Wednesday, May 22nd

Last update10:22:12 PM

இரண்டாவது விவாதத்தில் மீண்டும் எழுச்சி பெற்றார் ஒபாமா : ரூம்னிக்கு நெருக்கடி

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கான இரண்டாவது நேரடி தொலைக்காட்சி விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

சி.என்.என் ஊடகம் ஒழுங்கு செய்திருந்த இவ்விவாதத்தில், பொதுமக்களின் நேரடி கேள்விகளுக்கு, தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பதில் அளிப்பதாக ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது.

முதல் விவாதத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரூம்னியின் திறமையான விவாதத்தால், ஒபாமா கிட்டத்தட்ட தோற்றுவிட்டதாகவே கருதப்பட்டது. இதை அடுத்து அவர் இரண்டாவது விவாதத்தில் தனது வாதங்களை மிக உறுதியாக வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.

ஒபாமாவின் ஆதரவாளர்களும் இதையே எதிர்பார்த்திருந்தனர். இதற்காக பல மணிநேரம் செலவழித்து கடுமையான பயிற்சிகளையும் ஒபாமா மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய விவாதம் தொடங்கியது. மிட் ரூம்னி தனது வழமையான பேச்சுத்திறனால் பேசத்தொடங்கினார். ஆனால் ஒபாமா இம்முறை விழித்துக்கொண்டதால்,  தனது விவாதத்தின் போக்கை மாற்றினார். முடிந்தளவு ரூம்னியின் அனைத்து திட்டங்களையும் நிராகரித்து, அதன் ஆபத்தான விளைவுகள் பற்று எடுத்துரைத்தார். தனது உறுதியான கொள்கைகளை  நம்பிக்கையோடு முன்வைத்தார்.


சற்று கோபமாகவே ரூம்னியின் விவாதங்களை மறுத்துரைத்தார். முடிவு, ஒபாமாவின் ஆதரவாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவே இருக்கிறது. நேற்றைய விவாதம், ஒபாமா மறுபடியும் தன்னை நிரூபிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், ஒபாமாவின் எழுச்சி, ரூம்னிக்கு நெருக்கடி கொடுத்திருப்பதாகவும், பல்வேறு ஊடகங்கள் விமரசனம் வெளியிட்டுள்ளன.

இதனால் அக்.22ம் திகதி நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான விவாதம் இன்னமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பிய பொதுமக்களில் பலர் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என தீர்மானிக்காதவர்கள் (Undecide Voters). ஒபாமாவும் சரி, மிட் ரூம்னியும் சரி, தேர்தலுக்கு முன்பாக தம் பக்கம் ஈர்த்துவிட துடிப்பது இந்த Undecide வாக்காளர்களை தான்.

தேசிய அளவில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றனவோ அவரே வெற்றியாளர் என அமெரிக்க தேர்தல் முறைமை கருதுவதில்லை. ஒவ்வொரு தனித்தனி மாநிலங்களிலும் யார் முன்னில பெறுகிறார்களோ, அம்மாநிலங்களின் ஆதரவு எண்ணிக்கை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இம்முறையில் பார்த்தால் முட் ரூம்னி இன்னமும் 9 மாநிலங்களில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

நேற்றைய விவாதத்தில் சில சுவாரஷ்யமான தருணங்கள்

விவாதம் முடிவடையும் போது, 'நாங்கள் இப்படித்தான் அமெரிக்காவில் வாழவேண்டும் என்று அவசியமில்லை' என கூறி முடித்தார் மிட் ரூம்னி.

இடையில் ஒரு முறை ரும்னியின் விவாதத்தை ஒபாமா குறுக்கீடு செய்ய முயன்ற போது, 'உங்களுக்குரிய நேரம் வரும். நான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன்' என சட்டென கூறி ஒபாமாவின் முகத்தை முறித்தார்.

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில், லிபியாவின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அமெரிக்க தூதுவர் உட்பட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு ஒபாமா அரசு அமைதியாக இருப்பதாக கடும் விமர்சனத்தை முன்வைத்தார் ரூம்னி.

அதற்கு பதில் அளித்த ஒபாமா, 'எமது நான்கு அமெரிக்கர்களின் உயிரை நாம் பறிகொடுத்த நிலையில், ரூம்னி சொல்வது போல் கோபப்பட்டால், அது அரசியலின் ஆபத்தான விளையாட்டை ஆரம்பித்துவிடும். தவறான பாதைக்கு கொண்டு சென்றுவிடும். எமது தரப்பில் எவரேனும், நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களை அரசியல் ஆக்கிப்பேசினார்களா? இல்லை. ஆனால் நீங்கள் அப்படி பேசினீர்கள் என அளித்த பதில் ஆதரவாளர்களிடையே வரவேற்பை பெற்றது.

எனினும், லிபிய தாக்குதலுக்கு உடனடியாக இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தனது  கண்டனத்தை ஒபாமா விடுத்திருக்கவில்லை என ரூம்னி கூறினார். இதை ஒபாமா மறுத்து பேசியதுடன், மறுநாளே இதை தீவிரவாத தாக்குதலாக விழித்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் ரூம்னி நம்பவில்லை. சட்டென அங்கிருந்து நிகழ்ச்சியை வழிநடத்தி கொண்டிருந்த செய்தியாளர் Candy Crowley  ரூம்னியின் கருத்தை நிராகரித்தார். 'தாக்குதல் பற்றி முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை கிடைக்க முன்னர், தாக்குதலுக்கு மறுநாளே, இதை 'தீவிரவாத' தாக்குதலாக ஒபாமா வர்ணித்திருந்ததை நினைவுபடுத்தினார். 'அதை மீண்டும் ஒரு முறை உரத்து சொல்லுங்கள்' என ஒபாமா கிராவ்லியிடம் தெரிவித்தது, கரகோசத்தை அள்ளியது.

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus