உலகம்
Typography

மத்திய கிழக்கில் வடக்கு ஈரான் ஈராக் எல்லைப் பகுதியில் 7.3 ரிக்டரில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 348 பேருக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் ஆயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் 70 000 பொது மக்களுக்கு தங்கும் இடம் தேவைப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஈரானின் மேற்கே உள்ள கெர்மன்ஷாவில் அதிகமானவர்கள் பலியானதுடன் அங்கு 5660 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கம் சில இடங்களில் ஒரு நிமிடத்துக்கும் மேலாக நீடித்ததாகவும் இதில் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஈரான் ஈராக் வடக்கு எல்லையை மையமாகக் கொண்டு தாக்கிய இந்த நிலநடுக்கம் மத்திய கிழக்கில் துருக்கி, குவைத் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை இரவு வட அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவை 6.5 ரிக்டர் அளவு கொண்ட வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் அறிவித்த போதும் நில அதிர்வு காரணமாக பல கட்டடங்கள் சேதம் அடைந்ததும் சிலர் காயம் அடைந்ததும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

மேலும் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் மின் துண்டிக்கப் பட்டும் தகவல் தொடர்பு தடைப்பட்டும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்