பதிவுகள்
Typography

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கிவிட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு மாகாண சபை இது தொடர்பாக ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிக்காட்டி விட்டது. முதலமைச்சர் இது தொடர்பாக மிக விரிவான விளக்கத்தைக் கொடுத்து விட்டார். அரசாங்கத்தோடு அதிகம் இணங்கிப்போகும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்று விமர்சிக்கப்படும் சுமந்திரனுக்கும் இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குமிடையில் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் ஒன்று நடந்திருக்கிறது. தமிழ் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் துறைசார் நிபுணர்களும், ஊடகவியலாளர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து விட்டார்கள். அரசாங்கத்துடன் நிற்கும் லிபரல் ஜனநாயக வாதிகளில் முக்கியமானவர் பாக்கியசோதி சரவணமுத்து. இவருடைய மாற்றுக் கொள்கைக்கான மையத்தின் ஆங்கில இணையத் தளமாகிய கிரவுண்ட் வியூஸ்-இல் இது தொடர்பாக விரிவான ஒரு கட்டுரை சில மாதங்களுக்கு முன்னரே பிரசுரமாகியிருந்தது. இத்தனை வாதப்பிரதிவாதங்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஜனவரி 7ஆந் திகதி தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பல்வேறு தரப்புக்களும் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றன. இந்திய அரசு, கத்தோலிக்கத் திருச்சபையின் தொண்டு நிறுவனங்களாகிய கியூடெக், ஹரிடாஸ், சுவிற்சலாந்தின் நிதி உதவியுடன் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ் டயஸ்பொறாவைச் சேர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் எனப் பல தரப்புக்களும் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றன.

அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களில் பொருத்து வீட்டுத்திட்டம் ஆகப்பிந்தியது ஆகும். ஏற்கனவே அரசாங்கம் ஒரு தொகுதி பணத்தை பயனாளிகளுக்கு வழங்கி பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றது. தவிர படைத்தரப்பும் நல்லிணக்கபுரம் என்ற பெயரில் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் பண உதவியோடு முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே பல முறைப்பாடுகள் உண்டு.

நிலைமாறு கால கட்ட நிதிச் செய்முறைகள் தொடர்பான சந்திப்புக்களின் போது தமிழ்ச் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இது தொடர்பாக தமது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுண்டு. இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் தொடர்பாக தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பயனாளிகளும், ஊடகவியலாளர்களும் தெரிவித்து வரும் கருத்துக்களைத் தொகுத்து பின் வருமாறு கூறலாம்.

வீட்டுத்திட்டம் எனப்படுவது வீடற்றவர்களுக்கே. இதில் வீடுள்ளவர்களும் பயன் பெறுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. பயனாளிகளைத் தெரியும் பொழுது நடைமுறைப்படுத்தப்படும் முறைமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உண்டு. உதாரணமாக, வடமராட்சி கிழக்கில் இவ்வாறு கட்டப்பட்ட பத்துக்கும் குறையாத வீடுகளில் யாரும் தங்குவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

வீடற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு கட்டத் தேவையான பணம் இல்லாதவர்களே. இவ்வாறு வீடு கட்டப் போதுமான காசு இல்லாதவர்களுக்கு அரசாங்கம் நிதி உதவி செய்து அந்தப் பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி தரப்படுவதற்கு முன்னரே அவர்களை முதற்கட்ட கட்டுமான வேலைகளை தொடங்குமாறு கேட்கப்படுகிறது.

வசதியில்லை என்பதால் வீடுகட்ட முடியாதிருக்கும் ஒருவரை நாங்கள் உதவி செய்கிறோம். அதற்கு முன் நீங்களும் ஒரு தொகையை கையில் வைத்திருப்பது நல்லது என்று கேட்கப்படுவதால் பயனாளிகள் கடன் வாங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. வடமராட்சி கிழக்கில் தாலியை அடகு வைத்து வீட்டைக் கட்டத் தொடங்கியவர்களும் உண்டு.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அலுவலர்கள் வேறொரு விளக்கத்தைத் தருகிறார்கள். வீட்டுத்திட்டம் அமுலுக்கு வந்த தொடக்கத்தில் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஒரு தொகுதி பணம் வழங்கப்பட்டது. அப்பணத்திற்குரிய கட்டுமானத்தை அவர்கள் முடித்துக் காட்டியபின் அடுத்தடுத்த கட்ட பணம் வழங்கப்படும். ஆனால் இவ்வாறு வழங்கப்பட்ட முதற்கட்ட பணத்தை ஒரு பகுதி பயனாளிகள் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அரச அலுவலகர்கள் வந்து கேட்கும் பொழுது முதற் கட்ட கட்டுமானங்களை காட்ட முடியாதிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது காரணமாக பயனாளிகள் வீட்டைக் கட்டுவதில் மெய்யாகவே ஈடுபாட்டோடு இருக்கிறார்கள் என்பதை எண்பிக்கும் விதத்தில் அவர்களாக வீட்டைக் கட்டும் பணிகளை முதலில் தொடங்கும் விதத்தில் நடைமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன என்று மேற்படி அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறு வழங்கப்படும் நிதி கட்டங்கட்டமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டமும் பூர்த்தி செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அரச அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக தொழில்நுட்ப அலுவலர் ஒருவர் அதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் பயனாளிகள் தொழில் நுட்ப அலுவலரின் இரக்கத்தில் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலமை உருவாகிவிட்டதாக ஒரு முறைப்பாடு உண்டு.

இது சில தொழில்நுட்ப அலுவலர்கள் பயனாளிகளை அவமதிக்கும் ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதாகவும், சில தொழில் நுட்ப அலுவலர்கள் இந்த முறைமையைப் பயன்படுத்தி பயனாளிகளைச் சுரண்டுவதாகவும், லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. வன்னியில் ஒரு மாவட்டத்தில் தொழில் நுட்ப அலுவலர் சிலர் பயனாளிகளிடம் குறிப்பாக குடும்பத்தலைவரை இழந்த இளம் விதவைகளாக உள்ள பயனாளிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

வடமராட்சிப் பகுதியில் ஒரு பயனாளி வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கும் போது அவருடைய தாயார் இறந்து விட்டார். எனவே வீட்டுக்கதவுக்கு நிலை வைக்கும் நற்காரியத்தை அவர் சிறிது காலம் ஒத்தி வைத்திருக்கிறார். ஆனால் வீட்டுத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் தொழில் நுட்ப அலுவலர் மேற்படி தாமதத்தில் இருக்கும் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அந்தப் பயனாளியிடம் விட்டுக்கொடுப்பின்றி நடந்து கொண்டதாக ஒரு முறைப்பாடு உண்டு.

மற்றொரு சம்பவத்தில் யாழ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்திட்டத்தில் ஒரு தொழில் நுட்ப அலுவலரை சம்பந்தப்பட்டவர்கள் தலைக்கவசத்தால் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர ஒவ்வொரு கட்டமாக பணத்தைக் கொடுக்கும் நடைமுறை காரணமாக மேசன்களின் பேரம் அதிகரித்திருப்பதாகவும் ஒரு முறைப்பாடு உண்டு. குறிப்பிட்ட கட்டத்தை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடித்துக் காட்ட வேண்டும். எனவே கால எல்லை காரணமாக பயனாளிகள் மேசன்மாரில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறது. இதனால் மேசன்மார் சில சமயங்களில் முன்பு ஒப்புக் கொண்டதை விட கூடுதலாக கூலியைக் கேட்கும் நிலமைகளும் தோன்றுகின்றன. குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் பயனாளிகளும் மேசன்மார் கேட்கும் கூலியை கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பயனாளிகள் ஒவ்வொரு கட்டத்தையும் உரிய கால கட்டத்துக்குள் முடிக்காவிட்டால் அதற்காகக் கடுமையாக நடந்து கொள்ளும் அரச அலுவலர்கள் குறிப்பிட்ட கட்டங்களைப் பூர்த்தி செய்த பின் தரப்பட வேண்டிய கொடுப்பனவு தாமதமாகும் போது அது பற்றி அலட்டிக் கொள்வதேயில்லையாம். அதாவது கொடுப்பது தானம் என்ற ஓர் உணர்வு அரச ஊழியர்களிடம் காணப்படுவதாக பயனாளிகள் முறைப்பாடு செய்கிறார்கள். தானத்தைப் பெறுபவர் அதற்குரிய பணிவோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று பயனாளிகள் கேள்வி கேட்கிறார்கள்.

இவை நிர்வாக நடைமுறையில் உள்ள பிரச்சினைகள். அதே சமயம் மற்றொரு முக்கிய குறைபாடு இந்த வீட்டுத்திட்டங்களில் உண்டு என்று அவற்றை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கும் போது கட்டுமானப் பொருட்களின் விலை எதுவாக இருந்ததோ அதே விலை வீட்டைக் கட்டி முடிக்கும் தறுவாயிலும் இருப்பதில்லையாம். இதனால் ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கும் போது செய்யப்பட்ட விலைமதிப்பீடுகள் கட்டி முடிக்கப்படும் போது ஏறிவிடுகின்றன. அரசாங்கம் இந்த அதிகரிப்பைக் கவனத்தில் எடுப்பதில்லையாம்.

இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் தொடர்பில் கடுமையாக விமர்சிப்பவர்கள் வீட்டுத்திட்டங்களில் பயனாளிகளைப் பங்காளிகளாக்குவது என்பது நடைமுறையில் பயனாளிகளைக் கடனாளிகளாக்குவதிலேயே முடிகிறது என்று கூறுகிறார்கள். காசில்லாத படியால் வீடு கட்ட முடியாதிருந்த ஒரு குடும்பத்துக்கு வீடுகட்ட காசு தருகிறேன் என்று கூறி முடிவில் அந்தக்குடும்பம் தனது சக்திக்கு மீறிக் கடன்படும் நிலைமையே உருவாகியிருப்பதாக பயனாளிகள் விமர்சிக்கிறார்கள்.

பயனாளிகளைப் பங்காளிகளாக்குவது என்பது குறிப்பாக வீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை ஒரு நல்ல முயற்சிதான். ஏனெனில் தனது சொந்த வீட்டை வேறு யாரோ கட்டித் தருவதை விடவும் தானே ஒவ்வொரு கல்லாகப் பார்த்துக் கட்டுவதில் ஒரு திருப்தியும் நிறைவும் உண்டு. தனது வீட்டுக்குரிய பொருட்களைத் தானே தேடித்தேடி தெரிவு செய்து தனது வீட்டைத் தானே ஓரளவுக்கு தனது விருப்பப்படி கட்டுவதில் ஒரு திருப்தியும் சந்தோசமும் உண்டு. ஆனால் இவ்வாறு பயனாளிகளைப் பங்காளிகளாக்கும் திட்டம் முடிவில் பயனாளிகளை தமது சக்திக்கு மீறிக் கடன்படுவதில் கொண்டுபோய் விடுகிறது என்று பயனாளிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் குறைப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன் வைக்கும் சிவில் அமைப்புக்கள் பயனாளிகளை பங்காளிகளாக்குவதை விடவும் சில அமைப்புக்கள் கட்டித்தரும் வீடுகள் பரவாயில்லை என்று கருத்துத் தெரிவிக்கின்றன. குறிப்பாக கியூடெக், ஹரிடாஸ் போன்ற நிறுவனங்கள் வீடுகளைக் கட்டி முடித்துவிட்டு பயனாளிகளிடம் சாவியைத் தருகின்றன. படையினரால் உருவாக்கப்பட்டுவரும் நல்லிணக்க புரங்களிலும் இப்படித்தான். இந்த ஏற்பாடு தம்மைக் கடனாளியாக்குவதில்லை என்று ஒரு தொகுதி பயனாளிகள் கூறுகிறார்கள்.

இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பில் விமர்சிக்கும் பயனாளிகள் அரசு சாரா நிறுவனங்கள் கட்டித்தருவதைப் போல அரசாங்கமும் வீடுகளைக் கட்டித்தந்தால் நல்லது என்று ஒரு கருத்தை முன்வைத்து வரும்; ஒரு பின்னணியில்தான் பொருத்து வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த விழைகிறது.

வீடற்ற தமிழ் மக்களின் ஒருபகுதியினர் குறிப்பாக இப்பொழுதும் தற்காலிக தகர வீடுகளிலும், தொத்துப்பறி வீடுகளிலும் வசிப்பவர்கள் பொருத்து வீடோ, பொருந்தா வீடோ எதுவானாலும் கிடைத்தால் சரி என்ற ஒரு மனோ நிலையோடு காணப்படுவதை சில ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பசித்திருப்பதை விட கஞ்சி மேலானது என்று கருதும் ஒரு தொகுதி தமிழ் மக்கள் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிக்கிறார்கள். இது தொடர்பில் புத்திபூர்வமான விளக்கங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

பொருத்து வீட்டை விஞ்ஞான பூர்வமாக விமர்சிக்கும் பலரும் ஏற்கனவே நன்கு செற்றில்ட் ஆகிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்றும் இவர்கள் பாதுகாப்பான கல் வீடுகளில் வாழ்ந்தபடி பொருத்து வீடு வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றும் மேற்சொன்ன பயனாளிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். பொருத்து வீடு வேண்டும் என்று தமது பெயர்களைப் பதிந்த ஒரு பகுதியினர் இப்பொழுதும் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகிறார்கள் என்று மேற்சொன்ன ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இதனிடையே கடந்த கிழமை கிளிநொச்சியில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சிக் கச்சேரிக்கு முன்பு சுலோக அட்டைகளைத் தாங்கியபடி ஒரு பகுதி மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். இவ்வாறான ஓர் அரசியல் சூழலில் குறிப்பாக தமிழ் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சரவை பொருத்து வீட்டிற்கு அனுமதியை வழங்கியிருக்கிறது. இதன்படி வரும் 7ஆம் திகதி பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் அமுலுக்கு வர வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் வரும் 9ஆம் 10ஆம் திகதிகளில் முன் வைக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு காலச்சூழலில் பொருத்து வீட்டுத்திட்டம் அமுல் செய்யப்படுமாகவிருந்தால் அது இரண்டு விடயங்களை எண்பிப்பதாக அமைந்து விடும்.

முதலாவது அந்த வீடுகளைக் கட்டித்தரப் போகும் கோப்பரேற் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள நலன்சார் உறவு எவ்வளவு வலிமையானது என்பது. பயனாளிகளைப் பங்காளிகளாக்கும் திட்டம் பயனாளிகளைக் கடனாளிகளாக்கியிருக்கிறது அதேசமயம் பொருத்து வீட்டுத்திட்டமோ அரசாங்கத்தில் உள்ள சிலரைக் பெரும்கோடீஸ்வரர்களாக்கப் போகிறதா? என்று ஒரு பயனாளி கேட்டார்.

இரண்டாவது ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேரம் எங்கே நிற்கிறது என்பது. அதாவது தமிழ்த்தரப்புப் பேரம் தாழ்ந்து செல்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்கப்போகும் ஒரு சந்தர்ப்பம் அது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்