உலகம்
Typography

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் றோஹிங்கியா மக்கள் மீது அந்நாட்டு அரசாலும் இராணுவத்தாலும் இழைக்கப் பட்டது இனவழிப்பு என அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மியான்மாரின் சிறுபான்மை இனத்தவர்களான றோஹிங்கியாக்கள் ராக்கைன் மாநிலத்தில் அதிகபட்சமாக 10 இலட்சம் பேர் வரை வாழ்கின்றனர். இவர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்காத மியான்மார் அரசு அவர்கள் மீது கடந்த சில வருடங்களாக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு இனவழிப்பை மேற்கொண்டது. இதனால் இலட்சக் கணக்கான றோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்துக்கு அகதியாகச் சென்றனர். மேலும் தமது மக்களின் உரிமைக்காக றோஹிங்கியாவின் ஒரு பகுதியினர் ஆயுதப் போராட்டம் நடத்தியதால் நிலமை இன்னமும் மோசமானது.

தற்போது 6 இலட்சம் றோஹிங்கியா அகதிகள் வரை வங்கதேசத்தில் அகதிகளாக உள்ளனர். இவர்களை மீளப்பெற மியான்மாருக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அண்மையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. மேலும் அங்கு இடம்பெறும் இனவழிப்புக்கு எதிராக சர்வதேசம், ஐ.நா முதற்கொண்டு அண்மையில் பாப்பரசர் பிரான்சிஸ் வரை மியான்மார் அரசுக்கு அழுத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் ராக்கைனில் இடம்பெறுவது தீவிரவாத அழிப்பு என மியான்மார் சொல்வதை ஏற்க முடியாது என்றும் றோஹிங்கியா அகதிகளுக்கு சேர வேண்டிய உரிமைகளையும் சட்ட அங்கீகாரத்தையும் உடனே வழங்க மியான்மார் அரச தலைவர் ஆங் சான் சூ க்யி முன்வர வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்