உலகம்
Typography

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பணியாற்றுவது இயலாது என்ற காரணத்தினால் பனாமா நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜான் ஃபீலே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் தனது பதவியை கடந்த டிசம்பர் மாதமே ராஜினாமா செய்து விட்ட போதும் டிரம்ப் மீதான சர்ச்சைகள் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்து வரும் நிலையில் அண்மையில் தான் இத்தகவல் வெளியாகி உள்ளது.

முன்னால் அமெரிக்க கடற்படையில் ஹெலிகாப்டர் வீரரான ஜான் ஃபீலே தனது ராஜினாமா கடிதத்தில் முக்கியமாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'சில கொள்கைகளில் தனக்கு எத்தகைய உடன்பாடும் இல்லாத போதும் பக்கச்சார்பின்றி அமெரிக்க அதிபர் மற்றும் அவரது நிர்வாகத்துக்கு நேர்மையாகப் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் நான் பதவியில் நீடித்தேன். ஆனால் அந்த உறுதிமொழியின் மீது பூரணமாக என்னால் செயலாற்ற முடியவில்லை. இதனால் சுயகௌரவம் கருதி எனது பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை மேற்கொண்டுள்ளேன்.'

டிரம்ப் நிர்வாகத்தின் மீது அதிருப்தி காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்யும் 2 ஆவது அமெரிக்கத் தூதர் ஜான் ஃபீலே ஆவார். முன்னதாக சோமாலியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றி வந்த எலிசபெத் ஷேக்கல்ஃபோர்ட் என்ற பெண் அதிகாரி தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுக்கு இவர் வரைந்த கடிதத்தில் அமெரிக்க நிர்வாகம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கையைக் கைவிட்டு விட்டதால் எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்