Friday, Jul 29th

Last update03:39:56 PM

எங்களால் முடியும்! : தொழிலாளர் நிர்வாகத்தில் தொடரும் பத்திரிகை நிறுவனம்

ஒரு நாட்டின் அரசியல், மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காற்றுவது

ஊடகத்துறை. ஆயினும் அந்தத் துறைசார்ந்த தொழிலாளர்களுக்குப் பிரச்சனைகள், நெருக்கடிகள் ஏற்படும் போது, அதிலும் தங்களது முதலாளிகளாலோ, நிர்வாகத்தினராலோ பிரச்சனைகள் ஏற்படும் போது, அவர்களால் எளிதில் அதனை வெளிப்படுத்தி விட முடிவதில்லை.

பெரும்பாலும் இவ்வாறான நிலை காணப்படுகின்ற சூழ்நிலயைில், பொருளாதார வீழ்ச்சிக்குள் சிக்கி நிற்கும் கிரேக்கத்தில், ஒரு பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் எவ்வாறு தமக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றார்கள் என்பதை பதிவு செய்கிறது கலையகம் வலைப்பக்கத்தின் இக் கட்டுரை. கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர்.

பெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.

கிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை.

இதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் சிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.

கடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. "முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்," என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.

வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.

நன்றி: கலையகம்

comments powered by Disqus