமிக்க வைக்கும் திரைக்கதைளே பெரும்பாலும் அவர்கள் தெரிவாக அமையும். அதாவது தொழில்நுட்ப நேர்த்தியை சொல்லவரவில்லை. அவர்கள் கற்பனை நேர்த்தியை, எண்ணங்களை காட்சி ஊடகத்தில் எப்படி இலகுவாக கொண்டுவர முடியும் என முயற்சிக்கும் நேர்த்தியை சொல்கிறேன். அது தவிர, இலகுவில் திரைக்கு கொண்டுவரத் தயங்கும் மிக அந்தரங்கமான விடயங்களை திரைக்கு மிக லாவமகாக கொண்டுவரும் திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதுபிடித்திருக்கிறதோ இல்லையோ, புரிகிறதோ இல்லையோ, அந்த படங்களை, அதில் வந்த காட்சிகளை இலகுவில் மறந்துவிட மாட்டோம்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் லொகார்னோ குறுந்திரைப்பட விழாவில் 53 நிமிடம் கொண்ட ஒரு குறுந்திரைப்படம் ஒன்றை பார்த்தேன். The First Time என்பது அதன் பெயர். இதைப்பற்றி ஏற்கனவே இப்பதிவில் எழுதியிருக்கிறேன்.

ஜேர்மனியின் ஒரு ரயில் பயணத்தில் அறிமுகம் இல்லாத இரு இளம் வாலிபர்கள் நேர் எதிரில் அமர்ந்திருப்பார்கள். அவர்களிடம் எந்தவொரு உரையாடலும் இருக்காது. சுற்றிவர பல இனந் தெரியாத பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் பின்னால் சாரளத்தின் ஊடாக ஜேர்மனியின் பெருநகர மெட்ரோ தரிப்பிடங்கள் வந்து போகும். 52 நிமிடம் கழித்து, ஒரு தரிப்பிடத்தில் இறங்கும் முன்னர், « உனது டீ-ஷேர்ட் நன்றாக இருக்கிறது » என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு இறங்கிவிடுவார் நேரெதிரில் இருந்த அந்த ஒரு இளம் வாலிபர். 52 நிமிடங்கள் பொறுமையாக பார்த்திருந்தால் தான், அந்த ஒற்றை வரியின் சுவாரஷ்யமும், அதில் உள்ள ரசனையும் உங்களுக்கு புரிந்திருக்கும். படம் தொடங்கி பாதி வழியில் பல பேர் திரையரங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அந்த கடைசி வரியின் இரசனையையும், அதுவரை அவர்கள் இருவரிடமும் ஏதோ ஒரு இனம்புரியாத உறவு இருந்ததும், படத்தை முடியும்வரை பார்த்திடாமல் சென்றவர்களுக்கு உணரும் பாக்கியம் இருந்திருக்காது.

 

வென்ற குறுந்திரைப்படங்களின் கதைக்கரு!

இம்முறை போட்டித் திரைப்படங்களில், சுவிஸ் பிரிவில் வெற்றி பெற்ற குறுந்திரைப்படம் Lea Bloch இன் LETZTE NACHT (Last Night). அவருக்கே, சுவிஸ் சினிமாவின் சிறந்த புதுமுக இயக்குனர் விருதும் கிடைத்தது.

கதைச் சுருக்கம் இது தான். நண்பர்களுடன் முதல் நாள் பார்ட்டி முடித்துவிட்டு, மறுநாள் காலை, முதல் நாளிரவில் நடந்ததை அசைபோடும் இரு நண்பர்கள் குழு. ஒரு குழுவில் அனைவரும் இளம் பெண்கள். மறுகுழுவில் அனைவரும் இளம் ஆண்கள். 18-25 க்குள் தான் அனைவருக்கும் வயதிருக்கும்.

தனித்தனியாக இரு வீடுகளிலும் நடக்கும் இக்கலந்துரையாடல்களை Alterne எடிட்டிங் வகையில் மாறி மாறி காண்பித்திருக்கிறார்கள்.

 «முதல் நாளிரவு, அவனுடன் சென்று உறவு வைத்துக் கொண்டாயே, எப்படி இருந்தது என சக தோழிகள் கேட்க, தயங்கித் தயங்கிச் சொல்லத் தொடங்கியவள் படத்தின் கதாநாயகி. « ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது. என்னை அவன் பலாத்காரப் படுத்தியது போலவே உணர்கிறேன் » என்பாள் அவள்.« நீயாகத் தானே பார்டி முடித்து அவன் வீட்டுக்கு போனாய் » என நண்பர்கள் கேலி செய்ய, « கட்டில் வரை அப்படித் தான் சென்றேன். ஆனால் என்னை மீறி, என் அனுமதியை மீறி அவனே பலாத்காரமாக நடந்து கொண்டான். என்னை பொருத்தவரை அதை வண்புணர்வாகவே கருதுகிறேன் » என்பாள் அவள்.

« குடி போதையில் இருந்ததால், என் சிந்தனை விழிப்பில் இருக்கவில்லை. அவனை புணர்வுக்கு அனுமதித்துவிட்டேன் » என மனமுடைந்து சொல்வாள். குறுந்திரைப்படத்தின் அடுத்து 10 நிமிடங்களும், இரு நண்பர்கள் குழுவிலும் பெருமையாக பேசத் தொடங்கிய பாலியல் உணர்வு அனுபவம், எப்படி ஒருவரின் அனுமதியின்றி, இன்னுமொருவருக்கு வன்புணர்வாக மாறிச் செல்கிறது என அந்த நண்பர்கள் குழுவில் ஒவ்வொருவரும் உணர்ந்து குறுகிப் போகும் வரை தொடர்கிறது. கட்டில் வரை விரும்பி சென்றாலும், பாலியல் உறவு, அது நடைபெற்று முடிவும் வரை ஒவ்வொரு செக்கனும், அதில் ஈடுபடும் இருவரின் சம்மதமும், comfortable ஆக உணரும் எண்ணமும் மறுபரிசீலினை செய்து கொண்டே இருக்கவேண்டியது எனும் கருத்துடன், அதை நோக்கிய கேள்விகளை கேட்டபடி முடிவடைகிறது இக்குறுந்திரைப்படம்.

சர்வதேச போட்டிப் பிரிவில் விருது வென்ற குறுந்திரைப்படங்களில் ஒன்று, ஜேர்மனிய குறுந்திரைப்படம்.

DU BIST SO WUNDERBAR.

 Leandro Goddinho மற்றும் Paulo Menezes இரு இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய இக்குறுந்திரைப்படம், ஜேர்மனி/பிரேசில் கூட்டுத் தயாரிப்பு.

பேர்லின் நகரில் வீடுகளின் வாடகை மிக மிக உயர்ந்துவிட்டது. கட்டுப்படியாகவில்லை என அண்மையில் பல இளைஞர்கள் குழு போராட்டங்கள் நடைபெற்றன. வீதிக்கிறங்கி போராடியிருந்தனர். அந்த போராட்டம் நடைபெறும் களத்தில், அதே காலத்தில், இன்னமும் இரு நாட்களில் வீடிழக்கப்போகும் பிரேசிலிய நாட்டு இளைஞன் ஒருவன், வீடு தேடி அலைவதே திரைக்கதை. கைக்கடக்கமான செல்போனில் எடுத்தது போல் காட்சி அமைப்பை எடுத்திருப்பார்கள். அவன் வீடு தேடிப் போகும் இடங்கள் அனைத்திலும், வெளிநாட்டவர்களை கேலி செய்வதும், வீட்டின் அறையின் வாடகையை மிக மிக அதிகமாக காண்பிப்பதும், வீட்டின் அறைகளின் குப்பைகளை காண்பிப்பதுமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் மாற்றுச் சிந்தனையாளர்களாக, கலைஞர்களாக வருபவர்களின் வீட்டு அறைகளில் இவன் தங்க உதவி கேட்பதும், அவர்கள் கூட ஒரு கட்டத்தில் இவனுக்கு பாரபட்சமாக நடந்து கொள்வதும், காண்பிக்கப்படுகிறது.

பிரேசிலில் இறந்து கொண்டிருக்கும் தன் தந்தையையும் காப்பாற்ற முடியாமல், அவரை பற்றி தகவல் எதுவும் தெரியாமல் தடுமாறுவதும், தனக்கான மருத்துவ காப்புறுதி பணம் கூட தான் வேலை செய்யும் Amazon தளத்தினால் கிடைக்காமல், மருத்துவ உதவிக்கு செல்ல முடியாமல் வயிற்று வலியில் அலைவதும், இறுதியில் ஒரு பணக்கார இளம் ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும், ஒரு Queer சமூகத்தின் கேலிக்கை விடுதி ஒன்றில் அவர்கள் பாலியல் உறவின் மிச்ச மீதிகளை துடைக்கும் தொழிலில் இரவை கழிப்பதுமாக அவன் கடைசிப் பார்வை கமெராவை பார்க்க படம் முடிவடைகிறது.

 பேர்லின் போன்ற பெரும் ஐரோப்பிய நகரங்களில் வெளிநாட்டவனாக, வேலை தேடி இடம்பெயர்ந்து, வீடின்றி தெருக்களில் அலையும் இளைஞர்களை அப்படியே மிக யதார்த்தமாக வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது இக்குறுந்திரைப்படம். பார்த்து முடிவடையும் போது வாழ்வின் மிக விளிம்பிநிலையில் இருக்கும் வெளிநாட்டு ஆண் இளைஞர்களின் மீதான பரிதாபம் பெரும்மூச்சாக வெளியாகிறது.

இதே போட்டிப் பிரிவில் வென்ற திரைப்படங்களில் இன்னுமொரு குறுந்திரைப்படம் Eric K. Boulianne இயக்கத்தில் உருவான FAIRE UN ENFANT (குழந்தை ஒன்றை உருவாக்குவது எப்படி?).

இரு நடுத்தர வயது காதல் ஜோடியினர் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காக எவ்வளவு தடவை பாலியல் உறவு முயற்சித்தும், அதை பல்வேறு கோணங்களில், பல்வேறு வடிவங்களில் முயற்சித்தும், குழந்தை பிறப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லாது, இருவரும் பிரியும் நிலைக்கு செல்கின்றனர் என்பதனை நகைச்சுவையுடன் காண்பித்த ஒரு கனேடிய திரைப்படம்.

 

Hilke Rönnfeldt உருவாக்கிய EN UNDERSØGELSE AF EMPATI (A STUDY OF EMPATHY)

மற்றுமொரு குறுந்திரைப்படம், ஒருவர் மீதான இரக்கம் என்பது என்ன, இரக்கத்தின் அளவு கோள் என்ன என்பதனை விஞ்ஞான ரீதியில் அளந்து பார்க்க, முயற்சிக்கும் ஒரு கலைத்துறையில் இருக்கும் இளம் பெண், இன்னொரு பெண்ணின் வீட்டிற்கு வந்து, நிர்வாணமாக கமெரா முன் நின்று தனக்கும், தனது அப்பாவிற்குமான தன் உறவை பற்றி monologue சொல்கிறாள். அவளை கூப்பிட்ட அந்த மற்றப் பெண்ணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வந்தவேளை முடிந்துவிட்டது. எனது கண்காட்சிக்கு நிச்சயமாக வாருங்கள் என அழைப்பிதழ் கொடுத்து கமெராவையும் எடுத்து கொண்டு புறப்பட்டுவிடுகிறாள் அந்த கலைத்துறை பெண்.

மற்றைய பெண் அவளது கண்காட்சிக்கு போன போது தான் கண்டுகொள்கிறாள். அங்கு புகைப்படங்களில் இருக்கும் அனைத்துமே, இந்த பெண் ஒவ்வொருவருவரின் வீட்டுக்கும் சென்று இப்படி இந்த கதையை சொன்ன போது, நிறைய பேர் அவளை அரவணைத்துள்ளனர். அருகில் வந்து ஆறுதல் படுத்தியிருக்கின்றனர். அவை அனைத்தும் புகைப்படங்களாக பதிவாகியுள்ளன. ஆனால் தான் மாத்திரம் தான் அவளை அருகில் சென்று ஆறுதல் படுத்தவில்லை என்பதனை உணர்கிறாள். ஆனால் இந்த பெண்ணை கண்காட்சியில் வந்த எவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அந்த கலைத்துறை பெண் உட்பட. படம் முடிவடையும் போது இரக்கம் என்பது என்ன எனும் நிஜக் கேள்வியை எம்முள் கேட்டு முடிவடைகிறது.

இக்குறுந்திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே மனிதனின் பல்வேறு எண்ணங்களை, குணங்களை மிக ஆழமாக சென்று கேள்வி எழுப்பும் திரைப்படங்கள். இவற்றின் திரைக்கதை எழுத்தில் இருக்கும் போது இதை எப்படி காட்சிப்படுத்த முடியும் எனும் கேள்வி மிகுந்த சந்தேகத்துடன் எழுகிறதல்லவா? அதனால் தான் இவற்றின் காட்சிப்படுத்தலில் எம் மனதை தொடும் போது, இவற்றிற்கான விருதுகிடைக்கிறது.

Photos © : Locarno Film Festival

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா குறித்த முன்னைய பதிவுகள் :

லொகார்னோ திரைப்படவிழாவில் ஆளுமையான ஒரு இத்தாலிய திரைப்படம் :  Rossosperanza 

ஆரம்பமாகியது லொகார்னோ சர்வதேச திரைப்படவிழா !

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.