முற்றம்
Typography

யாழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான்! இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த பதட்ட உணர்வையும், எச்சரிக்கையையும் ஒருங்கே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தோன்றும் விஷயம் இது. 

ஒழுக்கம் என்பது தண்டனைக்குப் பயந்திருப்பது என்று நம்பும் சமூகம். மனித உரிமைகள் ஆணைக்குழு பற்றிக் கேள்வியேபட்டிராத காலம். பலருக்கு வீட்டிலும் சொல்லமுடியாது. அப்படியே ஒரு பெரிய மனுஷனிடம் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். தங்கள் வாத்தியார் கைகளை மடக்கச்சொல்லி, மொழியில் அடிமட்டத்தால் அடிப்பர் என்பதை பெருமையாக நினைவு கூர்வார். அல்லது முஷ்டியை மடக்கி மண்டையில் எப்படி ஓங்கி கொட்டும், தொட்டுத் தொடரும் ஒரு கொட்டுப் பாரம்பரியம் பற்றிப் பரவசமாகப் பேசுவார். விளைவு? பள்ளிக்கால வன்முறையைக் கேட்க ஆளே கிடையாது. சரி, இப்போது சிந்திக்க தெரிந்த, வளர்ந்துவிட்ட நண்பர்களிடம் கேளுங்கள். 'அந்தக்காலத்தில் அடிச்சு வளர்த்ததாலதான் நான் இப்ப இப்பிடியொரு மனுஷனாகி..' என ஆரம்பிப்பார்கள். இல்லாவிட்டால் வால் முளைத்துக் குரங்காகி மரத்தில் தாவிக் கொண்டிருப்பார்களாம் என்பது அவர்கள் நம்பிக்கை. எதையெல்லாம் ரொமாண்டிசைஸ் செய்துகொள்கிறோம், என்ன உளறுகிறோம் என்கிற விவஸ்தையே நமக்குக் கிடையாது.

ஒரு கல்லூரிக்கு குறைந்தபட்சம் இரண்டு பிரதான சைக்கோ ஆசிரியர்கள் இருப்பார்கள். சில 'ஒழுக்கமான' பாடசாலைகளில் இன்னும் அதிகம். 'குற்றவாளி' மாணவனை வகுப்புக்கு வெளியில் நிற்கவைத்தால் போதும். 'இவன் ஏன் அடிக்கிறான்?', 'இவன் எனக்குப் படிப்பிக்கவில்லையே?' என்றெல்லாம் கேட்க முடியாது. இதற்காகவே பிரத்தியேகமாக சட்டம் ஒழுங்கு பேணும் சைக்கோ ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த வகுப்புக்குள்ளும் புகுந்து யாரையும் அடிப்பார்கள். முதலில் அடித்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இந்த ஒழுக்கவியல் ஆசிரியர்களுக்கு இருக்கும் முக்கியமான தகுதி - அவர்களிடம் எந்தவிதமான ஒழுக்கமும் கிடையாது என்பதுதான்.

கொழும்பில் நம் ஆசிரிய நண்பன் நேர்த்தியாக உடை, சப்பாத்து அணிந்து வேலைக்குச் செல்லும்போது அறையிலிருந்த ஒருவன் கூறினான். 'எதுக்கு டீசண்டா இருக்கே? தலையைக் கலைச்சு விடு. கைய ஒழுங்கா மடிக்காதே ஏறி இறங்கி நிற்கட்டும். பழைய சிலிப்பர் போட்டு ஒற்றைக்காலை லேசா இழுத்து நட! அதானடா சரியா இருக்கும்?' என்று சிரித்தான். அவன் வார்த்தைகளில், கிண்டலுக்குஅப்பால் இருந்த ஓர் உண்மை மிக மோசமானது.

உண்மையில் நம் ஆசிரியர்கள் பாவம். தென்னாசியாவிலேயே இலங்கையில்தான் அரசாங்க ஆசிரியர்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை என நினைக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பாகிஸ்தான் சென்று கற்பிக்கும் யோசனையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். அங்கே நல்ல சம்பளம் என்றார்கள்.சமுகத்தில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. அதுவும் சிறுவர் பள்ளி ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள்.

உண்மையில் பெருவிருப்பத்தோடும், ஆர்வத்தோடும் இளைஞர்களாக கற்பிக்க வரும் ஆசிரியர்கள் சில வருடங்களில் தேங்கி, சலிப்படைந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர் கேலிக்குள்ளாகிறார்கள். சிலர் வன்முறையாளர்களாகிறார்கள். பலர் எப்போதும் உற்சாகமாக மாணவர்களோடு தம்மையும் புதுப்பித்துக் கொள்கிறார்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.வளர்ந்த நாடுகள் போல, எந்தத்தொழிலைச் செய்தாலும் தன்னிறைவான வாழ்க்கையொன்றை வாழமுடியும் என்கிற நிலை இருக்கவேண்டும். அதன்பின்பே செய்யும் தொழிலில் 'சேவை', 'அர்ப்பணிப்பு' என்கிற பேச்செல்லாம்!

ரம்பப் பள்ளியிலேயே நாம் கொடுமைகளுக்குபழக்கப்பட்டிருந்தோம்.அந்த ஆசிரியர்களில் சிலர் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கலாம். அவர்களை நம்பிப்பிஞ்சுகளை ஒப்படைப்பது மிகக்கொடூரமானது. ஒரு கணத்தில் அன்பே உருவாகப் பேசும் ஆசிரியர்கள், அடுத்த கணத்திலேயே பெரும் வன்முறையாளராகி விடுவார்கள். ஐந்தாம் ஆண்டில் ஸ்கொலர்ஷிப் படிப்பில் எங்கள் ஆசிரியர் புள்ளி குறைந்தவர்களை அடிப்பது ஒரு சடங்கு. ஒரு தும்புத்தடியின் பாதி அளவு விட்டத்தில் பெரியதொரு கம்பால் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கும்போது,‘ப்ளடி ஃபூல்’ என்று பல்கலைக் கடித்து உறுமியவாறு அடிப்பார். பின்பொரு முறை நானும் ஜனகனும்பேசிக்கொண்டிருந்தோம். ‘எப்படி அவரால் முடிந்தது?’. அவரது மூத்த மகன் இயக்கத்திற்குச் சென்றதிலிருந்துதான் இப்படி ஒரு பாதிப்பு அவருக்கு என்றான்.

அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. அவரது கடைசி மகன் எங்கள் வகுப்புதான். வேறொரு டிவிஷனில் படித்தான். ஒழுங்காக வீட்டுப்பாடங்கள் எதையும் செய்யமாட்டான். புத்தகங்கள் கொண்டுவர மாட்டான். அவன் வகுப்பாசிரியர் அவனை நேராக எங்கள் வகுப்புக்கு தகப்பனிடம் கூட்டி வந்துவிடுவார். எங்கள் வகுப்பிலோ பயிற்சிப்புத்தகம் கொண்டுவராமல் விடுவது ஏறக்குறைய கொலைக்குற்றம். மகன் மீதான புகார்களை கூறும்போது கொஞ்சம் முறைத்தபடி கண்டிக்கும் பாவனையில் பேசுவார். அவனோ ஏதோ பாராட்டுரையைக் கேட்பதுபோல சிரித்தபடி நிற்பான். அவன் சிரிப்பைப்பார்க்க எங்களுக்கே நாலு அப்பு அப்பலாம் போலிருக்கும். பாவம் பெற்ற தந்தை அவருக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா?அவனும் இயக்கத்திற்குப் போய்விடுவான் என்ற பயம் அவருக்கு இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு மேலதிக உளவியல் தாக்கம்தான். அதனாலென்ன? சற்று நேரத்தில் எங்கள் வகுப்பில் யாரோ ஒருவன் சிக்குவான் இல்லையா? சேர்த்துக் கவனித்துக் கொள்வார்!

இதுபற்றி பின்னர் நண்பன் பார்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகம் வந்தது. அது இன்னொரு ஆசிரியர் பற்றியது. வேட்டையாடும் மிருகம் போன்ற பளபளக்கும் கொள்ளிக் கண்கள். சிரிக்கும்போது இன்னும் பயமாக இருக்கும். இன்னும் பளபளக்கும் விழிகள். குரூரமான சிரிப்பு. அவருக்குப் பயந்து இரண்டு பேர் வேறு பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். அவர்பற்றித்தான் கேட்டேன். ‘அந்தாளுக்கு என்ன பிரச்சினைடா? என்ன பாதிப்பு?’

பார்த்தி யோசிக்காமல், அவசரமாக சொன்னான், "அவன் பிறவிச் சைக்கோ!"

ரு வகையில் வன்முறைக்கு உள்ளாகுபவனுக்கு எந்தப் பாதிப்புமில்லை. அல்லது பழகிவிடும். கடந்து போய்விடுவான். ஆனால் பக்கத்திலிருந்து பார்ப்பவன் நிலைமை மோசமானது. தற்காப்பு உணர்வும்,எச்சரிக்கையான அவதானிப்பும் ஒரு தத்தளிப்பான நிலையில் மனதை எப்போதும் வைத்துக்கொள்ளும். அப்படியான சந்தர்ப்பங்களில் பயந்திருக்கிறேன் எங்கே நானும் எழுத்தாளனாகி விடுவேனோ என்று. நண்பர்கள் புண்ணியத்தில் அப்படியொரு அசம்பாவிதம் நிகழவில்லை.

புவி என்றொரு பேர்வழி. நல்ல உயரமாக கச்சலாக நிற்கவே தெம்பில்லாத மாதிரி ஆடிக்கொண்டே இருப்பார். இளைஞர்! எப்போதும் தோளுக்கு மேலே ஓங்கியபடியே இருக்கும் கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருக்கும். ஆஸ்துமா இருக்கவேண்டும். இழுத்துக் கொண்டிருக்கும். வாயைத் திறந்தால்குப்பை கூழங்களைப் பறக்கவைப்பது போலகாற்று ‘ஹூய்ய்ய்’ என்று வரும். கிரீச்சிடும் குரலில் பேச முயற்சிப்பார். அவர் என்ன பாடம் படிப்பிகிறார்? எதுவும் தெரியாது. இங்கே என்னதான் செய்துகொண்டிருந்தார்? தெரியாது! ஆனால் நாம் என்ன செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் எப்படியும் அடித்துவிடுவார் என்று மட்டும் தெரியும். சிலருக்கு அவர் மனிதர்தானா என்றே சந்தேகம். இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், ‘புவி செத்துப்போய் மூன்று வருசமாச்சு’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஏதோ ஒரு அசுபயோக அசுப தினத்தில் புவியிடம் விசாரணையில் மாட்டிக்கொண்டேன்.

"உய்ய்ய் எங்க கர்ர்ர் யார்ர்?”

"உ ஹ்ஹ்ஹ் ர்ர்ர்ர் எந்த கிளாஸ்? சொல்லு"

சரமாரியாக கேள்விகள்.முதல் கேள்விக்குப் பதில் சொல்ல அவகாசமில்லை. அடுத்தடுத்து கேள்விகள். வழக்கம்போல பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருந்தது. சரமாரியாக இரண்டு முறை என் தோளுக்கருகே அடி விழுந்தபோதுகோபம் தலைக்கேறியது.வகுப்பில் படிப்பிக்கும் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியதில்லை. பிரம்பைப் பிடித்து பறித்து இழுத்தேன். முறிக்க முயற்சித்தேன். அனிச்சையாக என் வலதுகை சற்று உயர்ந்தது சுட்டு விரல் எதோ சொல்லும் பாவனையில் நீண்டிருந்தது.

சம்பவத்தில் புவி அதிர்ச்சியடைந்தமாதிரியிருந்தது. எதுவும் பேசவில்லை. மேலதிக விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். விசாரணை அதிகாரி சம்பவம் பற்றிக் கேட்டதும், கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது கண்கள் இருட்டி மின்னல் வெட்டி ஒரு முழு வட்டத்தை சுற்றியிருந்தேன். சொல்லமுடியாது, அது மூன்று வட்டமாகக்கூட இருக்கலாம். என் சுட்டுவிரல் மடக்கப்பட்டபோது நியாயமாக என் அலறல் என் வகுப்புக்குக் கேட்டிருக்க வேண்டும். அநியாயமாகவோ, அதிர்ச்சியிலோ சத்தம் போடவில்லை. முகத்தில் சரமாரியான தாக்குதலில் கண் மங்கலாகத் தெரிந்தது. குத்து மதிப்பாக நடந்து வகுப்புக்குள் சென்றபின்னர் கவனித்ததில், சட்டைப்பொத்தான் ஒன்று அறுந்திருந்தது. வாய்க்குள் உதடு கிழிந்து உப்புக்கரித்தது. முகம் வீங்கியிருந்தது.

வீட்டில் அப்பா கேட்டபோது. வகுப்பில் அடிதடி சண்டை என்றேன். பையன்களுடன் சண்டை என்பதால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. பிரச்சினையைச் சொல்லியிருந்தால் பள்ளிக்கு வந்திருப்பார். எனக்கு அவர்மீது எக்கச்சக்க கோபம் இருந்தது.சின்ன வயதில் சொல்லி வளர்த்துபோல ஸ்கொலர்ஷிப் இழவெல்லாம் பாஸ் பண்ணித் தொலைத்தும் என்னை யாழ் இந்துவில் சேர்க்காமல் கொக்குவில் இந்துவில் படிக்க விட்டது குறித்தது அது. அவருக்கு அதற்குக் காரணங்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் அந்தப் பள்ளியுடன் ஒன்றவே முடிந்ததில்லை. நாட்டுச் சூழல் காரணமாக நாலைந்து பள்ளிகளில் படித்திருந்தும் இரண்டு வருடங்கள் படித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் பள்ளிக்காலம் சுதந்திரமாக, சுவாரசியமாக இருந்தது அங்கேதான். ஒருவேளை அன்று அப்பாவிடம் சொல்லியிருந்தால் மறுநாளே பள்ளியை மாற்றியிருக்கக்கூடும். உண்மையில் பள்ளியிலேயே எனக்குத் தண்டனையாக மறுநாள் அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருப்பார்கள். ஆச்சரியமாக அப்படி நடக்கவில்லை.

அதையெல்லாம் விட எனக்குப் பெரிய கவலை ஒன்றிருந்தது. மேற்குறித்த சம்பவத்தில் நான் நொந்து நூடுல்ஸாகி வகுப்புக்கு வந்தது மட்டுமே சக மாணவர்களுக்குத் தெரியும். அதற்கு முன்னர் நான் நிகழ்த்திய அந்த வீரச்சம்பவம் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், கன்ரீனில் இலவச டீ, றோல் கிடைக்கும். வகுப்புத்தோழன் ஒருத்தன் என்னிடம் ‘இனிமே எல்லாம் அப்பிடித்தான்’ என்று சொல்லியிருப்பான். இதெல்லாம் நடக்காமல் போய்விட்டதே!

அதன் பிறகு புவி என்னிடம் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. பிறகு இடம்பெயர்ந்து சென்றபின்னர் நானும் கேள்விப்படவில்லை. புவியும் ஒரு விசித்திரமான மனிதர். அவருக்கு என்ன பாதிப்பு இருந்ததோ தெரியவில்லை. என் வலதுகை சுட்டுவிரலில் அவ்வப்போதுசற்றுப் பிரச்சினை இருக்கிறது. அது எதனால் என்றும் புரியவில்லை!

Most Read