ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் மாஜி பிரதமர் ஆந்தோனியே கட்டரஸ் புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக ஐ.நா இன் பொதுச் செயலாளராக நீடித்த பான் கீ மூன் இனது பதவிக் காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பிரியாவிடை அளித்து விடைபெற்றார்.

2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள தேர்தலை அடுத்து கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபரான ஜோசெஃப் கபிலா பதவி விலகுவார் என அண்மையில் கொங்கோ அரச கட்சிகள் எட்டிய சட்ட வரைவின் பிரகாரம் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக கத்தோலிக்க தேவாலயத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த வருடம் புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் புத்தாண்டை வெகு விமரிசையாகக் கண்கவர் வான வேடிக்கையுடன் உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.

சுமார் 52 வருடங்களாக நீடிக்கும் கொலம்பிய யுத்தத்தில் சிறியளவிலான குற்றங்களில் ஈடுபட்ட சுமார் ஆயிரக் கணக்கான FARC மார்க்ஸிஸ்ட் கொரில்லா போராளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் மன்னிப்புச் சட்டத்துக்கு  புதன்கிழமை அனுமதி வழங்கியிருப்பதாகக் கொலம்பிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மியான்மாரில் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து UNSC இற்கு 23 நோபல் பரிசு வென்றவர்களின் குழுவும் பூகோள தலைவர்கள்  சிலரும் முறைப்பாடு செய்துள்ளனர். மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றைத் தடுக்க அந்நாட்டுத் தலைவரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூ க்யி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த நோபல் பரிசு வென்றவர்கள் குழு ஐ.நா பாதுகாப்புச்  சபைக்கு எழுதியுள்ளது.

முன்னால் பாகிஸ்தான் பிரதமரான காலம் சென்ற பெனாசீர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் படும் நிலையில் பாகிஸ்தானின் தேசிய சபையில் எதிரணியின் தலைவராக அவர் தேர்வாவதற்கான வாய்ப்பு உள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல் பிரச்சார சமயத்திலும் தேர்தல் சமயத்திலும் ரஷ்யாவின் ஹேக்கிங் நடவடிக்கை இடம்பெற்றது எனக் குற்றம்  சாட்டி ரஷ்ய தூதரகத்தைச் சேர்ந்த 35 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவு பிறப்பித்து இருந்ததுடன் ரஷ்யாவின் இரு புலனாய்வு ஏஜன்ஸிக்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தது.

More Articles ...

Most Read