counter create hit மகிழ்வித்தலால் மலர்வித்தல் செய்யும் தாய் !

மகிழ்வித்தலால் மலர்வித்தல் செய்யும் தாய் !

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மகிழ்வித்தலால் மலர்வித்தல் மனித உருவாக்கத்தின் முக்கியமான உபாயங்களில் ஒன்று. இது தாய் குழந்தையை வளர்த்தெடுக்கக் கையாளும் தந்திரோபாயங்களில் முக்கியமானது.

அழுங்குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுதலும் குழந்தையின் பசிக்குப் பாலூட்டுதலும் சிரித்து விளையாடிக் குழந்தைக்கு மகிழ்ச்சியூட்டுவதும், கதைசொல்லி தாலாட்டித் தகவல் பரிமாற்றத்துடன் பிள்ளையை இணைப்பதும், இந்த மகிழ்வித்தலால் மலர்வித்தலுக்குச் உதாரணங்கள்.

தன் நோயினைக் கவலையினை மறந்து குழந்தை உள்ளம் மகிழ்ச்சியில் மலர்ந்திடச் செய்வதற்கான தாய்மையின் உத்திகள், தாய் குழந்தை மேல் கொண்ட அன்புக்குப் பாசத்திற்கு ஏற்பப் புதிதுபுதிதாக உருவெடுக்கும் தன்மை வாய்ந்தன. குழந்தைக்கு தனக்கு இன்னதுதான் நோய் என்று சொல்லி அழத் தெரியாது. இன்னதுதான் வேண்டுமென விளக்கிடவும் மொழிவளம் வளர்வதில்லை. ஆனாலும் தாய் மகிழ்வித்தல் மூலம் குழந்தையின் உள்ளத்தை மகிழ்வித்து புத்துணர்வுடன் புதுப்பொலிவுடன் மனித உருவாக்கம் தொடர்ந்திடச் செய்திடுவாள்.

அவ்வாறே ஊடகவியலாளர்கள் சமுக உணர்வுள்ள படைப்பாளர்கள் என்போர் தாம் வாழும் சமுதாயம் வெளியே தெரியாத சமுக பொருளாதார அரசியல் ஆன்மீக நோய்களால் தவிக்கும் பொழுது அதனை வெளியே கொண்டுவந்து சமுக பொருளாதார அரசியல் ஆன்மீகத்தினைப் புனிதமாக்கிப் பாதிப்புற்ற மக்களின் தாக்கங்களை கவலைகளை மாற்றும் பெரும் பொறுப்புள்ளவர்களாக உள்ளார்கள்.

2008ம் ஆண்டில் 4தமிழ்மீடியா என்றொரு தாய்; தமிழினம் என்னும் என்றும் வளரும் தன் பிள்ளையின் கவலையைத் துக்கத்தை மாற்றவும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவியல் பலத்தை தமிழினத்துடன் இணைக்கவும் முன்வந்தாள். கூடவே பழைமையின் உன்னதங்களையும் புதுமையின் ஆற்றல்களையும் தமிழினம் பெற்றிடும் பெரும் அறிவூட்டல் பணி தன் முன்நிற்பதையும் அத்தாய் உணர்ந்தாள். என்னடா 4 தமிழ்மீடியாவைப் பெண்ணாகத்தான் உருவகிக்க வேண்டும் ஆணாக உருவகித்தால் என்ன என்கிற சந்தேகமும் எழலாம்.

கணவனின் பெயரைச் சொல்லாத் தயங்கும்  பரம்பரைத் தமிழ்ப்பெண் போலவும், யாருக்கும் எதற்கும் அஞ்சாது பெண்ணியம் பேசும் புதுமைத் தமிழ்ப் பெண் போலவும், கரந்து நிற்றலும் துணிந்து நிற்றலும் 4தமிழ்மீடியாவில் இருப்பதினால் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகப் 4தமிழ்மீடியாவை உருவகிப்பதுதான் ஏற்றது என்றது என் மனது. 1460 நாட்களில் 17740233 கண்கள் மொய்த்துள்ளன என்றால் 4தமிழ்மீடியாவை கண்டவரை கண்டவுடன் மயக்கவைக்கும் பேரழகி எனக்  கருதி,  பெண்ணாகவே எழுதிட மனது துணிந்தது. பெண்தான் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் இணைக்கும் மையச் சக்கரம். தொன்மையின் உன்னதங்கள் அவள் வார்த்தைகள் வழி மொழியாகி அவளின் பிள்ளையில் பதிகிறது. புதுமையின் ஆற்றல்கள் பெண்ணால் தெரிவுசெய்யப்பட்டு அவளின் பிள்ளை காலத்துக்கு ஏற்றவகையில் வாழ்வதற்கான சக்தியை அளிக்கிறது.

4தமிழ்மீடியா 2008ல் தோற்றம் பெறும்பொழுது இருந்த உலகம், இயங்கியல் வேகம் கூடிய உலகம். தமிழர்களின் நிலை தமிழ் மக்களுக்கான போராட்டம் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம். இந்த யதார்த்தத் தன்மைகளைத் தெரிந்த அறிந்த காலத்திற்கு ஏற்ற கணினிப்பாலமாகத் தமிழர்களையும் உலகையும் இணைக்கும் ஊடகமாக உருவாகியது 4தமிழ்மீடியா.

அது பயணிக்கத் தொடங்கிய 2008 -2009ம் ஆண்டுக்காலப்பகுதி தமிழினத்தின் கோரிக்கைகளைத் தமிழினம் சார்பாக உலகு பார்க்க மறுத்த ஏற்க மறுத்த சோதனைமிக்க காலகட்டம். இருந்த போதிலும் தமிழினத்தின் தன்மைகளை உலகுக்கு உணர்த்தும் தேவைகளை உலகுக்குப் புரிய வைக்கும் மிகச்சிரமமான பணியை 4தமிழ்மீடியா தன்னால் இயன்றஅளவு தன் எல்லைகளுக்கு ஏற்றஅளவு செய்தது என்பது அதன் பார்வையாளனும்,  சில கட்டுரை ஆக்கங்கள் வழிப்பங்காளனுமாகப் பயணித்த எனது நம்பிக்கை. இந்தப்பணியில் தமிழர்களுக்கு 4தமிழ்மீடியா ஏற்படுத்திய நம்பிக்கை உலகளாவிய நிலையில் தமிழர்களிடை 4தமிழ்மீடியாவைத் தரமுள்ள திறனுள்ள இணையத் தளமாக மணம் கமழவைத்தது.

திரள்நிலை ஊடகம் (Mass Media) என்கிற தன்மையை விளங்கிக் கொண்டாலே 4தமிழ்மீடியாவின் பணித்தன்மையைப் புரிந்து கொள்ளலாம் என்பது என் எண்ணம். ஒருவருடைய கருத்தாக இல்லாமல் ஓரு கூட்டத்தினரின் கருத்தாக இல்லாமல் ஒரு கட்சியின் கருத்தாக இல்லாமல் ஒரு இயக்கத்தின் கருத்தாக இல்லாமல் மானிடம் என்னும் தொகுதியின் கூட்டுமொத்தக் கருத்தாக எது திகழ்கிறதோ – எந்நிகழ்வு அமைகிறதோ அதனை ஒலி ஒளி அச்சுக் கருவிகள் கொண்டு பதிகின்ற ஊடகத்தன்மையினை உடைய ஊடகங்களைத்தான் திரள்நிலை ஊடகம் என்பர்.

இங்குதான் திரள்நிலை ஊடகத்தில் பதிவினை மேற்கொள்ளும் செய்தியாளருக்கு எழுத்தாளருக்கு படைப்பாளருக்கு மானிடம் போற்றும் பொறுப்பு தலைமைப் பொறுப்பாகிறது. இல்லையேல் அது திரள்நிலை ஊடகமாக அமையாது வர்த்தக ஊடகமாகவோ, பரப்புரை ஊடகமாகவோ, அல்லது மக்களின் கருத்தியலை மயக்குறும் ஊடகமாகவோ திசைமாறிவிடும். இந்தத் திசைமாற்றம் நடைபெறாத வகையில் சுக்கானைப் பிடித்து திரள்நிலை ஊடகம் என்னும் பணியையும் அதே வேளை மானிடத்திற்கு எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறைத் தன்மைகளை மக்கள் குரலாக வெளிப்படுத்தும் போக்கையும் செயற்படுத்துவது கணினிவலை  இயக்குனரின் சமுதாயக்கடமையாகிறது. இந்தச் சமுதாயக்கடமையில் 4தமிழ்மீடியா மிகவும் அற்புதமான முறையில் ஐந்தாவது ஆண்டில் அடிபதித்து நிற்கிறது.

ஊடகத்துறை கலை வளர்துறையாகவும் உள்ளது. முத்தமிழுக்குச் சொந்தக்காரரான தமிழர்கள், இயல் இசை நாடகம் என்னும் தமிழின் பிரிக்கமுடியாத தனித்தன்மையைப் பேணிய நிலையில் ஊடகத்துறையினை கொண்டு நடாத்த வேண்டியுள்ளது. இதனால் செய்திகள் தகவல்களுக்கான அடித்தளமாக அமைய சினிமா, பொது, ஆன்மீகம், அறிவியல், வாழ்வியல், தொடர்கள், சிறப்பு, சமூகவலை என பல இதழ்கள் கொண்ட வலைப்பின்னலை கொண்டதாக 4தமிழ்மீடியா பரிணாமம் பெற்றுள்ளது. இதில் நவீனத்தின் வேகத்தையும் தமிழின் பழைமையினையும் இணைப்பதில் 4தமிழ்மீடியா இணையத்தில் சர்க்கஸ்காரனின் கயிற்று நடையிடுகிறது.

இந்த உண்மையுடன் கூடிய கடும் உழைப்பு 4தமிழ்மீடியாவை கரவற்ற (Transparency) ஊடகமாக மக்கள் உணரவைக்கிறது. கூடவே 4தமிழ் மீடியா செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் கொள்கைநிலை நின்று மட்டும் தொட்டுப்பார்க்காது; மக்களிடை, ஊர்களிடை, உலகத்திடை சென்று நடைமுறையில் கண்டு உணர்ந்து எழுதமுற்படுவது இந் இணையத்திற்குரிய ஒரு சிறப்புப் பண்பாக அமைகிறது.

பிரச்சினைகளை விளக்கும் அதேவேளை வெறுப்புக்களை உருவாக்காது உணர்வு பூர்வமான மாற்றத்திற்கு வழிகாட்ட முயல்வது, பலதடவைகளில் 4தமிழ்மீடியாவில் உணரப்பட்ட ஒன்றாக உள்ளது. கொண்ட இலட்சியம் நெஞ்சில் கண்ட காட்சிகள் கணினித் திரையில் காணநினைப்பது மகிழ்ச்சியான மனித உறவுகளின் உலகை என்னும் வகையில் இவ்வலைப்பின்னல் வளர்கிறது. இதனால் இதனை வலைவீசி விழுத்த நினைப்பவர்க்கும் அன்புவலை எறிந்து தம்வசமிழுக்கும் திறன் இதற்கு உண்டு. அதே வேளை மானிடத்திற்கு எதிரான வலைகளுள் இழுபட்டுச் செல்லாது தன்னையும் காத்துத் தன் கணினிவெளியீட்டு நிலையையும் பேணி உண்மை சத்தியம் செம்மை என்ற ஊடக தர்மத்தின் தகைசான்ற சிறப்புக்களை மீறாச் சொற்காத்து மானிடத்திற்காய் உழைக்கும் இவ்வலைத்தளத்தை வள்ளுவனின் சோர்விலாப் பெண்ணாகவே மனம் காண்கிறது.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்  " என்பது வாழ்க்கைத் துணைநலத்தில் வள்ளுவன் தந்த திருக்குறள். பெண் மனிதனை உருவாக்குவதில் சோர்ந்தது கிடையாது.  சோரவும் முடியாது. சோர்ந்தால் மானிடம் நிலைக்கவும் முடியாது. அவ்வாறே   4தமிழ்மீடியா என்னும் வலைப்பெண்ணும் என்றும் சோராத அறிவுநதியாய் ஆற்றல்களின் மூலவளமாய் என்றென்றும் திகழ்ந்திட, மகிழ்வித்தலால் மலர்வித்தல் செய்யும் திறன் மிகு தாயென வாழ்க!. எல்லாம் வல்ல இறைவன் ஆணையினை உயிர்களுக்கு உரைத்திடும், தெளிவித்திடும், வார்த்தையாக, ஞானமாக, வளர்க!  என ஐந்தாவது அகவையில்,  அவனருள் வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்.

- சூ.யோ. பற்றிமாகரன்

BA, SPECIAL DIPLOMA (OXFORD), BSc, PG DIPLOMA, MA(Politics of Democracy)
Oxford Centre For Tamil Education and Fine Arts

ஆய்வாளர், ஊடகவியலாளர், ஆசிரியர்

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.