எமதுபார்வை
Typography

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நேற்று வியாழக்கிழமை (மார்ச் 23, 2017) வழங்கியுள்ளது. 

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்கனவே 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலேயே, மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்று நோக்கும் போது, காணாமல் போனோர் தொடர்பிலான தனிப்பணியம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தவிர்ந்து எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அதிலும், குறித்த பணியகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் இன்னமும் இழுபறி நீடிக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி வழங்கக் கோரியும், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரியும், வழக்கு விசாரணைகள் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் தமிழர் தாயகப் பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக போராட்டங்கள் மூர்க்கம் பெற்றுள்ளன. ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரம்பித்த தொடர் போராட்டங்கள் இன்னமும் தீர்வுகள் இன்றி தொடர்கின்றன. ஆனாலும், அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இலங்கைக்கு கால அவகாசத்தினை சர்வதேசம் வழங்கியிருக்கின்றது.

தொடர் அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழ் மக்கள் தமக்கான நீதியைக் காலம் காலமாகக் கோரி வருகின்றனர். குறிப்பாக, இறுதி மோதல்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை சர்வதேச தலையீட்டுடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில், உள்ளக நீதிப் பொறிமுறைகள் மற்றும் பீடங்கள் மீது தமிழ் மக்கள் ஏற்கனவே நம்பிக்கையை இழந்துள்ள நிலையிலேயே, வெளிநாட்டுத் தலையீட்டினை கோரி வருகின்றனர். ஆனால், அந்தக் கோரிக்கைகளின் பின்னாலுள்ள நியாயப்பாட்டினை உணர்ந்து கொள்வது தொடர்பில் சர்வதேசம் அக்கறை கொள்ளவில்லை.

ஏனெனில், தன்னுடைய பூகோள நலன்கள் சார்ந்து இலங்கையை அணுகும் போக்கினையே சர்வதேச நாடுகள் பல கொண்டிருக்கின்றன. அதனால், இலங்கையின் புதிய அரசாங்கத்தினை பாதுகாத்துக் கொள்வதிலும் அக்கறையோடு இருக்கின்றன. இப்படியான நிலையிலேயே தமிழ் மக்கள் தொடர்பில் ஒருவித பாரமுகமாக நடந்து கொள்கின்றன.

இப்படியான நிலையில், தொடர் போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் வலியும் வடுவும், வெளியவர்களினால் உணர்ந்து கொள்ளப்படுவதில்லை என்கிற நிலையின் போக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், சர்வதேசமும் நடந்து கொண்டுவிட்டதோ என்கிற உணர்நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். அது, நீதிக்கான வழித்தடங்களை மறைத்துவிட்டதோ என்றும் அஞ்சுகிறார்கள்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்