பள்ளிச் சிறார் தொடர் மரணம் : யார் காரணம்..?
- Saturday, 18 August 2012 01:42

பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவன் ரஞ்சன் நீச்சல் குளத்தில் இறந்து போனது தொடர்பான பொதுநல வழக்கு நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில்
நீதிபதிகள் இக்பால், சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,
காலையிலேயே மாணவன் ரஞ்சனை நீச்சல் பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள் காலை உணவுக்குப் பின்னர் நீச்சல் பயிற்சி அவசியம்தானா? நீச்சல் பயிற்சியின் போது உயிர் போய்விட்டது எனும்போது, நீச்சல் குளம் தனியார் குத்தகையில் இருக்கிறது என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். இது ஒரு கொலை வழக்காக பதிவாக வேண்டும் என்று வாதாடியிருக்கிறார்.

இதை கேட்ட நீதிபதி, பள்ளியில் நீச்சல் கட்டாயப் பாடமாக்கப் பட்டுள்ளதா? அப்படி கட்டாயப் பாடம் எனில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிக்கையில் காட்டப் பட்டுள்ளதா? காலையில் சாப்பிட்ட உடன் நீச்சல் பயிற்சிக்கு அழைத்து சென்றது ஏன்?. என்று நீதிபதி கேட்டிருக்கிறார்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், நீச்சல் குளம் தனியார் பாதுகாப்பில் இருப்பதால நீச்சல் பயிற்சியாளர், நீச்சல்குளப் பராமரிப்பாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் விசாரணைக்குப் பின்னர்தான் மற்ற விஷயங்கள் தெரிய வரும். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தால்தான் விவரம் தெரியவரும் என்று கூறியிருக்கிறார்.
உடனே நீதிபதி, இது தொடர்பான விவர அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கும், மத்திய கல்வி வாரிய ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டுவிட்டு, ஒரு தரப்பினரை மட்டுமே இதில் குற்றம் சொல்ல முடியாது, விளம்பரங்களின் மாயையில் பள்ளியைப் பற்றியும், பாதுகாப்பு விஷயம் பற்றியும் விசாரிக்காமல் சேர்த்துவிடும் பெற்றோர்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று மாலை நிரஞ்சன் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளனர். அதெவேளை பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதவர் ஷீலா ராஜேந்திரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் என்ன கருதுகின்றார்கள் ?
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவரிடம் கருத்துச் சொல்கையில்;
"பத்மசேஷாத்ரி பள்ளியில் ரஞ்சன் பள்ளி நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சியின் போது இறந்திருக்கிறான். ஆனால், இன்னமும் பள்ளி தாளாளரிடம் இதுபற்றி விசாரணை நடத்தவில்லை. தாளாளரை கொலை வழக்கில் கூட கைது செய்யலாம், ஆனால், இந்த பள்ளி தாளாளரிடம் விசாரனை கூட நடத்தவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பத்ம சேஷாத்ரி பள்ளித் தாளாளர் தமிழக முதல்வருக்கு மிக நெருக்கமானவர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்த போது, அதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்த பள்ளிகளில் பத்மசேஷாத்ரி பள்ளிதான் முதல் கையெழுத்தை இட்டது. காரணம் இவர்கள் பணக்காரர்கள், மேல்சாதிக் காரர்கள். இவர்களுடன் தலித் குழந்தைகளோ, மற்ற இல்லாத ஏழைப்பட்ட குழந்தைகளோ உட்கார்ந்து பயின்றால் இவர்களுக்கு இழுக்கு.
இப்படிப் பட்ட தாளாளருக்கு கல்வித்துறையில் சாதனை செய்ததற்காக அவ்வையார் விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது தமிழக அரசு. பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று சொல்லிய அவ்வையார் எங்கே? காசுக்கு கல்வி கொடுக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளித் தாளாளர் திருமதி ஓய் ஜி பி ராஜலக்ஷ்மி எங்கே? ஏழை எளியவர்களுக்கு கல்வியை தானமாக அளித்துவிட்டாரா?
கற்றைகற்றையாக பணத்தைப் பெற்றுக் கொண்டு கல்வியை வியாபாரமாக்கியவருக்கு அவ்வையார் விருது. எங்கே போய்க்கொண்டிருக்கிறது தமிழகம்? பணம் பிடுங்கும் நிறுவனத்துக்கு மாலை மரியாதை கவுரவம் என்று அரசே வழங்குவது எதற்காக? மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ், இவர்கள் பள்ளியில் ஏழை, எளியவர்கள், கீழ் சாதியினர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்களா? இதை முதலில் நீதிமன்றம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
புகழ்பெற்ற பாரதியார் பாடல்களில் கூட காலையில் எழுந்ததும் படிப்பு, என்றும் மாலை முழுவதும் விளையாட்டு என்றும்தான் வருகிறது. நீச்சல் பயிற்சிக்கு காலையிலேயே மாணவனை அழைத்து சென்றது ஏன்? பள்ளி என்றால் எந்த நேரத்திலும் எந்த பயிற்சியும் கொடுக்கலாம் என்று சுதந்திரம் இருக்கிறதா? இதற்கு ஏதும் வரையறை இல்லையா? இல்லை என்றால் இதையும் வகுப்பது நீதித்துறை அல்லது அரசின் கடமை.என்பதை உணரவேண்டும்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற காலங்கள் போய், இப்போது பள்ளிகள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று இருக்கிற நிலையில், பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளை தயவு செய்து உங்கள் அருகாமையில் இருக்கிற பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள். உங்கள் குழந்தைக்கு எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் தேவை என்று நினைத்தால் தனியாக பயிற்சியாளரை வைத்து விடுமுறை நாட்களில் பயிற்சி கொடுங்கள். அதுவும் கூட உங்கள் கண்ணெதிரில் நடக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்" என கொதிக்கும் உணர்வுகளை மறைத்து, உருக்கமாகச் சொல்லி முடித்தார்.
மனோதத்துவ நிபுணர் டாக்டர் ரங்கராஜனிடம் கருத்து கேட்டபோது, "ஒட்டுமொத்தமாக, சர்வ சாதாரணமாக ஒருவரை குற்றம் சொல்லிவிட முடியாது. ஏனோதானோவென்றும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசிவிடவும் கூடாது. ரொம்ப ஆழமாக சிந்தித்து, நடந்த அனைத்து விஷயங்களையும் அசை போட்டோம் என்றால், பெரியவர்கள் நாம் குழந்தைகளிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்ச்சிதான் எழுகிறது. இதற்கு மேல் ஒரு தவறான குற்றம் இல்லை" என்கிறார் டாக்டர் ரங்கராஜன்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி மையம் நடத்திவரும் விஜயா இதுபற்றிப் பேசுகையில், "நான் முதலில் பயிற்சி கொடுப்பது, பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விஷயங்கள்தான். இதில் நிறைய விஷயங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம். குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி, நிறைய பள்ளிகளின் டீச்சர்சுக்கு ஒர்க்ஷாப் நடத்தி வருகிறோம்.
ஆசிரியர்கள் முதலில் குழந்தைகளுக்கு தாங்கள் இரண்டாவது அம்மா என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு குழந்தைகள் மீதும் கண்வைக்க வேண்டும், பள்ளியில் நுழைந்து விட்டால், சொந்த விருப்பு, வெறுப்புக்களை செருப்போடு சேர்த்து வெளியே கழற்றிவைத்து விட வேண்டும்..
இந்த விஷயத்தில் நாம் பெற்றோர் மீதும் குறை சொல்ல வேண்டியதாகிறது. நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விடுவதோடு சரி. பெற்றோர் மீட்டிங் என்றால் கூட பள்ளிக்கு பல பெற்றோர் வருவதில்லை. பாதுகாப்பு பற்றிய விஷயங்களில் அக்கறை காண்பிப்பதில்லை. ஒரு பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். இப்படி ஓவர் நம்பிக்கை தங்கள் குழந்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பள்ளியே கவனித்துக் கொள்ளும் என்கிற ஓவர் நம்பிக்கையில் பள்ளி விஷயங்களில் பெற்றோர் தலையிடுவதில்லை.
இந்த ரஞ்சன் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், குழந்தையை நீச்சல் பயிற்சிக்கு சேர்த்தோமே, அந்த நீச்சல் குளம் பாதுகாப்பு நிறைந்ததா, இது பள்ளியோடு சேர்ந்ததா, பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி நேரில் விவாதம் நடத்த முடியுமா என்றெல்லாம் யோசித்திருப்பார்களா? இல்லை பள்ளி நிர்வாகத்திடம் பேசியிருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும்.
சாதாரணமாக ஒரு வாடகை வீடு மாறவேண்டும் என்றாலே பல விஷயங்களைப் பற்றி ஆராயும் நாம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் மட்டும் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதில்லை. காரணம் பள்ளிகளின் மீதுள்ள ஓவர் நம்பிக்கை. இந்த நம்பிக்கை கூடாது என்பதுதான் என் வாதம். இதில்தான் நாம் துருவித்துருவி பல விஷயங்களை ஆராய்ந்து செயல்படவேண்டும். இதற்கு மேல் இதில் பேச ஒன்றுமில்லை" என்கிறார் விஜயா.
பெற்றோர்கள் தொடர்பில் விஜயாவின் கருத்து உண்மைதானோ? எனும் எண்ணும் வகையிலிருந்தது, இது விடயம் தொடர்பில் நாம் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க முற்பட்டபோது. பலபெற்றோர்கள் வாய்திறக்க மறுத்தார்கள். வாய் திறந்தவர்களும், இது பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விடயம். வேண்டாங்க.. என ஒதுங்கிக் கொண்டார்கள்.
மதுரை பாத்திமா கல்லூரிப் பேராசிரியரும், சில வருடங்கள், சிறார் கைதிகளுக்கான ஆலோசகர் குழுவில் இடம் பெற்றிருந்தவருமான ரேவதி சுப்புலட்சுமி இது பற்றித் தனது கருத்துத் தெரிவிக்கையில், "குழந்தைகள் மீது அனைத்தையும் தினிக்க பெற்றோர் ஆசைப்படுகிரார்களேத் தவிர, குழந்தைகளின் பாதுகாப்புப் பற்றி அக்கறை காண்பிப்பதில்லை. அந்த காலத்தில் எல்லாம் அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கே அந்த தெருவே அல்லோல கல்லோல படும். பள்ளிகளில் மிட்டாய் கொடுப்பது, பள்ளிக்கு தேசப் பெரியவர்களின் படங்களை குழந்தையை பள்ளியில் சேர்த்த நினைவாக பரிசாக கொடுப்பது என்று அமர்க்களப்படும். குழந்தைகளுக்கும் பள்ளியைப் பற்றிய பயம் இருக்காது, இந்த பயமின்மையே குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்.
இப்போது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது, பெற்றோரே பயந்து கொண்டுதான் பள்ளியில் நிற்கிறார்கள். அப்புறம் குழந்தைகளுக்கு பள்ளி என்பது எப்படி பயமில்லாததாக இருக்கும், பாதுகாப்பு உணர்வு எங்கிருந்து வரும்? என்னைப் பொறுத்தவரை ஆரம்பமே தப்பு. நமது கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். எல்லாவற்றிலும் வெறும் ஏட்டுக் கல்வி நமது குழந்தைகளுக்குப் பயன் தராது. கொஞ்சம் வாழ்க்கைக் கல்வியும் வேண்டும். இதுபோல வாழ்க்கைக் கல்வியில்தான் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவார்கள். கதைகளும் கற்பனைகளும் நிறைந்ததுதான் குழநதைகளின் வாழ்க்கை. அந்த கதைகளையும், கற்பனைகளையும் விளக்கி வைத்து உண்மை நிலையை உணர்த்தும் கடமை பெற்றோருக்கு முதலில் உண்டு, அடுத்ததாக பள்ளிகளுக்கு உண்டு.
இப்போது குழந்தைகள் படு புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு நீங்கள் உண்மை நிலையைப் புரியவைத்து, இந்த இடத்தில் இப்படித்தான் நீ நடந்து கொள்ளவேண்டும் என்று ஒருமுறை உணர்த்திவிட்டால் போதும். அப்படித்தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஊட்டிவிடுவது என்பது ஒவ்வொரு பெற்றோர் ஆசிரியர் கடமை.இந்த கடமையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். பின்னர் அவர்களே அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். நீங்கள் அவர்கள் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவேண்டாம்.
எல்லாவற்றிலும் உங்கள் குழந்தை முதலாவதாக இருக்க வேண்டும் என்றுதானே அனைத்துப் பயிற்சிகளையும் உங்கள் குழந்தைகளுக்கு தர முற்படுகிறீர்கள், அதில் எப்படி, எப்போதெல்லாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று ஒருமுறையாவது சொல்லிக் கொடுத்திருப்பீர்களா? பெற்றோர்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. அதை தட்டிக் கழிக்காமல் குழந்தைகள் மீதான உங்கள் கடமைகளில் இருந்து ஒரு விஷயத்தில் கூட வழிதவறிப் போய்விடாதீர்கள்? இதுதான் என்னுடைய அட்வைஸ்" என்கிறார் கல்லூரிப் பேராசிரியர் ரேவதி சுப்புலட்சுமி
உடற்பயிற்சி ஆசிரியர் கிருஷ்ணனிடம் நீச்சல் பயிற்சியின் போது பாதுகாப்பு விஷயங்கள் பற்றி கேட்டோம், இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் "மேற்பூச்சாக காயம் ஏற்படும் விளையாட்டுகளில் கூட பாதுகாப்புதான் முக்கியமாக கருதப் படுகிறது. அதனால்தான் கபடி, கோகோ போன்ற விளையாட்டுக்கள் விளையாடும் போது கால் முட்டி பாதுகாப்புக்கு கவசங்கள் போட்டுக் கொள்கிறோம். இன்னும் பெரிய பெரிய விளையாட்டுக்களில் பார்த்தால் தெரியும் என்னென்ன கவசங்கள் போட்டுக் கொள்கிறார்கள் என்று.
நீச்சல் என்றால், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நீச்சல் குளம் அதிகப் பட்சம் மூன்றரை அடிக்கு மேல் இருக்கக் கூடாது குறைந்த பட்சம் 3 அடி இருக்கலாம். மேலும் நீச்சல் குளத்தின் சுவர்களில் கம்பி குழாய் பிடிகள் இருக்க வேண்டும்.
நீச்சல் குளத்தில் காற்று நிரப்பிய டியூப்க்ளில் வளையங்கள் மிதக்க வேண்டும். ஒரு அவசியம் எனும்போது குழந்தைகள் அதைப் பிடித்துக் கொண்டு தப்பிக்க வசதியாக இவைகள் நீரில் மிதந்து கொண்டிருக்க வேண்டும். சேப்டி ஜாக்கெட் என்பது குழந்தைகள் நீச்சலில் எக்ஸ்பர்ட் ஆகும்வரை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். இதுவெல்லாம் இல்லாமல் நீச்சல் பயிற்சியாளரே உடன் இருந்தாலும் குழந்தைகள் நம் கண்ணிலிருந்து தப்பி விடுவார்கள். காரணம் தண்ணீர் என்பது அவ்வளவு ஆபத்தான ஒரு விஷயம். குழந்தைகள் தண்ணீரை பார்த்தாலே தங்களை மறந்து விடுவார்கள். எனவே குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிக கவனமாக இருக்கவேண்டும்." என்று கூறும் கிருஷ்ணனிடம்,
காலையில் சாப்பிட்ட பின்னர் நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாமா? என்று கேட்டபோது, "சாப்பிட்ட பின்னர் அதுவும் குழந்தைகளுக்கு சாப்பிட்ட பின்னர் நீச்சலில் பயிற்சி அழிப்பது என்பது மிகத் தவறான ஒரு விஷயம். தண்ணீரில் இறங்கினாலே மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும் குழந்தைகளுக்கு. வயிறு நிறைய சாப்பாடு இருந்தால் வயிறு வலிக்க ஆரம்பித்து விடும்" என்கிறார் உடற்பயிற்சி ஆசிரியர் கிருஷ்ணன்.
ஒய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர் சின்னசாமியிடம் குழந்தை ரஞ்சன் இறந்த சம்பவம் தொடர்பான அவரின் கருத்தைக் கேட்டோம், "என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த பிரைவேட் பள்ளிகளே கூடாது என்றுதான் சொல்லுவேன். அவர்களுக்கு அவ்வளவாகப் பொறுப்பு போறாது. எதற்காக சொல்கிறேன் என்றால், அவர்களுக்கு எவ்வளவோ டென்சன் இருக்கும். அதுவும் இந்த பள்ளிகள் விஷயத்தில்தான். போட்ட பணம் வருமா? மாத சம்பளத்தை ஆசிரியர்களுக்கு ஒழுங்காக கொடுக்க முடியுமா? அதையும் கொடுத்து நமக்கு லாபம் கிடைக்குமா? இப்படி எத்தனையோ கவலைகள். இதில் படிக்கும் பிள்ளைகளைப் பற்றியும் அவர்கள் பாதுகாப்பைப் பற்றியும் கண்டிப்பாக கவலைப் படவே முடியாது. ஆனால் அரசு பள்ளிகளில் அப்படியில்லை. சம்பளம் மட்டுதான் குறிக்கோள், அதற்கு வஞ்சனையில்லாமல் குழந்தைகளுக்கு பாடம் போன்ற மற்ற விஷயங்களையும் கவனித்து பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும்.
இதில் டென்சன் வரும் தேவையில்லை, பிள்ளைகள் பாதுகாப்புக்கும் பஞ்சமில்லை. வெளிநாடுகளில் இத்தனை பிரைவேட் பள்ளிகளா இருக்கின்றன? அரசு பள்ளிகள் மட்டும்தான். என்னைப் பொறுத்தவரை நம் தமிழக முதல்வர் எதைப் பற்றியும் கவலைப் படாமல், துணிச்சலாக முடிவு எடுக்கக் கூடியவர். அதிரடியாக தனியார் பள்ளிகளே வேண்டாம் என்று அறிவித்து அத்தனையையும் அரசு பள்ளிகளாக்க வேண்டும். நமது நாட்டுக் குழந்தைகள் ஆரோக்கியமாக நலமுடன் இருப்பார்கள். நன்றாகவும் முன்னுக்கு வருவார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டு பீரியடைக் கூட பாடமெடுக்கப் பயன்படுத்திக் கொண்டு, இப்படி பணம் வாங்கிக் கொண்டு தனியாக விளையாட்டுப் பயிற்சி கொடுக்கிறேன் பேர்வழி என்று உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?" நொந்து கொள்கிறார் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சின்னசாமி.
இது போன்ற இளம் உயிரிழ்ப்புக்கள் எத்தனை நடந்தாலும், தனியார் பள்ளி நிர்வாகங்கள திருந்தமாட்டாது என்பதற்கு தமிழகத்தில் தொடரும் பள்ளி மாணவர்களின் உயிரிழப்புக்கள் சான்றாகிறன. ஆதலால் இது விடயத்தில் தீர்மானமானதும், திருப்திகரமானதுமான முடிவினை எடுக்க வேண்டியது அரசு. அதனை அரசுக்கு வலியுறுத்த வேண்டியவர்கள் பெற்றோர்கள். ஆனால் விபரீதம் நடந்த பள்ளியின் முன் விடுமுறை அறிவிக்க நடந்த போராட்டத்துக்குப் பின்னதாக எந்தப் போராட்டத்தையும் பெற்றோர்கள் நடத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இழவு என் வீட்டில் நிகழாதவரைக்கும் எனக்கேதும் கவலையில்லை என்பது போன்ற வாழ்வுக்குப் பழகிவிட்டனரோ தமிழக மக்கள் என்பதாக எண்ணத் தோன்றுகின்றது என நாம் சொன்னால், அருகிருக்கும் நண்பர் வெறுத்துக் கேட்கின்றார், இப்போதுதான் முதல்முறையா..?
அப்படியென்றால் இவ்வாறான இளவயது இழப்புக்களுக்கான முடிவு...?
4தமிழ்மீடியாவுக்கா: எழில்செல்வி மற்றும் வேல்மாறன்
