உலகம்
Typography

வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகள் காரணமாகக் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சனிக்கிழமை டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவுடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் பயனற்றுப் போய் விட்டதாகவும் வடகொரியாவுக்கு எதிராக இனி ஒன்றேயொன்று தான் சரிப்பட்டு வரும் எனவும் சூசகமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த சூசகமான கருத்து வடகொரியா மீதான இராணுவ நடவடிக்கையைத் தான் குறிக்கின்றது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் தனது டுவீட்டில் மேலும் தெரிவிக்கையில் அமெரிக்க அதிபர்களும் நிர்வாகங்களும் கடந்த 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசி வருவதாகவும் உடன்படிக்கைகள் மேற்கொண்டதாகவும் இதற்கு பெரிய தொகைகள் செலவிடப் பட்டதாகவும் ஆனால் இவை அனைத்தும் உடனுக்குடன் மீறப்பட்டு வந்துள்ளது என்றும் கூறியிருந்தார். இவ்வருடம் வடகொரியா மேற்கொண்ட ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணைப் பரிசோதனை என்பன உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை விளைவித்திருந்தன.

இந்நிலையில் வடகொரியத்  தலைவர் கிம் ஜொங் உன் தனது சகோதரியான கிம் யோ ஜொங் இனை ஆளும் கட்சியின் அதியுயர்வான பதவிக்கு நியமித்துள்ளதாகவும் தமது தேசத்தின் அணுவாயுத திட்டங்களை நேரடியாகப் பாராட்டியதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தலிபான்கள் உட்பட தீவிரவாத அமைப்புக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு ஆண்டு தோறும் கோடிக் கணக்கான ரூபாய்க்கு அமெரிக்கா நிதியுதவி செய்து வருவதும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தலைமையில் இம்மாத இறுதியில் அமெரிக்க அமைச்சர்கள் குழு ஒன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளது. இக்குழுவைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவ அமைச்சர் ஜிம் மாட்டிஸ் உம் பாகிஸ்தான் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read