உலகம்
Typography

புத்தாண்டுச் செய்தியின் போது வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவருக்கு இன்னொருவர் போட்டியாக அணுவாயுதப் பிரயோகம் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

முதலாவதாக அதிபர் கிம் தனது உரையின் போது அணுவாயுத சோதனைகளை பெரும்பாலும் வடகொரியா முடித்து விட்டதாகவும் தற்போது எம்மிடம் அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் சென்று தாக்கக் கூடிய அணுவாயுதங்கள் இருப்பதாகவும் இவற்றை இயக்கக் கூடிய அதிகாரம் அதாவது சுவிட்ச் தன்னிடம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக டுவிட்டரில் தனது கருத்தை செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு செய்திருந்தார். அதில் அவர் வடகொரிய அதிபரிடம் விபரம் தெரிந்த யாராவது இருந்தால் அவரிடம் கூறுங்கள். என்னிடமும் அணுவாயுதங்களை இயக்குவதற்கான சுவிட்ச் உள்ளது. அது அவருடையதை விடப் பெரியதும் அதிக சக்தி வாய்ந்ததும் ஆகும். மேலும் வேலை செய்யும் நிலையிலும் அது உள்ளது என்றுள்ளார்.

இதேவேளை கிம் தனது புத்தாண்டுச் செய்தியின் போது தென்கொரியாவில் பெப்ரவரி 9 தொடக்கம் 25 வரை நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தமது அணி பங்கேற்கும் எனவும் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தம்மிடம் உள்ளதாகவும் கூட கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தென்கொரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அனுப்பவுள்ளதாகவும் கிம் குறிப்பிட்டார். இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றால் நாம் அதற்குத் தயாராக இருப்போம் என தென்கொரியா தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரியாவின் இந்த அதிரடி அறிவிப்புக் காரணமாக அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்குக் கூட அந்நாடு விருப்பத்துடன் உள்ளதாகவும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS