உலகம்
Typography

 

மத்திய அமெரிக்க நாடுகளை கடந்த சில தினங்களாகத் தாக்கி வரும் நேட் என்ற ஹரிக்கேன் புயலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் கட்டடங்களும் வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன. விமான சேவை, ரயில் சேவை உட்பட போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டு நெடுஞ்சாலைகள் மூடப் பட்டிருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்காவின் லூசியானா மற்றும் அலபாமாவை நெருங்கவுள்ள நேட் புயல் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி படைத்தது என லூசியானா கவர்னர் ஜோன் பெல் எட்வர்ட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொது மக்கள் இப்புயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள தேசிய ஹரிக்கேன் நிலையமான NHC உம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை மையமாகக் கொண்டு 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. 2010 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியதால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்ட ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதிக்கு அண்மையில் தான் இந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டதாகவோ அல்லது பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read