ஜோதிடம்
Typography

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)
எதிலும் நேர்மையையும் விவேகத்தையும் கடைபிடிக்கும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் தேவ குரு என்று அழைக்கப்படும் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். தொலை நோக்கு சிந்தனை - பரந்த மனப்பான்மை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றும் திறன் உடையவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருப்பவர்கள்.

கிரகமாற்றங்கள்:
விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.

கிரகங்களின் பார்வைகள்:
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - தைரிய வீர்ய ஸ்தானம் - களத்திர ஸ்தானம்.

பலன்கள்: இந்த ஆண்டு நீண்ட நாட்களாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்:
உங்கள் ரண ருண ரோகாதிபதி சுக்ரன், அஷ்டமாதிபதி சூர்யனுடன் சேர்ந்து ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள், வயிறு கோளாறுகள், மறைவிடங்களில் பிரச்சனைகள் போன்றவை வர வாய்ப்புண்டு. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது, சுத்தமாக இருப்பது போன்ற செயல்கள் உங்களை நோய்களில் இருந்து காக்கும்.

குடும்பம்/உறவுகள்:
குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தை உங்களது ராசிநாதன் குரு பகவானே தனது ஏழாம் பார்வையால் பார்த்து அருள் செய்வதால் சிக்கலின்றி குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் தெய்வ குழந்தைகள் பிறப்பார்கள்.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்:
குழந்தைகளின் கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். அவர்களுடைய காரியங்களில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும்.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு:
தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
கணவர் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.

சேமிப்பு, முதலீடு, பொருளாதாரம்:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், சுகஸ்தானத்தில் புதன் பகவானும் சஞ்சரிக்கின்றனர். உங்கள் பெயரில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணை பெயரிலோ அல்லது கூட்டுத் தொழில் செய்வது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். முதலீடு செய்யும் முன் ஆலோசனை செய்து செய்யவும். ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வதும் நலம். தனி நபர்களிடம் பணம் கொடுத்து சேமிப்பதைத் தவிர்க்கவும். பாதுகாப்பான அரசு நிறுவனங்களில் உங்கள் சேமிப்புகள் இருப்பது நலம்.

வம்பு / வழக்குகள்:
உங்களது ராசியிலேயே சனி பகவானின் சஞ்சாரம் அமைந்திருப்பதால் தேவையற்ற வீண் விவாதம் - வம்பு - வழக்குகள் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புரட்டாசி மாதத்திற்குப் பிறகான காலகட்டத்தில் வழக்குகளில் இருந்த தொய்வு நீங்கும்.

நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் :
புரட்டாசி மாதம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதன் பின் வரும் காலகட்டத்தில் அதிக முயற்சி - சிரத்தை தேவை.

மூலம்:
இந்த ஆண்டு எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.

பூராடம்:
இந்த ஆண்டு பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த ஆண்டு வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் சித்தர்களையும் - முன்னோர்களையும் வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீகுருப்யோ நம என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்