ஜோதிடம்
Typography

எந்த காரியத்திலும் தனது உழைப்பினை உலகிற்கு பறைசாற்றும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பர்களே நீங்கள் அம்மான்கிரகம் என்று அழைக்கப்படும் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். 

கிரக மாற்றங்கள்:
27 ஜுலை 2017 - விரைய ஸ்தானத்தில் இருக்கும் ராகு லாப ஸ்தானத்திற்கும் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.
02 செப்டம்பர் 2017 - ராசியில் ஸ்தானத்தில் இருக்கும் குரு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.
19 டிசம்பர் 2017 - தைரிய வீரிய ஸ்தானத்தில் இருக்கும் சனி சுக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.

இந்த ஆண்டு உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.

தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சில வாசகர்கள், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும்.

உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.

வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும்.

அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும்.

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

உத்திரம் - 2, 3, 4:
இந்த ஆண்டு வீண் செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

ஹஸ்தம்:
இந்த ஆண்டு தேவையான பண உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சித்திரை - 1, 2:
இந்த ஆண்டு குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.

சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: தெற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் திருப்பாவை சொல்லி பெருமாளை வணங்கி வரவும்.

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Most Read