பெரும் சறுக்கல்கள், தோல்விகளுக்கு பின் உடல் எடை கூடியும் மன அமைதியின்றியும் தவித்த சிம்பு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார்.
அதன்பின்னர் உடல் எடைக் குறைப்பை கடந்த கோரோனா ஊரடங்கில் தீவிரமாகக் கடைபிடித்து, பின்னர் 25 கிலோ எடைக்குறைப்பு செய்து 75 கிலோ சிம்புவாக ஆனார். பெரும் மனமாற்றம் பெற்ற சிம்பு, புதிய உத்வேகத்துடன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தமிழ் நாடு கேரளா, உலகின் பல பகுதிகளில் 78 கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது சோனி லிவ் தளத்திலும் ரசிகர்களால் பார்க்கப்பட்டுவரும் படமாக உள்ளது.
இதற்கிடையில் ‘மாநாடு’ படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாத சிம்பு, தனது ரசிகர் மன்றங்களைச் சீரமைக்கும் பணியில் இறங்கினார். மேலும் தற்போது ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ உட்பட 4 படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வெந்து தணிந்தது காடு படத்தின் மீதான எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் உருவான முதல் படமான விண்ணைத் தாண்டி வருவாயா படம்போல் இல்லாமல் க்ரைம் த்ரில்லர் படமாக இதை கௌதம் மேனன் உருவாக்கி வருவதால், ஆக்ஷன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதற்கிடையில் சிம்புவிற்கு புறநகர் சென்னையில் செயல்படும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் துணை வேந்தராக இருந்துவரும் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த வருடத்தின் தொடக்கமே சிம்பு டாக்டர் பட்டத்துடன் தொடங்கியுள்ளதால் அவரின் ரசிகர்களும் பெற்றோரும் நண்பர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அவர் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து திரையுலகிலிருந்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது ரஜினியின் இரண்டாவது சௌந்தர்யா சிம்புவிற்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார். இது திரையுலகில் ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது. காரணம், ரஜினி குடும்பத்துக்கும் சிம்பு குடும்பத்துக்கும் பகை என்றே இதுவரை பலராலும் பார்க்கப்பட்டு வந்ததது. அப்படியொன்று இல்லை என்பதை சௌந்தர்யா தற்போது தன்னுடைய வாழ்த்தின் மூலம் எடுத்துகாட்டி, புகை மூட்டத்தை விரட்டி அடித்துவிட்டார்.
Comments powered by CComment