உலகம்
Typography

அண்மையில் 3 நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை ஒபாமா மேற்கொண்டிருந்தார். முதற்கட்டமாக சீனாவுக்குச் சென்றிருந்த அவர் பின்னர் வெள்ளிக்கிழமை இந்தியாவை வந்தடைந்தார். மேலும் நேற்று டெல்லியில் ஒபாமா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் கிட்டத்தட்ட 300 இளம் தலைவர்கள், புரட்சியாளர்கள், சமூக அக்கறையாளர்களையும் சந்தித்தார். ஒபாமா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த சந்திப்பில் இந்தியா சாதி வாரியாகவும், சமூக ரீதியாகவும் பிளவு படக்கூடாது என்பதை ஒபாமா வலியுறுத்தினார்.

மேலும் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கையர்கள் போன்றவர்களின் சமூகத்துக்கும் குரல் எழுப்பும் அவசியத்தையும் ஒபாமா சுட்டிக் காட்டினார். முன்னதாக ஒபாமா அதிபராக இருந்த போது 2015 ஜனவரியில் அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போது இந்தியாவில் சிறுபான்மை மதத்தவர்களுக்கான மனித உரிமைகளை பிரதமர் மோடியிடம் வலியுறுத்திப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனது துணைவியார் மிஷேல் ஒபாமாவுடன் ஒபாமா தனது அறக்கட்டளை இந்தியாவில் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிக் கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் சிறப்புரைகள் ஆற்றியிருந்த ஒபாமா பின்னர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசியிருந்தார். இதற்குப் பின்னர் இந்தியாவில் தஞ்சமைடைந்திருக்கும் திபேத்தின் ஆன்மிகத் தலைவரும் புத்த மதத்தின் முக்கிய துறவியுமான தலாய் லாமாவையும் ஒபாமா சந்தித்துப் பேசியிருந்தார். நியூடெல்லி ஹோட்டலில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்த இந்த இரு தலைவர்களும் சந்தித்தனர். தனது முதுமை காரணமாக அமெரிக்கா செல்ல இயலாத காரணத்தினால் தான் தலாய் லாமா டெல்லியில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிய வருகின்றது.

இந்த சந்திப்பில் ஒபாமா இன்னும் இளமையானவர் என்றும் அவரது அடுத்த தலைமுறைகளாவது திபேத்தின் வளமான வருங்காலத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் இது உடனே நிறைவு பெற வேண்டும் என்றும் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு ஒபாமா பிரான்ஸுக்கு செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்