பதிவுகள்
Typography

ஆளும் கூட்டணியில் இருந்து தனது கட்சியை வாபஸ்பெறுவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு நாட்டைப் பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. 

பாராளுமன்றக் கூட்டத்தொடரை நவம்பர் 16 வரை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி மறுநாள் பிறப்பித்த உத்தரவினால் நிலைமை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் பிரதமர் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உறவுகள் விரைவாகச் சீர்குலைந்துகொண்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும். அத்துடன் ராஜபக்ஷவுடன் கூட்டுச்சேருவதற்கு அவருடன் சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. ஆனால், அவரின் சடுதியான இரகசிய தந்திரோபாயம் மூத்த அரசியல்வாதிகள் உட்பட சகலரையும் நினைக்கமுடியாத அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அரங்கேற்றப்பட்டிருக்கின்ற அரசியல் நாடகத்தின் விபரங்கள் விரிவாகத் தெரியவரும் முன்னதாகவே ராஜபக்ஷ முதல்நாள் வரை தனது பிரதம அரசியல் எதிரியாக விளங்கிய ஜனாதிபதி முன்னிலையில் மகிழ்ச்சியுடன் பிதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தன்னைப் பதவிநீக்கம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியிருக்கும் விக்ரமசிங்க இன்னமும் தானே பிரதமராக பதவியில் தொடருவதாக வலியுறுத்துகிறார். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்ற அவர் சபையில் வாக்கெடுப்பை நடத்துமாறு ராஜபக்ஷ - சிறிசேன கூட்டுக்கு சவால் விடுத்திருக்கிறார்.

பாராளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தியதன் மூலமாக ஜனாதிபதி சிறிசேன தனது பாராளுமன்றத்தில் தேவையான ஆதரவைப் பெறுவதில் தனக்கிருக்கும் பலவீனத்தை அம்பலப்படுத்திவிட்டார் என்றே தோன்றுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கைகளும் அரசியல் விசுவாசம் கேள்விக்குள்ளாகக்கூடிய வியூகங்களும் முன்னெடுக்கப்படக்கூடிய அடுத்த இரு வாரங்களும் மிகவும் இக்கட்டானவையாக இருக்கும். இவையெல்லாம் இலங்கை அரசியலில் ஒன்றும் புதுமையானவையுமல்ல. ஆனால், முற்றுமுழுதாக சிறிசேனவின் செயற்பாடுகளின் விளைவாகவே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்பு உண்மையில் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடியதே. இலங்கை நாணயத்தின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த அரசியல் நெருக்கடி மூண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலக்காமலேயே ராஜபக்ஷவை பிதமராக நியமித்த சிறிசேனவின் செயல் அப்பட்டமான நிறைவேற்று அதிகாரத் துஷ்பிரயோகமே அன்றி வேறொன்றுமில்லை. குறுகிய அரசியல் நலன்களினால் தூண்டப்பட்டு ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் பாராளுமன்றச் செயன்முறைகளை அவர் அவமதித்திருக்கிறார் எனபதையே பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. இந்த அவசர நடவடிக்கைகளில் அவர் நாட்டம் காட்டியதன் மூலமாக ஜனநாயகத்தை பாரதூரமான ஆபத்திற்குள் தள்ளிவிட்டிருப்து மாத்திரமல்ல, 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களில் கணிசமான பிரிவினர் உட்பட இலங்கையர்களை ஏமாற்றியும் விட்டார்.

அரசியல் செல்வாக்கைச் தோதித்துப்பார்ப்பதற்கான சிறந்த அரங்கு பாராளுமன்றமேயாகும். பாராளுமன்றச் செயன்முறைகளுக்கு புறம்பான அதிகாரப்போராட்டம் (அதுவும் சட்டவிரோத வழிமுறைகளின் மூலமாக) அரசியல் குண்டர் வன்முறைகளையும் குழப்பநிலையையுமே அதிகரிக்கும். மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் வன்முறைகளில் இருந்தும் இரத்தக்களரியில் இருந்தும் படிப்படியாக மீண்டுகொண்டிருக்கின்ற இலங்கை பொருளாதார - சமூகச் சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், 2015ஆம் ஆண்டில் திறந்துவிடப்பட்ட ஜனநாயக வெளியில் இருந்து பின்னோக்கிச் செல்வதைத் தாங்கமாட்டாது.

ராஜபக்ஷவின் ஒரு தசாப்தகால எதேச்சாதிகார ஆட்சிக்குப் பிறகு ஜனநாயகப் பாதைக்கு நாட்டை மீண்டும் கொண்டுவரப்போவதாக வாக்குறுதியளித்த பிரத்தியேகமான அரசியல் கூட்டணியொன்றிலேயே சிறிசேனவும் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்தார்கள். ராஜபக்ஷவை கைவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிரணியின் பொதுவேட்பாளராகக் களமிறங்கி அவரைத் தோற்கடித்த சிறிசேன மீண்டும் அதே ராஜபக்ஷவுடன் கைகோர்ப்பதில் இருக்கக்கூடிய விசித்திரம் ஒருபுறமிருக்க, எந்த சுத்துமாத்து வழியில் என்றாலும் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு சிறிசேன கொண்டிருக்கு ஆசை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏற்கெனவே பெரஞ் சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது என்றபோதிலும் கூட, பாராளுமன்றம் கூடும்போது( சாத்தியமானால் நவம்பர் 16 க்கு முன்னர்) நேர்மையான முறையிலான வாக்கெடுப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

( ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம்- 29 ஒக்டோபர் 2018)

BLOG COMMENTS POWERED BY DISQUS