யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
இப்பாடலின் ஒரு பகுதி ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்காக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
“TALA AL BADRU ALAYNA” எனும் இப்பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை (Pbuh), போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை பாடலை அடிப்படையாக கொண்டது. மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது, மதீனா மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல் இது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இப்பாடல் உலகம் முழுக்கவே மிகவும் புகழ் பெற்றது. இப்பாடலின் முழு வீடியோ வடிவம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இப்பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறுகையில்... “இத்தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். TALA AL BADRU ALAYNA போன்ற தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. மேலும் எனது சகோதரர் AR அமீன் அவர்களுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்றார். பாடகர் ஏ.ஆர். அமீன் கூறியதாவது: “ நபிகளை (Pbuh), போற்றும் தெய்வீகமான பாடலை அன்பு சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதி அருளட்டும்” என்றார்.
Comments powered by CComment