உலகம்
Typography

உலகப் புகழ்பெற்ற சோசலிசப் போராளியும் மார்க்சியவாதியுமான ஆர்ஜெண்டினாவை பிறப்பிடமாகக் கொண்ட கியூபாவின் விடுதலை வீரர் சே குவேராவின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கியூபாவில் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது.

சேகுவேராவின் உடல் அடக்கம் செய்யப் பட்டு அவரது சிலை வைக்கப் பட்டிருக்கும் சாண்டா கிளாராவில் கியூப அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தலைமையில் ஒன்று கூடிய ஆயிரக் கணக்கான மக்கள் சே குவேராவுக்கு அஞ்சலி செலுத்தினர். பல பள்ளிக் குழந்தைகள் பங்கு கொண்ட இந்த நிகழ்வு கியூபாவின் தொலைக் காட்சிகளில் நேரடி ஒளிபரப்புச் செய்யப் பட்டது.

இதேவேளை அயர்லாந்தில் இன்று சேகுவேராவின் 50 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு டப்ளினைச் சேர்ந்த பிரபல புரட்சி ஓவியர் ஜிம் ஃபிட்ஸ்பாட்ரிக் என்பவரால் வரையப் பட்ட சே இன் சித்திரம் அடங்கிய முத்திரை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு அயர்லாந்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது குறித்து அமெரிக்க கியூப பத்திரிகையாளரான நினொஸ்கா பெரெஸ் கருத்துத் தெரிவிக்கையில் சே குவேரா ஒரு மோசமான கொலையாளி என்றே பெரும்பாலான பொது மக்கள் கருதுவதாகவும் அவர் கௌரவிக்கத் தக்கவர் அல்ல என்றும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்புக்கான ஐரிஸ் திணைக்களம் குறித்த முத்திரை அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1959 இல் கியூபாவின் சர்வாதிகாரி பாட்டிஸ்ட்டாவைப் பதவியில் இருந்து நீக்கிய கியூபப் புரட்சியில் சேகுவேரா முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read