பதிவுகள்
Typography

ஜெயேந்திரர், தன்னுடைய வாழ்நாளின் பிற்பகுதி முழுக்க எதிர்மறையான கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்ட மதத்தலைவர்.அவருடைய இளம் வயதில் இந்து மதத்தை சீர்த்திருத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்டிருந்தார். முன்னோர் செய்த தவறுகளை நேரடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவை களையப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.

மதமாற்றத்துக்கு தீர்வு, அதை எதிர்ப்பது அல்ல. மதமாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து ஒழிப்பதே என்கிற முடிவுக்கு வந்திருந்தார்.

மதம் என்பதை தாண்டி மக்கள் சேவைக்கு மடங்கள் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து கல்வி நிலையங்கள், மருத்துவ சேவை, அரசியல் பார்வை என்று ஒரு மடாதிபதியின் எல்லைகளை தாண்டி செயல்பட்டார்.

எண்பதுகளின் துவக்கத்தில் ஒருங்கிணைந்த செங்கை மாவட்டம் முழுக்க காஞ்சி மடம் சார்பில் தரமான கல்வியை கொண்டுச் சேர்க்கும் வகையில் ‘சங்கர வித்யாலயா’ பள்ளிகள் துவக்கப்பட்டன. இதில் பார்ப்பனரல்லாத குழந்தைகள் அதிகளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ஜெயேந்திரரின் விருப்பம்.

ஆனால் -

அதை நடைமுறைப்படுத்தியவர்களின் கோளாறு காரணமாக அவரது நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. நான் மழலையர் வகுப்பில் சேர்க்கப்பட்ட முதல் பள்ளி சங்கர வித்யாலயா. எங்கள் பகுதியில் பார்ப்பனரல்லாத குழந்தைகள் முதன்முறையாக கான்வெண்ட் வகுப்பில் சேர்ந்தது அங்குதான். அதற்கு முன்பாக கான்வெண்ட் என்றாலே அது சர்ச்சுகள் நடத்துவதுதான். அங்கெல்லாம் கிறிஸ்தவ மதக் குழந்தைகளுக்குதான் முன்னுரிமை கிடைக்கும். மாற்று மதத்தினர் சேரவேண்டுமென்றால் பெரும் தொகையை டொனேஷனாக தரவேண்டும். பொருளாதாரரீதியாக வசதியாக இருந்த பார்ப்பனக் குழந்தைகள்தான் அந்த வாய்ப்பையும் பெறுவார்கள்.

ஜெயேந்திரரின் சாதனைகளில் மகத்தானதாக குறிப்பிடப்பட வேண்டியது சங்கர நேத்ராலயா. லட்சக்கணக்கானோருக்கு கண்ணொளி ஏற்படுத்திய மகத்தான சேவை நிறுவனம். காஞ்சி மாவட்ட கிராமங்களிலிருக்கும் முதியோர் ஆயிரக்கணக்கனோருக்கு முற்றிலும் இலவசமாகவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துத் தந்திருக்கிறார்கள். அவர்களது கண் பரிசோதனை முகாம்களில் சோதனை செய்துக் கொண்டவர்களுக்கு ஏதேனும் கோளாறு இருக்குமேயானால், வீட்டுக்கு வந்து அவர்களது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயர்தரமான உபசரிப்போடு சிகிச்சை அளித்து அனுப்புவார்கள். என் தாயாருக்கேகூட சங்கரநேத்ராலாய தரமான சிகிச்சை கொடுத்ததற்காக தனிப்பட்ட முறையில் சங்கரநேத்ராலயாவுக்கு நன்றிக்குரியவன்.

பள்ளி, மருத்துவமனை, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று மடத்தின் சேவைகள் விரிவுபடுத்தப் பட்டதற்கு ஜெயேந்திரரே முழுமையான காரணம். அவரது காலத்தில்தான் மடம் பொருளாதாரரீதியாக ஸ்திரமானது.

எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் சுவாமிகளின் திக்விஜயங்கள் முக்கியமானவை. திடீர் திடீரென்று தன் வண்டியை சேரிகளுக்கு விடச்செய்வார். வர்ணத்தில் சேர்க்கப்படாத பஞ்சமர்களை இந்துக்களாக அங்கீகரிக்கக்கூடிய மனம் கொண்ட மதத்தலைவராக அவரே இருந்தார். இதனால் சொந்த சாதியினரின் மனவருத்தத்தையும் சம்பாதித்தார்.

பெரியவர் சந்திரசேகர் மறையும்வரை காஞ்சி மடம் என்பது முழுக்க பார்ப்பனீயமயமாக்கப்பட்ட மடமாக இருந்தது. ஜெயேந்திரர், மடாதிபதியான பிறகு பார்ப்பனரல்லாத மற்றவர்கள் அங்கே சகஜமாக புழங்க முடிந்தது.

தொண்ணூறுகளில் பாபர் மசூதி பிரச்னை நாடு முழுக்க கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தபோது, ‘பேச்சுவார்த்தை மூலமே தீர்வு’ என்று தைரியமாக சொன்ன இந்து மதத்தலைவர் இவர் மட்டும்தான். சொன்னதோடு இல்லாமல் டெல்லி இமாம் போன்றவர்களோடு இணக்கமாக செயல்பட்டு பிரச்சினையை தீர்க்க நேரடியாக முனைந்தார். வட இந்திய மடாதிபதிகளும், அரசியல்வாதிகளும் ஜெயேந்திரரின் இந்த மத நல்லிணக்கப் போக்கை ஏற்றுக் கொள்ளாமல் அவரை திருப்பி அனுப்பினார்கள்.

ஜெயேந்திரரின் ஆன்மா சாந்தியடைய அவர் நம்பிய இறை அருள் புரியட்டும்.

நன்றி: யுவகிருஷ்ணா

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்