உலகம்
Typography

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக் குற்றம் சாட்டி சுமார் 20 000 பொது மக்கள் நேற்று சனிக்கிழமை தலைநகர் டெல் அவிவ் இல் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நெதன்யாஹுவுக்கு எதிராகப் பலத்த கோஷம் எழுப்பிய இவர்கள் அவரைக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்..

பெஞ்சமின் நெதன்யாஹு மீது முக்கியமாக சமீபத்தில் தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து அவர் பரிசுப் பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமரிசிப்பதற்காக இஸ்ரேலின் மிகவும் பிரபலமான ஊடகமான Yedioth Ahronoth என்ற தினசரிப் பத்திரிகை ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இந்நிலையில் நெதன்யாஹுவின் இந்தச் செயல் நாட்டுக்கு அவமானம் என்றும் அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் பொது மக்கள் குரல் எழுப்பியுள்ளனர். பொது மக்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் இசாக் ஹெர்ஷொக் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலில் நீதியை நிலை நாட்டவும் ஊழலை ஒழிக்கவும் தான் போராட்டம் நடக்கிறது எனத் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தும் உள்ளார். மேலும் போலிஸ் விசாரணையைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் பாராளுமன்றம் திங்கட்கிழமை அமர்வுகளில் நெதன்யாஹுவுக்குச் சார்பாக செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஸ்ரேலின் தலைவராக 4 ஆவது முறையும் பெஞ்சமின் நெதன்யாஹு பிரதமர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்