முற்றம்
Typography

தலைவர் ரஜினிக்கு…!

நலமாக இருக்கிறீர்களா?, ‘காலா’ படத்தின் ரிலீஸ் வேலைகள் எப்படிப் போகிறது? காலாவுக்கு கர்நாடகத்தில் தடை எனும் செய்தி கேட்டு கலங்கிப்போனேன்.

காலா மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று வேண்டிய திருப்பதி ஏழுமலையானிடம் முடிக் காணிக்கை செய்யவிருக்கிறேன். எந்திரனின் வெற்றியைத் தாண்டி காலா கலக்ஷனில் கலக்க வேண்டும். அதுதான் இப்போது எமக்கு முன்னாலுள்ள ஒரே குறிக்கோள்.

அதை விடுத்து, தூத்துக்குடிப் பக்கமெல்லாம் யார் உங்களைப் போகச் சொன்னது? தமிழ்நாட்டிலிருக்கிற சாமானிய மக்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்கிற செய்தியெல்லாம் தெரியாது. சும்மா சும்மா எடுத்ததற்கெல்லாம் போராடுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் வந்தால் என்ன? சில நூறு பேர் செத்தால் என்ன? அனில் அகர்வாலுக்கு இலாபம் வருகிறதல்லவா? உயிர்களா முக்கியம், அகர்வால்களின் கஜானாக்கள் நிரம்புவதுதானே முக்கியம். அதைத் தெரியாத மக்களைக் காண நீங்கள் ஏன் செல்கிறீர்கள்.

தலைவா, உலகமே அறிந்த சூப்பர் ஸ்டாரான உங்களைப் பார்த்து, “நீங்கள் யார்?“ என்று கேட்கிற துணிச்சல் சாமானிய தமிழனுக்கு வருகிறதென்றால், தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் கூடிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம். அவ்வாறான சூழலுக்குள் நீங்கள் ஏன் சென்று மாட்டிக் கொள்கிறீர்கள்.

தூத்துக்குடியில் 100 நாட்களாக மக்கள் போராடினார்கள், அப்போது நீங்கள் ஏன் அங்கு வரவில்லை என்று கேட்கிறார்கள். அவர்களிடம் சொல்லுங்கள், மருமகன் தயாரிக்கும் படத்தினை இடைநடுவில் விட்டு வர முடியாது. அப்படி சில மணித்தியாலங்கள் வந்தாலும், கோடிக்கணக்கில் நஷ்டமாகும் என்று. இந்த மக்களுக்கு பணத்தின் அருமை புரியாது தலைவா. அவர்கள் அப்படித்தான் கேட்பார்கள்.

போலீஸாரைத் தாக்கினால், அவர்கள் சுடத்தானே செய்வார்கள். இது தெரியாத மக்களிடம் ஏன் தலைவா செல்கிறீர்கள். வழக்கம் போல, “போலீஸாரைத் தாக்கிய வன்முறையாளர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்று, ருவிட் போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்திருக்க வேண்டியதுதானே.

இந்த ஊடகவியலாளர்களுக்கு வேறு வேலையே இல்லை. எதற்க்கெடுத்தாலும் துடுக்குத்தனமாக கேள்வி கேட்டுக்கொண்டியிருப்பார்கள். கட்சி ஆரம்பிக்கப்போவதாக நீங்கள் அறிவித்தவுடன், கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்று கேட்டு உங்களின் தலையைச் சுற்ற வைத்தவர்கள் இவர்கள். இவர்களிடம் சற்றுத் தள்ளியே இருங்கள்.

பெரியவர்கள் சொல்வதை மட்டும் கேட்பதுதான் ஊடகங்களின் வேலை, மறு கேள்வி கேட்கக்கூடாது என்கிற அடிப்படையே இவர்களுக்கு தெரியவில்லை. அப்படியானவர்களிடம் எல்லாம் ஏன் தலைவா பேசுகிறீர்கள். வழக்கம்போல, ஒரு அறிக்கையை விட்டிருக்க வேண்டியதுதானே.

உண்மைதான் தலைவா? போராட்டங்களால் நாடு சுடுகாடாகிவிடும். “ஆங்கில காலணித்துவத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றதெல்லாம், போராட்டத்தினால் இல்லை. அதிகார அடிவருடிகளினால்தான்” என்பது இந்த சாமானிய மக்களுக்கு தெரியவில்லை. அன்றைக்கும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிரை விட்டார்கள். நாட்டைச் சுடுகாடாக்கினார்கள். இப்போதும், அபிவிருத்தியின் அடிப்படைகள் தெரியாமல், பல்தேசியக் கம்பனிகளுக்கு எதிராகப் போராடி, நாட்டை அழிக்கிறார்கள்.

உங்களைப் போல, அதிகார- பணபலமிக்க நபர்களோடு இணக்கமாக இருந்து, வாழ்வில் உயர்வது எவ்வாறு என்பது பற்றியெல்லாம் இந்த மக்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் விளங்காது. ஆகவே, நீங்கள் போயஸ் தோட்டத்துக்குள் ஏசியை சற்று அதிகமாக வைத்துவிட்டு, பாபா நாமத்தைச் சொல்லுங்கள். அதுதான், உங்களுக்கு நல்லது.

இப்படிக்கு,
வேங்கை மகனுக்காக போஸ்டர் ஒட்டி, பாலூற்றக் காத்திருக்கும்
உயிர் ரசிகன்..!

மே 31, 2018

 

BLOG COMMENTS POWERED BY DISQUS