ஜோதிடம்
Typography

ஜோதிடம் என்றால் என்ன, வாழ்க்கையின் காலப்போக்கை நாம் அறிந்து கொள்ள ஒரு ஆய்வு அறிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு பிறந்த குழந்தையின் நேரம் எது என அறிந்து அதன் மூலம் ஜோதிடர் ஜாதகத்தைக் கணித்து நல்லதையும் கெட்டதையும் குறித்து பலன் சொல்லி விடுகின்றார். ஆலயங்களை புதிதாக நிர்மாணம் செய்த பின் கற்சிலையாக இருக்கும் கடவுள் சிலைகளுக்கு வேத மந்திரங்களினால் உயிர் ஊட்டி, சக்தி உருக்கொள்ள வைத்து இறையருள் கிடைக்க அக்காரியத்திற்கு நல்ல நேரம் நல்ல நாள் பார்த்து கும்பாபிஸேகம் அதாவது சம்ரோட்சணம் செய்து விடுகின்றனர். அதை "பிரம்ம முகூர்த்தம்" என்று அழைப்பர்.

இப்படி நல்ல நாள் எடுத்துச் செய்யும் கருமங்கள் யாவும் பிரம்ம முகூர்த்தத்திலேயே செய்வர். அதை அப்படி அழைக்கக் காரணம் குழந்தை உருவாவதும் பிறப்பதும் அதாவது உயிர்கள் படைக்கப்படுவது யாவும் பிரம்மாவினாலே என்று கருதப்படுகிறது.ஆக்கத்தொழிலை பிரம்மா செய்ய, உயிர்களை காக்கும் தொழிலை விஸ்ணு செய்ய, அழித்தலை உருத்திரர் செய்ய, உலகம் இயக்கம் நடை பெற்று உயிர்கள் இறை சக்தி துணையோடு இன்ப துன்பங்களை அனுபவித்து உய்கின்றன. புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும் முன் சுபமுகூர்த்தம் அதாவது பிரம்மமுகூர்த்தம் எனும் நல்ல நேரம் கணிக்கப்படுகிறது. எக்காரியமும் தடங்கலின்றி நடைபெறவும் வாழ்வு வளம் பெறவும் சுபநேரம் உதவிற்று. 

அதற்கு வேதசாஸ்திரங்கள் எமது முன்னோர்களால் வாய்மூலம் உரைக்கப் பட்டும், பின்னர் ஏடுகளில் எழுதப்பட்டும் பெரிதும் உதவியாக இருந்தன. அவற்றில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலமும் உணரப்பட்டவையாக ஜோதிடம் விளாங்கியது. இப்படி உலகில் பிறந்து வாழும் உயிர்களுக்கு அவர்கள் பிறந்ததின் பயன் அனுபவித்து உய்ய இந்து மதமும் மதக்கொள்கைகளும் வேதத்தின் வழி வந்த ஜோதிடம் எனும் சாஸ்திரமும் மானிடரின் நம்பிக்கைக்கு துணை போகலாயிற்று. நமது பிறந்த நேரத்தை வைத்து கணிக்கப் பட்ட ஜோதிடத்தில் ஒருவரின் மூன்று காலங்களையும் தெள்ளத்தெளிவாக ஜோதிட வல்லுனர்கள் கணித்தனர். அந்நாளில் மிகத்துல்லியமாக கணக்கிட்டு பன்னிரு கட்டங்கள் வகுத்து அவர்கள் தலைவிதியை நிர்ணயம் செய்தனர். இந்தவயதில் எப்படி எப்படி வாழ்க்கை செல்லும் என்று சரிபார்த்து ஏற்ற இறக்கம் எப்படி அமையும் என்றும் கூறினர்.

கல்வி செல்வம் வீரம் எப்படி இருக்கும் என்றும் பலம் பலவீனம் கோபம் சாந்தம் அது எவ்வாறு அமையும் என்றனர். நிலயான ஓரிடவாழ்வா அலைந்து திரியும் நிலயற்ற வாழ்வா என்றும் செழிப்பான வாழ்வா செழிப்பற்ற வாழ்வா இப்படி எல்லாம் கூறினர். பூமியில் வாழும் எமக்கு அண்டத்தில் உள்ள இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒன்பது கோள்களும் ஜாதகரீதியாக ஆட்சி செய்கின்றனர் ராசிநாதனாக ஒன்பது கோள்களும் எமக்கு. தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. இந்த ஒன்பது கோள்களும் பன்னிரு ராசிகளாக தொகுத்தனர். பன்னிருராசிகளையும் பன்னிருகட்டங்களில் வகுத்து பிறக்கும் குழந்தையின் சரியான நேரத்தைக் கணக்கிட்டு அக்குழந்தையின் நட்சத்திரம் ராசி லக்கினம் எதுவெனக் கணித்து பன்னிருகட்டங்களிலும் ராசி நாதனையும் கிரகங்களையும் குறிக்கின்றனர். அதன் படியே பலன்கள் எதுவெனக் கூறப்படுகிறது.

நவகிரகங்கள் ஒன்பதும் ஆட்சி செய்கின்றனரா நட்பாய் உள்ளனரா பகையாய் உள்ளனரா நீசமடைந்திருக்கின்றனரா, உச்சம் பெற்றுள்ளனரா வக்கிரம்பெற்றுள்ளனரா. என்று துல்லியமாகக் கணக்கிடுகின்றனர். அவை மனிதர் ஒவ்வொருவரும் எவ்வித பலனை அனுபவிப்பர். அதனால் ஏற்படும் நன்மையும் தீமையும் என்ன என்பதை தெளிவாக்கி விடுகின்றனர். நவக்கிரகங்களுக்கு அதிபதி சூரியன் அவரை பூமி சுற்றுவதால் இரவும் பகலும் தோன்றுகின்றன. உயிர்களுக்கு கண்ணுக்கு தோற்றும் கிரகமாகவும் நாளாந்தப்பலனை அளிப்பவராகவும் உயிருக்கு வேண்டிய வெப்பம் சக்தி யாவும் அளிப்பவராகவும் திகழ்கிறார். அதனால் இவரை தந்தையாக பித்ரு காரகன் என்று அழைகின்றனர். அடுத்து சந்திரன் இவரும் இரவுபகல் என்று நாளாந்தப் பலனைத்தருகிறார்.

அதுவல்லாமல் சூரியன் உஸ்ண ஒளி அதிர்வுகள் மூலம் எம்மை புத்துணர்ச்சி அடைய செய்து எம்மை இயக்குகிறார். சந்திரன் மனித மனம் சார்ந்த உணர்வுகளுக்கு காரணமாகின்றார் மாத்ருகாரகன்எனஅழைக்கப்படுகின்றார். இவர் வளர்பிறைச் சந்திரனாக இருந்து நன்மை தரும் சுபக்கிரகங்களுடன் சேர்ந்திருக்கையில் நன்மையை தருகிறார். தேய்பிறைச்சந்திரனாக பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருந்து தீமையையும் அளிக்கிறார். அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாமல் புதன், குரு, சுக்கிரனும் இருக்கின்றனர். இப்படிக்கூறும் ஜோதிடம் இருவர் மனம் ஒன்றித திருமணம் செய்யும் போது ஜாதகப்பொருத்தம் பார்க்கத்தேவையில்லை என்கின்றனர். முன்பின் பார்த்தறியாத ஆணும் பெண்ணும் இணையத் திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

செவ்வாய் எனும் கோள் அங்காரகன் என அழைக்கப்படுபவர் 1ம் 2ம் 4ம் 7ம் 8ம் 12ம் வீடுகளில் இருந்தால் செவ்வாய் தோஸம் என ஜோதிட நூல்களில் குறிப்பிடுகின்றனர். திருமணவயதில் அதே கிரகபாவம் உடைய ஆணையோ பெண்ணையோ ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால் தோஸம் இல்லை. அந்த விடயத்தை கவனியாமல் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுக்கு விபரீதமான.விளைவும் கடும்கஸ்டமான பலனையும் அங்காரகன் அளிப்பார். இவ்வாறு ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது. அடுத்துமுக்கியமான இவ் ஏழு கிரகங்களும் சாதக பாதக பலனை மனிதர்க்கு அளித்து வருகின்றனர்.

ராகு கேது எனும் சாயாக் கிரகங்களாகிய இருவரும் ஒருவரின் ஜாதகக்கட்டத்தில் எதிர் எதிராக வீற்றிருப்பர். ராகு 6ம் வீட்டிலும், கேது அதற்கு நேர் எதிரில் 12 ம் வீட்டிலும் அமர்ந்து இருப்பர். இப்படி அமர்ந்து இருந்து கஸ்டநஸ்ட யோக பலன்களை அளிப்பர். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் உயிர்த்த நேரத்தில் நின்ற நட்சத்திரத்தை வைத்து அவர்கள் ராசியும் அதன் பலாபலன்களும் கணித்து சொல்வர். ஜாதக கட்டமூலம் இன்னும் விரிவான பலன் அறிய அவர்களின் தசைகளை வைத்துஅதாவது பிறக்கும் போது எந்த கிரக தசையில் பிறந்தனரோ அதன்மூலம் எதிர்காலப் பலாபலன்களையும் குறிப்பிடுகின்றனர்.

எமது ஆயுள் காலமும் இத்தசைகள் மூலமேஅறிய முடிகிறது. அத்துடன் கல்விவளம், செல்வவளம் தொழில் ஆரோக்கியம் முயற்சி முன்னேற்றம் தாமதம் நோய் கண்டம் இப்படி எல்லாவற்றையும் தசாபுத்தி பலன்களை சொல்லி விடுகின்றன.நாம் சாதகமான பலன் நடைபெறும் போது சாதாரணமாகவும் பாதகமான பலன் நடைபெறும் போது ஜாக்கிரதை அதாவது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் 120 வருடம் வரையிலும் தசைகள் எமது பலாபலனைச் சொல்கின்றன. மனித ஆயுள்காலம் எவ்வளவு காலத்திற்கு என்பதை பிரம்மனின தலைஎழுத்து என்று குறிப்பிடுவர் ஆனாலும் அதைக்கூட ஜோதிட ஆய்வில் அதில் கூறப்படும் பலன்கள் பெரும்பாலும் நடைபெறும் என்பதை தசாபுத்திகள் உணர்த்தும். முன்பே அவற்றை தெரிந்து வைத்துக் கொண்டு நாம் எம்மைத்தயார் படுத்திக் கொள்ளலாம்.வேதத்தின் வழிவந்தஜோதிட சாஸ்திர நூல்கள் கற்று இறைகத்தி அருள் பெற்ற ஜோதிடர் தமது கருத்துக்களை கூறிவைத்திருக்கின்றனர். எப்படி என்றால் 12 வீடுகளிலும் இராசிநாதன் அமையப்பெற்றுஇருப்பதை வைத்து 

அவர் தீர்க்காயுள் பெற்றறவரா என்று குறிப்பிடுகின்றனர். அதாவது லக்கினாதிபதி எட்டுக்கு உடையவனுடன் கூடி 6ல் இருப்பினும் அல்லது 12ல் இருப்பினும் 5குடையவனும் 12க்கு உடையவனும் சுபரால் பார்க்கப்பட்டு லக்னத்தில் இருந்தாலும், மித்திரனுடனோ தனது உச்ச வீட்டில் இருப்பவனுடனோ 10 க்கு உடையவனைக் கொண்டு அமையப்பெற்றவனாய் இருக்கும் ஜாதகர் தீர்க்காயுள் உடையவராவர். இன்னும் விபரமாக தீர்க்காயுளைப் பற்றிச் சொல்லியுள்ளனர்.

ஒரு ஜாதகத்தைச் சரியான முறையில் எழுதி அதன்பலாபலனை அறிய பிறந்த நேரம் மாதம் ஆண்டு பிறந்தஊர் இதை வைத்து கணித்து எழுதலாம். இதன்மூலம் எமது ஆயுள் மட்டுமல்ல எமக்கு ஏதாவது வியாதி வந்தால் அது தீராத வியாதியா இல்லை அது குணமாகிவிடுமா என்று கூட ஜோதிடம் கூறுகிறது. எப்படி எனில் சுபக்கிரகம் 9ம் இடத்திலும்,9க்கு உடையவன் சுபஸ்தானம் ஏறியும் லக்கினேசுவரன் சூரியனாலோ குருவினாலோ பார்க்கப்பட்டோ சேர்ந்தோ இருந்தால் தேக நோயானது மருத்துவ சிகிச்சையால் குணமாகும். அதுபோல் மந்திர ஜபங்களாலும் வியாதி குணமாகும்.லக்கினேசனோ 9ம் இடமோ தோஸத்துடன் கூடுமானால் நோய் குணமாவது கஸ்டம். இப்படி கூறியிருக்கும் ஜோதிடம் குரு இருக்கும் இராசியை தீபஸ்தம்பமாகவும் குருவை தீபமாகவும் குரு திருஸ்டி வியாபிக்கும் 5, 7ஆம் இடங்களை தீப வெளிச்சம் பரவும் இடங்களாக கருதி குரு இருக்கும் வீடு இருளானாலும் அவர் பார்க்கும் இடம் ஒளி பிராகாசிக்கும் தன்மையுடன் விளங்குவதால் இன்பதுன்பம் மாறி மாறி வரும் எனவும் கூறி நிற்கின்றனர்.

இருளுக்கு வெளிச்சம் பகை அதேபோல் வெளிச்சத்திற்கு இருள் பகை ஆக இருளுக்கு இருளும் ஒளிக்கு ஒளியும் உறவு என்பர். ஆக இந்த சனிக்கிரகம் இருக்கும் இராசியை தீபஸ்தம்பமாகவும் சனியை தீபமாகவும் சனி திருஸ்டி வியாபிக்கும் 3710 ம் இராசிகளை தீப வெளிச்சம் பரவும் இடங்களாகவும் பாவித்து நோக்கில் சனி இருக்கும் இடமும் பார்க்கும் இடமும் இருளாக இருத்தலில் அது வர்த்தனை என்பர். சனி நோக்கமாகிய இருளானது அவனிருந்த இடத்திற்கு 3, 7, 10 ம் ஆகிய பிரகாசமான இடங்களில் வியாபித்து இருப்பதனால் துன்பம் நிகழும் என்பர். 6ம்,,8ம்,, 12ம் வீடுகளில் குரு இருந்தால் அப்பலன்களை நசித்து விடுவார். அவர் அவ்வீடுகளைப் பார்த்தாலும் நன்மையான பலன்களே நிகழும். ஆனாலும் பாபக்கிரகங்கள் உச்சம் பெற்று 6ம், 8ம்,  12ம் வீடுகளில் இருந்தால் நற்பலனை அடையவிடாது கெடுதி செய்யும். ஆக நன்மை தீமையைக் கலந்து செய்யும் இக்கிரகங்களின் தன்மையை அறிந்து அதற்கு பரிகாரங்களை செய்து அதன் வேகத்தை நாம் குறைக்க முயற்சி செய்யலாம்.

நாம் எதிர்கொள்ளும் சவால்களை கஸ்டங்களை சமாளிக்கும் தன்மையை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்குத்தான் ஜோதிடர்கள் எமது கஸ்ட பலன் தீர்க்க, அதைத் தவிர்க்க பலவிதமான பரிகாரங்களை கூறியிருப்பர். ஆலயம் செல்லுங்கள் என்றும் தீபம் ஏற்றி வழிபடுங்கள் என்றும் வேதங்கள் தேவாரங்கள் திருவாசகங்கள் பக்தி அனுபூதி கவசங்கள் இன்னும் அநேகமான பக்தி பாடல்கள் இவற்றை பாடுங்கள் என்றும் சொல்வர். அதை நம்பிக்கையுடன் நாம் கற்றும் கடவுளை வணங்கியும் வரவேண்டும். பக்தி சிரத்தை அதாவது அக்கறையுடன் கற்று பாடி வர இறையைருளால் எமது குறைகள் நீங்கும். இறைவன் கருணை மயமானவர். நிச்சயம் எமது துயர் தீர்ப்பார். வாழ்வின் எழுச்சியும் வீழ்ச்சியும் எமது கைகளிலேயே சாதகமான பலனில் சாதித்தும் பாதகமான பலனில் தும்பிக்கையானை நம்பிக்கையுடன் வணங்கியும் பணிந்தும் வாழ்வோமாக.

தொடரும்..

நன்றி,

- 4 தமிழ்மீடியாவுக்காக அருந்தா

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்