முற்றம்
Typography

கதை சொல்லலும், கேட்டலும், மனித வாழ்வியலின் முக்கியமானதொரு கூறு. தமிழர்கள் நாமும் கதைசொல்லிக் கேட்டு வளர்ந்தவர்கள்தான்.

ஆனால் வணிக நுகர்வுக்குக் கலாச்சார மாற்றமும், நில நிகழ்வின் துயரங்களும்,  எங்கள் இளையவர்களை அதிலிருந்து வெகுதூரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவ்வாறு  தொலைதூரம் சென்று , நம் தொன்மம் தொலைந்து போகாதிருக்கும் முயற்சியாக இந்தக் கதை சொல்லிகள் புறப்பட்டிருக்கின்றார்கள்.

இக் கதை சொல்லிகள் சொல்லும் கதைகள் எமக்குத் தெரிந்தவையாகவும் இருக்கலாம். ஏனெனில் அக் குழுமத்தின் முதல்நிலையாளனாகிய ஞானதாஸ் காசிநாதர் " எமது பண்பாட்டில் .கதைகள், வயற்காட்டிலும், வரம்புகளிலும், வடலி வழியவும், தெருவோரங்களிலும், மதவுகளிலும், சந்தி வழியவும் சொல்லப்பட்டது. நாங்கள் பள்ளிக்கூட கழிவறைக்குள், சிறுநீர் கழித்தபடி கூட கதைகளும் பகிடிகளும் சொன்னதுண்டு.. "  எனக் குறிப்பிடுவதுபோல், எல்லா இடங்களிலும் நீக்கமற இருந்த எங்கள் கதைகளை மறந்து போனவர்களானோம்.

அவ்வாறு மறந்து போன கதைகளையும், கணினி விளையாட்டுக்களுக்குள் தங்களைத் தொலைத்துக் கொள்ளக் கூடிய இளைய தலைமுறையையும் மீட்டெடுத்து, விழியத்தின் வழியே இணையத்தில் கொண்டு வர முயல்கின்றார்கள் இக் கதை சொல்லிகள்.

இலங்கையின் பல்வேறு வகை சொல்மொழியாடல், பல்வேறு வயதினரின் உடல்மொழியாடல், என்னும் இக் கதைக் கதம்பத்தை வெகு நேர்த்தியாகத் தன் அனுபவ வழிக்காட்டலினாலும், ஔிப்பதிவினாலும், புதியதொரு கலைவடிவமாக வடித்தெடுக்கின்றார் ஞானதாஸ். வாழ்க்கையின் போக்கில் சொல்லப்படும் கதைகளாக இருந்த போதும், அவற்றுக்கான காட்சிப்படுத்தல், மற்றும் இசைக் கோப்பு என்பவற்றில் காணப்படும் நுட்பம் என்பவை, சினிமாப் பிரதியாக்கம், இயக்கம் என்பவற்றில் தகமைச் சான்றிதழும், தமிழ்மொழியில் தரமான குறும், நெடும், படங்களை இலங்கையில் உருவாக்கிய ஞானதாஸின் அனுபவத்தை வெளிப்படுத்துகின்றன.

சுவிற்சர்லாந்தில் உருவான முதல் திரையோவியமான  "பூப்பெய்தும் காலங்கள் " திரைப்பட உருவாக்கப்ப பணிகளின் போது, அவரது நேர்த்தியான செயற்பணிகளுடன் இணைந்திருந்து நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். படைப்பாக்கப் பணியினையே சுவையான கதையாடலாகச் செய்யும் கச்சிதம் தெரிந்தவர். அவரது வழிநடத்தலில் நடைபழகும் கதை சொல்லிகள், இலங்கையின் கதைசொல்லு மரபில் புதிய கதை சொல்லிகளாகத் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

எதைச்சுட்டுவது எனத் தவிக்கும் வகையில் நிறைந்து கிடக்கும் நல்ல பல கதைகளில் இருந்து மாதிரிக்குச் சில :

 

கதைஒளி youtube வலையகம்.
கதைசொல்லி வலைப்பக்கம்.
கதை சொல்லடா தமிழா பேஸ்புக் சமூக வலைத்தளம்.

4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இவற்றையும் வாசிக்கலாம் :

ஓயுதல் செய்யோம் !

வரமெனக்கு வாய்த்திட வேண்டும் !

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்