counter create hit ஊடக அறிவூட்டற் பணியில் ஒரு முனைப்பு !

ஊடக அறிவூட்டற் பணியில் ஒரு முனைப்பு !

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறுவர்களை பொறுத்தவரை கணினிவலையின் வழி தகவல் வழங்கி பயிற்சி அளித்தல் என்பனவற்றுக்கு அப்பால் சிறுவர்களை இணைத்தல் சிறுவர்களுக்கான தொடர்புசாதனமாக நிற்றல் என்கிற முக்கிய பணிகளையும்  4தமிழ்மீடியா செய்யவேண்டியதாக உள்ளது.

இங்கு சிறுவர்கள் என்கிற பொழுது ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதையும் மனதிருத்தி. புலம்பெயர் தமிழ்ச் சிறுவர்களுக்கு 4தமிழ்மீடியாவின் சைபர்வெளி உலா எந்த அளவுக்குப் பயன்பட்டுள்ளது என்பதையும் எந்த விதத்தில் மேலும் வலுவூட்ட வேண்டுமென்பது குறித்து அதன் ஐந்தாவது ஆண்டில் எண்ணிப்பார்ப்பதே இந்தக் கட்டுரையின் இலக்கு.

ஐம்பது வயதை தாண்டியவர்களாக இருந்தால் அல்லாது இன்றைய உலகில் பத்திரிகைகளிலோ சஞ்சிகைகளிலோ நேரத்தைச் செலவழிப்பவர்கள் மிகக்குறைவு. இதனால் இன்றைய உலகின் கருத்தியலை உருவாக்கும் தலைமை ஊடகமாக கணினிவலையும் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுமே திகழ்கின்றன.

இதனால் கூகுலின் மூன்று டிரில்லியனுக்கு மேற்பட்ட கணினிச் சுட்டிகளையும் இரண்டு புள்ளி ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட விக்கிபீடியா ஆக்கங்களையும் எழுபது மில்லியனுக்கு மேற்பட்ட யூடியூப் வீடியோக்களையும் நூற்றிமுப்பத்தி மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட புளோக்ஸ்களையும் நூறு மில்லியனுக்கு மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களையும் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட டுவிட்டர்களையும் கொண்ட கணினி மற்றும் அலைபேசித் தொடர்புகளிடை இன்றைய இளம் தமிழ்ச் சமுதாயம் வாழ்கிறது என்பது வெளிப்படையான உண்மை.

இந்நிலையில் தமிழ், தமிழர் மரபு என்பனவற்றின் தரத்தைத் திறத்தை வளத்தைப் பலத்தை தமிழ் இளம் சமுதாயம் பெறுவதற்கான மிகப்பொருத்தமான தளமாக கணினிவலைகள் திகழ்கின்றன. இந்த உண்மையைச் சிரமேற்கொண்டு நல்லதொரு கணினிவலையை தரத்துடனும் திறத்துடனும் உருவாக்கி இன்று ஐந்தாம் அகவையில் வெற்றிநடையிடும் 4தமிழ் மீடியாவுக்கு முதற்கண் நன்றியையும் மறுகண் வளம்பெற பலம்பெற வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.

இனி 4தமிழ்மீடியா முன் இளம் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிவூட்டலில் உள்ள சவால்களையும் அது எவ்வாறு அதனை வெல்ல முயற்சிக்கிறது என்பதையும் இந்நன்னாளில் எடுத்து நோக்கலாமென எண்ணுகின்றேன். இன்றைய கணினியுக இளையவர் முன் தெரிவுகள் பல மில்லியன்கள் என்பதை எடுத்து விளக்கவே ஏற்கனவே கணினியுகத் தகவல் பரிவரத்தனை நிலை தொடர்பான புள்ளவிபரம் ஒன்றை பருமட்டாக முன்னைய பந்தியில் பதிவு செய்துள்ளேன். இவற்றுள் இளம் தமிழ்ச் சமுதாயம் தன்னுடைய மரபுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவகையில் எதனைத் தெரிவு செய்ய வைப்பது. இதுதான் தமிழிளம் சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ள 4தமிழ்மீடியாவின் முதற்சவாலாக அமைந்தது.

ஒலிஒளி காணொளிகளில் சிறப்பானவைகளை மட்டுமின்றி பேஸ்புக்ஸ் டுவிட்டர் எஸ் எம் எஸ் டெக்ஸ்ட் போன்ற இளையவர் மனங்கவர் தொழில்நுட்பங்கள் வழியாகவும் மரபையும் நவீனத்துவத்தையும் இணைப்பதில் 4தமிழ்மீடியா பெற்றுள்ள வெற்றி தமிழ்இளம் சமுதாயத்திற்குத் தரமான தகவல் தளமொன்று வளரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கூடவே நிழற்படங்களின் தெரிவில் 4தமிழ்மீடியா காட்டும் தனியான கவனம் தமிழ் மரபின் எல்லைகளை மீறாத நிலையில் நவீனத்துவத்தின் எல்லைகளை இன்றையத் தமிழ் இளம் சமுதாயம் காண வைத்துள்ளது.

நிறச்சேர்க்கைகள் ஒளிச்சேர்க்கைகளின் செறிவுகள் தெளிவான ஒலிகள் இசைகள் என ஒவ்வொன்றிலும் 4தமிழ்மீடியா காட்டும் அக்கறைதான் குறுகிய காலத்தில் 4தமிழ்மீடியாவால் பல இலட்சம் உள்ளங்களை கவர்ந்திழுக்க முடிந்துள்ளது என்பது என் எண்ணம். அனைத்துலகத் திரைப்பட விழாக்கள் மீது 4தமிழ்மீடியா காட்டும் அக்கறை இன்றைய கலையறிவுடனும் சமுதாய உணர்வுடனும் தமிழ்இளம் சமுதாயம் வாழ்ந்திட வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே எனக்குப் படுகிறது.

அதே வலைத்தளம் தமிழ்ச்சினிமாவின் தொன்மையையும் தொடர்ச்சியையும் தன்மையையும் பதிவாக்கும் பொழுது இவ்வலைத்தளம் புதுமைக்குள் அமுங்காது பழமைக்குள் தேங்காது பார்ப்பவர்க்கு தெவிட்டாத சுவை வழங்கும் பேராற்றலை வெளிப்படுத்துகிறது என்பதை உணர முடிகிறது.

இன்றைய உலகில் நேரமுகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு நிமிடத்தில் முன்னோர்களின் உன்னதங்களை கலைஞர்களின் பெருமைகளை இந்நாளின் அற்புதங்களை 4தமிழ்மீடியா தொகுத்து வகுத்து வழங்கும் திறன் தனித்துவமானதாக மட்டுமல்லாது கலைத்துவமானதாகவும் அமைகிறது. அவ்வாறே வசனங்களின் குறைவான உபயோகம் 4தமிழ்மீடியாவைக் காலத்திற்கு ஏற்ற தொடர்புசாதனமாக இணைவதற்கான தூண்டுதலைத் தருகிறது.

செய்திகள் முதல் தகவல்கள் வரை இந்தச் சொற்சிக்கனம் நேரமுகாமைத்துவத்தைச் சிறப்பிப்பதும் அல்லாமல் இடஅளவையும் மட்டுப்படுத்திப் பல செய்திகள் ஒரு வலைப்பக்கத்துள் அடங்கி மனதில் பதிந்திட உதவுகிறது. மகிழ்நிலை பெருக்கிடு ஊடகமாக மட்டுமல்லாது சமுக உள்வாங்கலை வளர்க்கும் சமுதாயப் பணியையும் 4தமிழ்மீடியா செய்கிறது.

நலிந்தவர்களின் மெலிந்தவர்களின் குரலாக மட்டுமல்ல காட்சிக்களமாகவும் காணொளித் திரையாகவும் 4தமிழ்மீடியா இலங்குகிறத. இங்கு கொள்கைகள் இலட்சியங்கள் நம்பிக்கைகளுக்கு அப்பால் யதார்த்த்தை அதாவது உள்ளதை உள்ளபடி சொல்லும் பழக்கத்தை 4தமிழ்மீடியா தனது வழக்கமாக்கி நிற்கிறது. இதனால் நலிந்தவர்க்கு நல்லது செய்ய வேண்டும் மெலிந்தவர்க்குச் சக்தியளித்திட வேண்டுமென்கிற வேகம் 4தமிழ்மீடியாவின் உண்மைத்தன்மைக்கு உரமூட்டுகிறது.

பத்தொடு பதினொன்றாகத் தொடராது பத்தையும் மாற்றும் சத்தையும் தரவல்ல ஊடகமாகப் 4தமிழ்மீடியா பயணிக்கிறது. இங்குதான் மாணவர்களுக்கு இளையவர்களுக்கு 4தமிழ்மீடியாவின் முக்கியத்துவம் அமைகிறது. ஊடக அறிவூட்டல் (Media Literacy) என்பது ஊடகத்தின் வழி ஒருவரை அனுபவப்பபடுத்துதலைக் குறிக்கிறது. இந்த அனுபவப்படுத்தலுக்கு கலைத்துவ உயிர் கொடுக்கப்படாவிட்டால் அது வெறுமனே ஒரு வாசிப்பாகவோ அல்லது செய்தியாகவோ போய்விடும். ஓலிஒளி வடிவம் உள்ளமைப்பு இவைகளில் கவனம் செலுத்தப்பட்டு காட்சியால் கேட்பதால் மனதில் உண்மைகளைப் பதிய வைத்தலே ஊடக அறிவூட்டல். எடுத்துச் சொல்லுதல் என்னும் நரேட்டர் என்ற நிலைக்கு அப்பால் படைத்துக்காட்டுதல் கிரியேட்டர் நிலைக்கு ஒரு ஊடகம் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொழுதே அந்த ஊடகத்தில் மகிழ்வுறுபவரும் வெறுமனே மகிழ்ந்து செல்பவராக அமையாது மகிழ்ச்சியை உருவாக்குபவராகத் தன்னை மாற்றுவார்.

இந்த ஊடக அறிவூட்டல் தன்மை 4தமிழ்மீடியாவின் நாளாந்த நோக்காவும் போக்காகவும் அமைகிறது. இதனால் மானிடத்திற்குரிய எதையுமே புறந்தள்ளாது அத்தனைக்கும் தெரிவை ஏற்படுத்தி அந்தத் தெரிவின் வழி சரியான வழியைக் கண்டறியக் கூடிய நெறிப்படுத்தலையும் சிந்தனைப் பயிற்சியையும் 4தமிழ்மீடியா வழங்குவதாலேயே கல்வியூட்டலை 4தமிழ்மீடியா செய்கிறது என்று அழுத்தமாகச் சொல்ல முடிகிறது.

இங்குதான் பிறந்தது முதல் பதினெட்டு வயதினை அடையும் வரை சிறுவர்கள் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் வரைவிலக்கணத்தை கருத்தில் கொண்டு 4தமிழ்மீடியா பல்வேறு விதத்தில் அறிவூட்டலைச் செய்வதுடன், குடும்பம் என்கிற வடிவுக்கு 4தமிழ்மீடியா தனியான கவனம் செலுத்தி வருகிறது. அதே வேளையில் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் அவர்களுக்கு உரிய உரிமைகள் கடமைகள் என்பனவற்றில் சமஉரிமைகள் பெறவும் சமத்துவத்தைப் பேணவும் கூடிய வகையில் 4தமிழ்மீடியா பணியாற்றுகிறது.

மார்க்சியம் முதல் பெண்ணியம் வரை உலகத் தத்துவங்களின் வளர்ச்சிகளை ஏற்று அவற்றுக்கான இடங்களையும் அளிக்க 4தமிழ்மீடியா தவறுவதில்லை. அவ்வாறே கல்வி முதல் விளையாட்டுக்கள் வரை பழந்தமிழ்க் கலைகள் முதல் நவீன திரையுலகு தொலைக்காட்சித் தொடர்கள் வரை பல்வேறு நிலைகளில் 4தமிழ்மீடியாவில் இடமளித்துக் காலத்துக்கேற்ற இளையவர்களாகவும் தமிழ் இளையவர்கள் அறிவு பெறுதலை ஊக்குவிக்கிறது.

இறுதியாக மாறுபாடுகளை மதித்தல் (Value the Diversity) என்பதனை மனதில் கொண்டு சிறுவர்களை பலமொழி பேசும் பல்லினக் கலாச்சாரச் சுழலில் இணங்கி வாழ்தலுக்கும் தங்கள் தனித்துவத்தை இழக்காது பேணி வாழவும் வழிகாட்டுகிறது. சுருக்கமாகச் சொன்னால் இன்றைய சமகாலத்தைக் கருத்தில் கொண்டு தமிழரின் இனத்துவ கலைத்துவ கலாச்சாரப் பண்புகளின் பரிணாமத்திற்கு உதவும் அறிவூட்டலைச் செய்திட 4தமிழ்மீடியா அரும்பாடுபட்டு தன்னுடைய எல்லைப்பட்ட பொருளாதார ஆள்வலுக்களினிடை ஐந்தாவது ஆண்டில் வெற்றி நடை இடுகிறது.

ஊடக அறியாமையை நீக்க வேண்டும் எனத் துடிக்கும் சிலரே ஊடக உற்பத்தியாளர்களாகவும் விளங்கிட முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ள உதாரணமாகவே 4தமிழ்மீடியாவைப் பார்க்கின்றேன். 4தமிழ்மீடியா தமிழ்ப்பெண்கள் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பணியையும் சக்திவழங்கும் செயலையும் தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்திட எல்லாம் வல்ல இறைவனருள்வானாக.

- கல்வியாளர்: றீற்றா பற்றிமாகரன்

BA (Tamil) BSc (Education& Information Systems) PG Diploma (Social Policy & Housing)

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.